ஈசாக்கின் விளக்கம்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
முந்தைய பாகம்: பெயெர்செபாவின் விளக்கம்
ஈசாக்கு பிறக்கும் முன்பே கர்த்தர் ஆபிரகாமிடம், "நான் ஈசாக்குடன் உடன்படிக்கை செய்வேன்" என்று சொன்னதை தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம் - 21.வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்றார். 22.தேவன் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு, அவர் அவனைவிட்டு எழுந்தருளினார் - ஆதியாகமம் 17:21-22
ஆனால் கர்த்தர் ஈசாக்குடன் உடன்படிக்கை செய்ததாக யாரும் சொல்லி கேள்விப்பட்டதில்லையே, இதை எப்படி அறிந்துக் கொள்வது? மேலும் ஈசாக்கின் காலத்திற்கு பின்பு கர்த்தர் மோசேயிடமும், தான் ஈசாக்குடன் உடன்படிக்கை செய்திருந்ததாக சொன்னதையும் பார்க்கிறோம் - 40.அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம்பண்ணி நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறதுமன்றி, 41.அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்தபடியினால், நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து, அவர்களுடைய சத்துருக்களின் தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விட்டதையும் அறிக்கையிட்டு, விருத்தசேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால், 42.நான் யாக்கோபோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஈசாக்கோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஆபிரகாமோடே பண்ணின என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன் - லேவியராகமம் 26:40-42
கர்த்தர் நோவாவுடன் செய்த உடன்படிக்கை எல்லோரும் அறிந்த விஷயம், நன்றாய் ஆராய்ந்து பார்த்தால், கர்த்தர் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கையையும், யாகோப்புடன் செய்த உடன்படிக்கையையும் வேதாகமத்தில் பார்க்க முடியும், ஆனால் கர்த்தர் ஈசாக்குடன் செய்த உடன்படிக்கையை கண்டு பிடிப்பது எப்படி? ஈசாக்கின் நாட்களில் உண்டான பஞ்சத்தின் போது, கர்த்தர் ஈசாக்கிடம், இந்தத் தேசத்திலே[கேராரூரிலே] வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன் என்று சொன்னார், இதை உடன்படிக்கை என்று எடுத்துக் கொள்ள முடியுமா என்றால் சந்தேகம் தான்? - 1.ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான். 2.கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. 3.இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன். 4.ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால், 5.நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார். 6.ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான். 7.அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள்நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான். 8.அவன் அங்கே நெடுநாள் தங்கியிருக்கையில், பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே விளையாடிக்கொண்டிருக்கிறதைக் கண்டான். 9.அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து: அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்னை ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய் என்றான். அதற்கு ஈசாக்கு: அவள் நிமித்தம் நான் சாகாதபடிக்கு, இப்படிச் சொன்னேன் என்றான். 10.அதற்கு அபிமெலேக்கு: எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் பழிசுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான். 11.பின்பு, அபிமெலேக்கு: இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜனங்களும் அறியச் சொன்னான். 12.ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்; 13.அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான் - ஆதியாகமம் 26:1-13
ஆனால் கேராரூரிலே தங்கியிருந்த ஈசாக்கு, ஏசேக்கு, சித்னா, மற்றும் ரெகொபோத் என்கிற மூன்று துரவுகளை வெட்டினார் - 14.அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமைகொண்டு, 15.அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள். 16.அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான். 17.அப்பொழுது ஈசாக்கு அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்து, 18.தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான். 19.ஈசாக்குடைய வேலைக்காரர் பள்ளத்தாக்கிலே வெட்டி, அங்கே சுரக்கும் நீரூற்றைக் கண்டார்கள். 20.கேராரூர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம்பண்ணினார்கள்; அவர்கள் தன்னோடே வாக்குவாதம்பண்ணினபடியால், அந்தத் துரவுக்கு ஏசேக்கு என்று பேரிட்டான். 21.வேறொரு துரவை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம்பண்ணினார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பேரிட்டான். 22.பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்துபோய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான் - ஆதியாகமம் 26:14-22
ஆனால் ஈசாக்கு கேராரூரின் பள்ளத்தாக்கிலே தான் வெட்டின மூன்று துரவுகளை சுதந்தரித்துக் கொள்ளமுடியாமல், அங்கிருந்து துரத்தி விடப்பட்டராய் ஒரு கலக்கத்தோடு பெயெர்செபாவுக்குப் வந்த ஈசாக்கிடம் கர்த்தர் பயப்படாதே என்று சொன்னதை பார்க்கிறோம், இதை உடன்படிக்கையாக எடுத்துக் கொள்ள முடியுமா என்றால் சந்தேகம் தான்? - 23.அங்கேயிருந்து பெயெர்செபாவுக்குப் போனான். 24.அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார் - ஆதியாகமம் 26:23-24
இப்படி ஈசாக்கு சுதந்தரிக்க விரும்பின மூன்று துரவுகள், நாம் காணக்கூடாத அதரிசனமான பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற திரியேக தேவனையே குறிக்கிறது, இதை அப்போஸ்தலனாகிய யோவான் சொல்லும் போது அதரிசனமான தேவன் மூன்று நபர்களாக இருப்பதாகவும், அதே சமயத்தில் அவர்கள் மூன்று பேரும் பிரிக்க முடியாத ஒரே தேவனாக[பிதாவாக] இருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார் - பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் - I யோவான் 5:7
இப்படி ஏமாற்றத்துடன் வந்த ஈசாக்குக்கு, தேவன் பெயெர்செபாவிலே ஒரு துரவை கட்டளையிட்டார், அது நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது - 25.அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள். 26.அபிமெலேக்கும் அவன் சிநேகிதனாகிய அகுசாத்தும் அவன் சேனாபதியாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்துக்கு வந்தார்கள். 27.அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி: ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டீர்களே என்றான். 28.அதற்கு அவர்கள்: நிச்சயமாய் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம். 29.நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம்; நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள். 30.அவன் அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்துக் குடித்தார்கள். 31.அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக்கொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள். 32.அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள். 33.அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயெர்செபா என்னப்படுகிறது - ஆதியாகமம் 26:25-33
ஆனால் பெயெர்செபாவின் துரவிலே, தண்ணீர் இன்னும் வராத சூழ்நிலையில், ஈசாக்குடன் அபிமெலேக்கு, அகுசாத், பிகோல் என்கிற மூன்று பேர் உடன்படிக்கை பண்ணினார்கள், அது நம் திரியேக தேவனாகிய இயேசு கிறிஸ்துவே, பேதுரு யாக்கோபு யோவான் கர்த்தரின் திருத்துவதை[மறுரூப மகிமையை] கண்ட பொழுது, எப்படி கர்த்தருடன் மோசேயும் எலியாவும் இருக்கிறார்கள் என்று எண்ணினார்களோ, அப்படியே ஈசாக்கும் தன்னிடம் வந்த மூன்று பேரும் தன்னை துரத்திவிட்டவர்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தார், ஆனால் வந்த அவர்கள் செய்த உடன்படிக்கைக்கு பின்பே பெயெர்செபாவின் துரவிலே தண்ணீர் உண்டானது.
இப்படி ஜீவத்தண்ணீராம் இயேசு கிறிஸ்து பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்கிற மூன்று பேரிடத்திலிருந்து உண்டாவனராகவும், அவர்களின் தற்சுரூபமாகவும் இருக்கிறார். இதை அப்போஸ்தலனாகிய யோவான் விவரிக்கும் பொழுது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவன் ஜலம், இரத்தம், ஆவியாக கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் - பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது - I யோவான் 5:8
அடுத்த பாகம்: யாக்கோபின் விளக்கம்