இயேசு கிறிஸ்துவின் திரித்துவம்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
வேதாகமத்தில் திருத்துவத்தை குறித்து முதன் முதலில் பேசியது யார் என்றால், அது இயேசு கிறிஸ்து தான், அதை தான் இந்த வசனத்தில் பார்க்கிறோம் - 18.அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 19.ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20.நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென் - மத்தேயு 28:18-20
அதனால்தான் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே திரியேக தேவனாகிய பிதா, வார்த்தை, மற்றும் பரிசுத்த ஆவினவரை பற்றிய ஞானம் உண்டு, யூத மதத்தை பின்பற்றும் ஒரு நபருக்கு திருத்துவத்தை குறித்து ஒன்றும் தெரியாது, இதை புரிந்துக் கொண்டார் என்றால் அவர் யூதனாக இருக்கவும் முடியாது, அவர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு கிறிஸ்தவனாக மாறிவிடுவார், ஆனால் இயேசு கிறிஸ்துவை பற்றிய பொதுவான அபிப்பிராயம் என்னவென்றால், அவர் திரியேக தேவனில் இரண்டாவது நபர் என்பது தான், ஆனால் இந்த அபிப்பிராயம் பின் வரும் கேள்விகளை எழுப்பும் என்பதில் சந்தேகம் இல்லை.
திருத்துவதில் இயேசு கிறிஸ்து இரண்டாவது நபர் என்றால், முதல் நபராகிய பிதாவும் மூன்றாவது நபராகிய பரிசுத்த ஆவியானவரும் இரண்டாவது நபரை சிலுவைக்கு ஒப்பு கொடுத்தது போல் அல்லவா உள்ளது, இதை எப்படி ஏற்றுக்கொள்வது?
மேலும், இயேசு கிறிஸ்து தான் பூமியில் இருந்த பொழுது பரலோகத்திலும் இருந்ததாக கூறியுள்ளாரே, அப்படி என்றால் நாம் இன்னும் இயேசு கிறிஸ்துவை குறித்து அறிந்து கொள்ள வேண்டிய காரியங்கள் உண்டு என்பதில் சந்தேகம் இல்லை - பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை - யோவான் 3:13
திருத்துவதில் இயேசு கிறிஸ்து இரண்டாவது நபர் என்றால், அவரை வார்த்தையின் தற்சுரூபமும் என்று தானே சொல்ல வேண்டும், ஆனால் வேதாகமம் அவரை தேவனுடைய தற்சுரூபமும் என்று அல்லவா சொல்லுகிறது, தேவனுடைய தற்சுரூபமாக இருக்கிறார் என்றால், வார்த்தையானவராக மாத்திரம் இல்லாமல் பிதாவையும், பரிசுத்த ஆவியானவரையும் உடையவராக இருக்கவேண்டும் அல்லவா? - அவர்(இயேசு கிறிஸ்து) அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர் - கொலோசெயர் 1:15
திருத்துவதில் இயேசு கிறிஸ்து இரண்டாவது நபர் என்றால், இயேசு கிறிஸ்துவை முதற்பேறானவர் என்று சொல்லும் வசனங்களை நாம் எப்படி எடுத்து கொள்ளுவது? மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார் - எபிரெயர் 1:6
திருத்துவதில் இயேசு கிறிஸ்து இரண்டாவது நபர் என்றால், நம்மை பரிசுத்தஞ்செய்கிற இயேசு கிறிஸ்து, தேவனாலே உண்டாக்கப்பட்டவர் என்று சொல்லும் இந்த வசனங்களை எப்படி எடுத்துக் கொள்வது - பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள் - எபிரெயர் 2:11a
இதற்கான பதில் வேதாகமம் முழுவதும் பல தீர்க்கதரிசிகளால் விளக்கி கூறப்பட்டுள்ளது, இவைகளை நாம் அறிந்து கொண்டால் நாம் இன்னும் கர்த்தரை கிட்டி சேருவோம் என்பதில் ஐயம் இல்லை.
அப்போஸ்தலனாகிய யோவானின் விளக்கம்
இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்த அப்போஸ்தலனாகிய யோவான், பரிசுத்த ஆவியின் ஏவுதலினால் பரலோகத்தின் ரகசியங்களை குறித்து சொல்லும் பொழுது, அதரிசனமான தேவன் பரலோகத்தில் பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்ற மூன்று நபர்களாக இருப்பதாகவும், அதே சமயத்தில் அவர்கள் மூன்று பேரும் பிரிக்க முடியாத ஒரே தேவனாக(பிதாவாக) இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் - பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் - I யோவான் 5:7
குமாரனை குறித்து சொல்லும் பொழுதோ, பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியாகிய திரியேக தேவன் இரத்தம், ஜலம், ஆவியாக ஒரே நபராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் - பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது - I யோவான் 5:8
எப்படியெனில், இயேசு கிறிஸ்து வார்த்தையானவராக மாத்திரம் அல்லாமல்[ஜலத்தினாலே மாத்திரமல்ல], பிதாவாகவும் வந்தவர்[இரத்தத்தினாலும் வந்தவர்], அது மாத்திரம் இல்லாமல், சத்தியஆவியானவரும் அவருக்குள் வாசம் செய்தார் என்று எழுதியுள்ளார் - 5.இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? 6.இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர் - I யோவான் 5:5-6
மேலும் யோவான், இது இயேசு கிறிஸ்துவை குறித்து பரலோகத்தின் தேவன் கொடுத்த சாட்சி என்றும், இதனை புரிந்துக்கொண்டு, நம் இருதயத்திற்குள் வைத்துக் கொள்ளவேண்டும் என்றும் எழுதியுள்ளார் - 9.நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. 10.தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான். 11.தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். 12.குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். 13.உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன் - I யோவான் 5:9-13
எப்படியெனில் திருத்துவத்தில் இரண்டாவது நபராகிய வார்த்தையானவர் தன் குமாரனை அனுப்பிய பொழுது(அந்த வார்த்தை மாம்சமாகி - யோவான் 1:14), திருத்துவத்தில் முதல் நபராகிய பிதாவினுடைய குமாரனும் (என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதா - யோவான் 14:10), பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் (கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார் - லூக்கா 4:18) இயேசு கிறிஸ்துவுக்குள் கிருபையும் சத்தியமுமாக குடியிருந்தார்கள் - அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது - யோவான் 1:14
அதனால் தான், பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசி, இயேசு கிறிஸ்துவை தேவர்கள் என்றும், உன்னதமானவரின் மக்கள்(குமாரர்கள்) என்றும் பன்மையில் குறிப்பிட்டுள்ளார் - 6.நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7.ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள் - சங்கீதம் 82:6-7
அப்போஸ்தலனாகிய பேதுருவின் விளக்கம்
அப்போஸ்தலனாகிய பேதுரு இயேசு கிறிஸ்துவின் மறுரூப மகிமையை தரிசித்தவர் என்பதை வேதாகமத்தில் பார்க்கிறோம் - 1.ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய், 2.அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. 3.அப்பொழுது மோசேயும், எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். 4.அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். 5.அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. 6.சீஷர்கள் அதைக் கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள். 7.அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாதேயுங்கள் என்றார். 8.அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்க்கையில் இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை - மத்தேயு 17:1-8
இப்படி இயேசு கிறிஸ்துவின் மறுரூப மகிமையை கண்ட பேதுரு, "நாம் இங்கே இருக்கிறது நல்லது" என்று சொன்னதற்கு காரணம் மோசேயையும், எலியாவையும் காணப்பட்டதினாலேயா? அப்படியென்றால் மோசேயும், எலியாவும் கர்த்தரை காட்டிலும் விசேஷித்தவர்கள் என்பது போலாகி விடுமே? அது தவறாச்சே! அப்படியென்றால் மோசேயும், எலியாவுமாக காணப்பட்டது யார்? அது இயேசு கிறிஸ்துவுக்குள் வாசம் செய்த பிதாவின் ஆவியானவரும், பரிசுத்த ஆவியானவருமே! அதுவே கர்த்தரின் மறுரூப மகிமை!
இதை புரிந்து கொண்ட பேதுரு, மோசேயையும் எலியாவையும் கண்டோம் என்று சொல்லாமல், இயேசு கிறிஸ்துவின் மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டோம் என்றே சாட்சி கொடுத்திருக்கிறார் - 16.நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். 17.இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, 18.அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம் - II பேதுரு 1:16-18
இயேசு கிறிஸ்துவின் மறுரூப தரிசினத்தில், மோசே என்று உவமையாக சொல்லப்பட்டது பிதாவும், எலியா என்று உவமையாக சொல்லப்பட்டது பரிசுத்த ஆவியானவருமே, இயேசு கிறிஸ்துவும் பிதாவாகிய தேவனை ஜனங்கள் மோசே என்று தவறாக அர்த்தம் கொள்ளுகிறார்கள் என்று சொல்லியிருந்தார் - இயேசு அவர்களை நோக்கி: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் - யோவான் 6:32
மற்றோரு இடத்தில் அப்போஸ்தலனாகிய பேதுரு, திரியேக தேவனில் வார்த்தையானவர் இயேசு கிறிஸ்துவாக வெளிப்பட்டார், அதே சமயத்தில் அவர் பரிசுத்த ஆவியினாலும் பிதாவின் வல்லமையினாலும் நிரப்பப்பட்டவராக இருந்தார் என்றும் கூறியுள்ளார் - நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார் - அப்போஸ்தலர் 10:38
ஏன் இந்த உண்மை மிகவும் முக்கியமானது?
ஒருமுறை, பிசாசுகள் பிடித்த மனுஷனை இயேசு குணமாக்கி, "தேவன்" உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி அனுப்ப, அவனோ "இயேசு" என்னை குணமாக்கினார் என்று எல்லோருக்கும் அறிவித்தான் என்று வேதாகமம் சொல்லுகிறது - 38.பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்பட உத்தரவு கேட்டான். 39.இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான் - லூக்கா 8:26-39
அப்பயென்றால், அவன் இயேசுவின் கட்டளையை மீறினானா? இல்லவே இல்லை! மாறாக, அவன் இயேசுவே தேவன் என்று அறிக்கையிட்டான் என்பது தான் உண்மை, ஏனென்றால், அவனுடைய இருதயத்தில் இயேசு மாத்திரமே தெய்வமாக இருந்தார், ஒருவேளை அவன் எல்லோரிடமும் போய் தேவன் என்னை குணமாக்கினார் என்று அறிவித்திருந்தால், அவனுடைய இருதயத்தில் இயேசு தெய்வமாய் இருக்கவில்லை என்பது தான் உண்மை.
எப்படியாக கர்த்தர், பிசாசுகள் பிடியிலிருந்து சுகம் பெற்ற மனுஷனிடம் "தேவன்" உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி அனுப்பினோரா, அது போலவே, இயேசு கிறிஸ்து தன்னுடைய சீஷர்களிடம் "பிதா குமாரன் பரிசுத்த ஆவியின்" நாமத்திலே ஞானஸ்நானம் கொடுக்க கட்டளையிட்டார் - 19.ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20.நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்; இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென் - மத்தேயு 28:19-20
ஆனால் கர்த்தரின் மறுரூப மகிமையை கண்ட பேதுரு, இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுத்து, எனக்காகவும் உங்களுக்காகவும் இயேசு கிறிஸ்துவானவர் வாரினால் அடிக்கப்பட்ட பொழுதும், அவருடைய முகத்தில் துப்பின பொழுதும், சிலுவையில் ஆணிகளால் அறையப்பட்ட பொழுதும், பிதா, வார்த்தை, மற்றும் பரிசுத்த ஆவியாகிய மூன்று பேரும் நமக்காக பாடுப் பட்டார்கள் என்பதை உலகுக்கு உணர்த்தினான் - 38.பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். 39.வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; 40.இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான் - அப்போஸ்தலர் 2:38-40
அதனால் தான் வேதாகமத்தில், ஒரு இடத்தில கூட "பிதா குமாரன் பரிசுத்த ஆவியின்" நாமத்திலே ஞானஸ்நானம் கொடுத்ததை பார்க்க முடியாது - 47.அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்தஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, 48.கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான் - அப்போஸ்தலர் 10:47-48a
அப்போஸ்தலனாகிய பவுலும், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும் என்று எழுதியுள்ளார், ஒருவேளை "பிதா குமாரன் பரிசுத்த ஆவியின்" நாமத்திலே ஞானஸ்நானம் கொடுப்போம் என்றால், நாம் கர்த்தரை முழுவதும் அறியாதவர்களாகவும், பிதாவும் பரிசுத்த ஆவியானவரும் நமக்காக பாடுபடவில்லை என்பதை அறிக்கை செய்கிறவர்களாகவும் இருப்போம் என்பதில் சந்தேகம் இல்லை - 1.அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு: 2.நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். 3.அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். 4.அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். 5.அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். 6.அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள் - அப்போஸ்தலர் 19:1-6
தொடர்ந்து படிக்க ஆபிரகாமின் விளக்கம்