முந்தைய பாகம்: நீ கேபா என்னப்படுவாய்
இயேசு கிறிஸ்து, சகோதரர்களாய் இருந்த யாக்கோபையும் மற்றும் யோவானையும் ஊழியத்திற்கு அழைத்த பொழுது, அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவை படவிலேயே விட்டு விட்டு இயேசுவுக்கு பின்சென்றார்கள் - 19.அவர் அவ்விடம் விட்டுச் சற்று அப்புறம் போனபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் படவிலே வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டு, 20.உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே, விட்டு அவருக்குப் பின்சென்றார்கள் - மாற்கு 1:19-20
இப்படியாக, அவர்கள் "செபெதேயுவின் பிள்ளைகள்" என்கிற இவ்வுலகத்தின் அடையாளத்தை விட்டு விட்டு வந்தபடியால், கர்த்தர் அவர்களுக்கு "இடிமுழக்கத்தின் பிள்ளைகள்" என்கிற புதிய அடையாளத்தை கொடுத்தார் - செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார் - மாற்கு 3:17
துவக்க நாட்களில், யாக்கோபும் யோவானும் "பொவனெர்கேஸ்" என்பதின் உண்மையான அர்த்தத்தையும், அதற்குள் கர்த்தர் வைத்திருந்த கிருபையையும் அறியவில்லை, "இடிமுழக்கத்தின் பிள்ளைகள்" என்று கர்த்தர் தங்களுக்கு பெயரிட்டதினால், தாங்கள் ஏதோ சுட்டெரிக்க பிறந்தவர்கள் என்று எண்ணிக் கொண்டு, கர்த்தரை வரவேற்காத சமாரிய கிராமத்தை, வானத்திலிருந்து அக்கினியை வரவழைத்து அழிக்கட்டுமா என்று கேட்டார்கள் - 51.பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத் திருப்பி, 52.தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள். 53.அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 54.அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள். 55.அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி, 56.மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள் - லூக்கா 9:51-56
இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று
ஆனால் கர்த்தர், தான் சிலுவைக்குப் போகும் முன்பு, "பொவனெர்கேஸ்" என்பதின் அர்த்தத்தை, யோவானுக்கு விளங்க செய்தார், எப்படியெனில், ஒரு முறை, பரலோகத்தின் தேவன் இடிமுழக்க சத்தத்தில் பேசின பொழுது, அது அங்கிருந்த அனைவருக்கும் மற்ற சீஷர்களுக்கு ஒரு இடிமுழக்க சத்தமாகத்தான் கேட்டது, ஆனால் பொவனெர்கேஸ் என்று அழைக்கப்பட்ட யோவானுக்கோ அது வார்த்தைகளாக காதில் விழுந்தது.
அந்த இடிமுழக்க சத்தத்தை, தேவ ஆவியானவர் வியாக்கியானம் செய்து அதின் அர்த்தத்தை யோவானுக்கு சொல்லிக் கொடுத்தார், அதனால் தான், அதின் அர்த்தம் யோவான் புஸ்தகத்தில் மாத்திரம் சொல்லப்பட்டுள்ளது - 24.மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும். 25.தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அவன் அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான். 26.ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். 27.இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன். 28.பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. 29.அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள். 30.இயேசு அவர்களை நோக்கி: இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று - யோவான் 12:24-30
மேலும், கர்த்தர் "இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று" என்று சொன்னதில், யோவானுக்கென்று பிரத்தியட்சமான ஒரு அர்த்தம் இருந்தது, அது கர்த்தர் யோவானிடம், இடிமுழக்க சத்தத்தை வியாக்கியானம் பண்ணவது எப்படி என்பதை அறிந்துக் கொண்டாயா என்று கேட்பதாகவே இருந்தது!
யோவானை "பொவனெர்கேஸ்" என்று அழைத்ததற்கு காரணம் என்ன?
கர்த்தர் ஏன் யோவானுக்கு இந்த வரத்தை கொடுத்து, அதை பயன்படுத்துவதற்கான பயிற்சியையும் கொடுத்தார்? ஏனென்றால், அப்போஸ்தலனாகிய யோவான், பத்மு தீவிலிருந்து இடிமுழக்க சத்தத்தை கேட்டு, வெளிப்படுத்தின விசேஷம் புஸ்தகத்தை எழுத வேண்டியது தேவனின் சித்தமாயிருந்தது, அதனால் தான் இயேசு கிறிஸ்து, யோவானுக்கு "பொவனெர்கேஸ்" என்று பெயர் சூட்டி, இடிமுழக்க சத்தத்தை வியாக்கியானம் பண்ணவது எப்படி என்று கற்றும் கொடுத்தார்.
யோவானை பல முறை கொலை செய்ய முயன்ற ரோம அரசாங்கம், அது முடியாமல் போனதினால், அவரின் முதிர் வயதிலே
பத்மு தீவிலே சிறை வைத்தார்கள், பத்மு தீவு என்பது ஒரு மிகப்பெரிய சிறைச்சாலை, அங்கே மற்ற கைதிகளும் காவல் காக்கிறவர்களும் இருந்தார்கள், யோவான் அந்த பத்மா தீவிலே இருக்கும் பொழுது, தேவன் யோவானோடு இடி முழக்க சத்தத்தில் பேசினார், அந்த சத்தத்தை அங்கிருந்த அனைவரும் கேட்டார்கள், ஆனால் அவர்களுக்கு அது மழைக்கான இடி முழக்கத்தின் சத்தமாக தான் இருந்தது, ஆனால் யோவானுக்கு அது வெளிப்படுத்தின சுவிசேஷம், அந்த சத்தம் யோவானை பரிசுத்த ஆவியினால் நிரப்பி, தரிசனங்களை காண கிருபை செய்தது - 1.இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது. 2.உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார். 3.வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அது பார்வைக்கு மரகதம்போல தோன்றிற்று. 4.அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி, அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன். 5.அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன - வெளி 4:1-5
அப்படி, இடிமுழக்க சத்தத்தைக் கேட்டு எழுதப்பட்ட வெளிப்படுத்தின புஸ்தகத்தில் வசனங்களில் ஒன்று தான் இது, அது தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலும், வேத வசனத்தினாலும் தான் நாம் பிசாசை மேற்கொள்ள முடியும் என்று இன்றும் நமக்கு சொல்லிக் கொடுக்கிறது - 10.அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான். 11.மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். 12.ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன் - வெளி 12:10-12
மேலும், அந்த சத்தம், இயேசு கிறிஸ்துவை துதித்து பாடும் பாடலாகவும் யோவானுக்கு கேட்டது, மேலும் அந்த பாக்கியத்தை பெற ஒரு பரிசுத்த வாழ்க்கை அவசியம் என்பதையும் நமக்கு சொல்லிக் கொடுக்கிறது - 1.பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன். 2.அல்லாமலும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது. 3.அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம்பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக்கூடாதிருந்தது. 4.ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். 5.இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள் - வெளி 14:1-5
இப்படி, மக்களுக்கு சாதாரண சத்தமாக தோன்றுகிறவைகளை கேட்டு எழுதப்பட்டதே, வெளிப்படுத்தின சுவிஷேச புஸ்தகமாய் இருக்கிறது, அது, நாம் தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்துவின் நித்திய ராஜ்யத்திற்கு தயாராக வேண்டும் என்றும் சொல்லிக் கொடுக்கிறது - 6.அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார். 7.நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக்கேட்டேன். 8.சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே. 9.பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான் - வெளி 19:6-9
அந்த சத்தம், தான் சொன்னவைகளில், எவைகளை எழுதவேண்டும், எவைகளை முத்திரை போட வேண்டும் என்றும் யோவானுக்கு சொல்லிக் கொடுத்தது - 1.பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது. 2.திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து, 3.சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகா சத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின. 4.அவ்வேழு இடிகளும், தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன் - வெளி 10:1-4
யாக்கோபை "பொவனெர்கேஸ்" என்று அழைத்ததற்கு காரணம் என்ன?
யாக்கோபு மற்றும் யோவான் இரண்டு பேருமே ஒரே தாய் தகப்பனுக்கு பிறந்தவர்கள், ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள், ஒரே நேரத்தில் இந்த உலக காரியங்களை உதறிவிட்டு கர்த்தரின் ஊழியத்திற்கு வந்தவர்கள், இரண்டு பேருமே ஒரே நேரத்தில் அப்போஸ்தலர்களாக தெரிந்தெடுக்கப்பட்டிருந்தவர்கள், இரண்டு பேருமே பொவனெர்கேஸ் என்று அழைக்கப்பட்டவர்கள், இரண்டு பேருமே இயேசு கிறிஸ்துவின் மறுரூப மகிமையை தரிசித்தவர்கள், இரண்டு பேருமே, இயேசு கிறிஸ்துவின் அற்புதங்களையும் அடையாளங்களையும் கண்ணாரக் கண்டு, கர்த்தரின் வல்லமையை அறிந்தவர்கள், இரண்டு பேருக்காகவும் அவர்களின் தாய் கர்த்தரிடம் வேண்டுதல் செய்தாள், இப்படி இந்த சகோதரர்களின் காரியங்கள் எல்லாமே ஒரே மாதிரியாய் இருக்கும் பொழுது, யாக்கோபை காட்டிலும் யோவானின் ஊழியம், ஒரு கனி தருகிற ஊழியமாக மாறினது எப்படி? பரிசுத்த வேதாகமத்தில் யோவான், 1 யோவான், 2 யோவான், 3 யோவான், மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் என 5 புஸ்தகங்களை யோவான் எழுதியுள்ளார், இது எப்படியாயிற்று?
கர்த்தர் யாக்கோபை "பொவனெர்கேஸ்" என்று அழைத்திராவிட்டால், இந்த பரம ரகசியத்தை நாம் அறிந்திருக்க முடியாது, அது நம்முடைய குலமோ, கோத்திரமோ, அழைப்போ, வரங்களோ, நம்மை கனி கொடுக்கும் நபராக மாற்றாது, மாறாக நாம் கிறிஸ்துவின் மேல் வைக்கும் அன்பு மாத்திரமே நம்மை கனி கொடுக்க செய்யும் என்பதை விளக்கவே.
யோவானிடம் ஒரே ஒரு வித்தியாசம் காணப்பட்டது, அது என்னவென்றால், அவர் இயேசுவை நேசிக்கிறவராகவும் கர்த்தரின் மார்பினிலே சாய்ந்து இளைப்பாறுகிறவராகவும் இருந்தார், அதுவே யோவானை கனி கொடுப்பவராய் மாற்றினது - 23.அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். 24.யாரைக்குறித்துச் சொல்லுகிறாறென்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான். 25.அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான் - யோவான் 13:23-25
முதல் பாகம்: இயேசுவின் வார்த்தைகள்