முந்தைய பாகம்: மூன்றுநாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்
பழைய ஏற்பாட்டில், "தீவுகள்" என்கிற குறியீட்டுச் சொல் தீர்க்கதரிசனங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதை பார்க்கலாம், உதாரணத்திற்கு ஏசாயா தீர்க்கதரிசி, இயேசு கிறிஸ்துவின் வேதத்துக்குத் "தீவுகள்" காத்திருக்கும் என்று சொல்லியுள்ளார் - 1.இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார். 2.அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார். 3.அவர் நெரிந்த நாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார். 4.அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் "தீவுகள்" காத்திருக்கும் - ஏசாயா 42:1-4
பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களில், ஏராளமான உவமை வார்த்தைகள் [குறியீட்டுச் சொற்கள்] உபயோகப் படுத்தப்பட்டிருந்தாலும், "தீவுகள்" என்கிற வார்த்தையின் உண்மையான அர்த்தம் "புறஜாதியார்" என்பதை, தேவ ஆவியானவரே புதிய ஏற்பாட்டு புஸ்தகத்தில் இப்படி விளக்கி இருக்கிறார் - 18.இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார். 19.வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை. 20.அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்த நாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார். 21.அவருடைய நாமத்தின்மேல் "புறஜாதியார்" நம்பிக்கையாயிருப்பார்கள் என்பதே - மத்தேயு 12:18-21
"புறஜாதியார்" தாங்கள் பேசுகிற பாஷையினிமித்தமாகவும், கலாச்சாரத்தினிமித்தமாகவும் ஒருவருக்கொருவர் கலவாதவர்கள், அப்படிப்பட்டவர்களை "தீவுகள்" என்று அழைப்பது சரிதானே!
பழைய ஏற்பாட்டில், ஏராளமான தீர்க்கதரிசனங்கள் இருந்த போதிலும், தேவ ஆவியானவர் ஏன் இந்த தீர்க்கதரிசனத்தின் அர்த்தத்தை விளக்கி இருக்கிறார்? ஏனென்றால், இது புறஜாதியாரின் இரட்சிப்பை குறித்த ஒரு முக்கியமான தீர்க்கதரிசனமாகும், எனவே, இதை யாரும் தவறாக போதித்து விடக்கூடாது என்பதற்காக, தேவ ஆவியானவரே இந்த தீர்க்கதரிசனத்தின் அர்த்தத்தையும், "தீவுகள்" என்கிற வார்த்தையின் அர்த்தத்தையும் விளக்கி இருக்கிறார்.
இப்படி, "தீவுகள்" என்ற வார்த்தை, பலவிதமான பாஷைகளை பேசும் புறஜாதி மக்களை குறிக்கிறது என்பதை ஆதியாகமம் புஸ்தகத்திலும் பார்க்கலாம், நோவாவின் சந்ததியிலிருந்து, எப்படியாக பலவிதமான ஜாதிகள் உண்டானார்கள் என்பதை சொல்லும் பொழுது, அவர்களை "ஜாதிகளுடைய தீவுகள்" என்றே வேதாகமம் அழைக்கிறது - 1.நோவாவின் குமாரராகிய சேம் காம் யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள். 2.யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள். 3.கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள். 4.யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள். 5.இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன் பாஷையின்படியேயும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், ஜாதியின்படியேயும், வேறுவேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன - ஆதியாகமம் 10:1-5
எரேமியா தீர்க்கதரிசியும், புறஜாதியாரை "ஜாதிகளே" "தீவுகளே" என்று அழைத்து, இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை அறிவித்து இருக்கிறார் - 10.ஜாதிகளே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார் என்று சொல்லுங்கள் - எரேமியா 31:10
இப்படியாக, புறஜாதியாரின் இரட்சிப்பை தீர்க்கதரிசனங்கள் மூலமாக சொன்ன வேதாகமம், தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து, நமக்கு புதிய ஏற்பாட்டை கொடுத்து, பழைய ஏற்பாட்டை முழுமைபடுத்துவார் என்பதையும், "வேதம் என்னிலிருந்து வெளிப்படும்" என்று தீர்க்கதரிசனமாக சொல்லி இருக்கிறது - 4.என் ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; என் ஜாதியாரே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபிப்பேன். 5.என் நீதி சமீபமாயிருக்கிறது; என் இரட்சிப்பு வெளிப்படும்; என் புயங்கள் ஜனங்களை நியாயந்தீர்க்கும்; தீவுகள் எனக்குக் காத்திருந்து, என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும் - ஏசாயா 51:4-5
அதாவது, பழைய ஏற்பாட்டை மாற்றுவதற்காக அல்ல, அதை முழுமைப் படுத்துவதற்காகவே, தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்தார் - 17.நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். 18.வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் - மத்தேயு 5:17-18
உதாரணத்திற்கு, பழைய ஏற்பாட்டில் கொலை செய்வது பாவம் என்று சொல்லப்பட்டுள்ளது, ஆனால் நாம் பரலோக ராஜ்யத்திற்கு பாத்திரவான்களாக மாற வேண்டும் என்றால், கோபப்படுவதை கூட கொலை குற்றத்திற்கு சமமாக நினைக்க வேண்டும் என்று சொல்லி, அந்தக் கட்டளையை முழுமைப்படுத்தினார் - 21.கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 22.நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான் - மத்தேயு 5:21-22
அதுபோலவே, பழைய ஏற்பாட்டில் விபச்சாரம் செய்வது பாவம் என்று சொல்லப்பட்டுள்ளது, ஆனால் நாம் பரலோக ராஜ்யத்திற்கு பாத்திரவான்களாக மாற வேண்டும் என்றால், ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்ப்பதை கூட விபச்சார பாவத்திற்கு சமமாக நினைக்க வேண்டும் என்று சொல்லி, அந்தக் கட்டளையை முழுமைப்படுத்தினார் - 27.விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 28.நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று - மத்தேயு 5:27-28
இப்படியாக கொலை, விபச்சார பாவத்தை குறித்து சொன்ன கர்த்தர், திருமணத்தை குறித்துச் சொல்லும் பொழுது, அது இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பின் உடன்படிக்கையை குறிக்கிறது [அது மலைகள் விலகினாலும், நம்மை விட்டு விலகாத கிருபையையும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், நம்மை விட்டு நிலைபெயராத சமாதானத்தின் உடன்படிக்கையையும் குறிக்கிறது] அதனால் விவாகரத்து என்பது தேவனால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு காரியம் என்றும் சொன்னார் - 7.அதற்கு அவர்கள்: அப்படியானால், தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள். 8.அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை - மத்தேயு 19:7-8
இயேசு கிறிஸ்துவின் உபதேசத்தை கேட்ட யூதர்களும், "இது புதிய உபதேசம்" என்று சொல்லி சாட்சி கொடுத்தார்கள் - 27.எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள் - மாற்கு 1:27
ஆனால் வேதபாரகரும் பிரதான ஆசாரியரும், ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன "கர்த்தரிடமிருந்து வேதம் வெளிப்படும்" என்கிற தீர்க்கதரிசனம் நிறைவேறினதை குறித்து சந்தோஷப்படுவதற்கு பதிலாக, இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து கொலை செய்தார்கள் - 17.என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார். 18.அதை வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே அவருக்குப் பயந்திருந்தார்கள் - மாற்கு 11:17-18
அடுத்த பாகம்: நீ போதகனாயிருந்தும்?