அறிவி vs அறிவியாதே
அறிவி vs அறிவியாதே
கர்த்தர் லேகியோன் என்கிற திரள்கூட்ட பிசாசுகள் பிடித்திருந்த மனிதனை சுகப்படுத்தின அற்புதமும், யவீரு என்கிற ஜெபஆலயத்தலைவனின் மகளை உயிரோடு எழுப்பின அற்புதமும், அடுத்தடுத்து நடந்ததாக மத்தேயு, மார்க், லுக்கா என மூன்று சுவிசேஷ புத்தகத்திலும் எழுதப்பட்டுள்ளது, ஏனென்றால் இந்த இரண்டு அற்புதங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பல தேவ ரகசியங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
கர்த்தர் லேகியோன் என்கிற திரள்கூட்ட பிசாசுகள் பிடித்திருந்த மனிதனை சுகப்படுத்தின அற்புதத்தை குறித்து லுக்காவின் சுவிசேஷ புஸ்தகத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது - 26.பின்பு கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில் சேர்ந்தார்கள். 27.அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும், வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராக வந்தான். 28.அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான். 29.அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்த ஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான். 30.இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான். 31.தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. 32.அவ்விடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி தங்களுக்கு உத்தரவுகொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவுகொடுத்தார். 33.அப்படியே பிசாசுகள் அந்த மனுஷனை விட்டு நீங்கி, பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டது. 34.அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். 35.அப்பொழுது, சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள். 36.பிசாசுகள் பிடித்திருந்தவன் சொஸ்தமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள். 37.அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்கள் எல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களை விட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படவில் ஏறி, திரும்பிப்போனார். 38.பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்பட உத்தரவு கேட்டான். 39.இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான் - லூக்கா 8:26-39
அதனை தொடர்ந்து, கர்த்தர் யவீரு என்கிற ஜெபஆலயத்தலைவனின் மகளை உயிரோடு எழுப்பின அற்புதத்தை குறித்து இவ்வாறு எழுதப்பட்டுள்ளது - 40.இயேசு திரும்பி வந்தபோது ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள். 41.அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால், 42.தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள். 43.அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ, 44.அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று. 45.அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள். 46.அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார். 47.அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள். 48.அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார். 49.அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான். 50.இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார். 51.அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர வேறொருவரையும் உள்ளே வரவொட்டாமல், 52.எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். 53.அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள். 54.எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். 55.அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது, உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார். 56.அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார் - லூக்கா 8:40-56
அறிவி[ஊழியம் செய்] VS அறிவியாதே[ஊழியம் செய்ய வேண்டாம்]
ஒரு தேசத்தில் இப்படியாக ஒரு விளம்பரம் செய்யப்பட்டிருந்தது, அந்த தேசத்தின் ராஜாவுக்கு ஒரு திறமையான யுத்த கலைகள் எல்லாம் அறிந்த ஒரு மெய்க்காப்பாளர் தேவை என்று அந்த விளம்பரத்தில் சொல்லப்பட்டிருந்தது, அப்பொழுது அந்த தேசத்தில் யுத்த கலையில் தங்கப்பதக்கம் வென்றிருந்த ஒரு வாலிபன் இந்த பதவிக்கு தான் மாத்திரமே தகுதியானவன் என்று எண்ணிக் கொண்டிருந்தான், ஆனால் அந்த ராஜாவோ தன் பாலிய சிநேகிதனை தனக்கு மெய்க்காப்பாளராக வைத்துக்கொண்டார்.
எப்படியாக யுத்த கலையில் தங்கப் பதக்கம் வென்ற வாலிபன், ராஜாவுக்கான மெய் காப்பாளர் பதவி தனக்கு தான் கிடைக்கும் என்று எண்ணிக் கொண்டிருந்தானோ, அது போல் தான் இங்கு யவிருவியின் நிலைமையும் இருந்தது, அவர் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களின் வம்சத்தில் பிறந்த இஸ்ரவேலராய் இருந்தவர், அதற்கு மேலாக ஜெப ஆலய தலைவராகவும் இருந்தார், பழைய ஏற்பாடு காரியங்களை எல்லாம் அறிந்த நல்ல ஊழிய அனுபவமும் சாட்சியும் உள்ள மனிதர், இவைகளையெல்லாம் பார்க்கும் பொழுது கர்த்தரை அறிவிப்பதற்கு மிகவும் தகுதியான ஆள் யார் என்றால் அது யவிரு தான், ஆனால் கர்த்தரோ எந்த தகுதியும் இல்லாத, நிர்வாணியாய் அலைந்து கொண்டிருந்தவனை, சுகப்படுத்தி, வஸ்திரம் கொடுத்து, ஊழியத்திற்கு அனுப்பினார் என்று வேதாகமம் சொல்லுகிறது. இதிலிருந்து நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது என்ன?
ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு VS லேகியோன் பிசாசுகள் விட்டுப்போன மனுஷன்
முதலாவது பிசாசுகள் விட்டுப்போன மனுஷனுடைய இருதயத்தில் இயேசுவை குறித்து என்ன எண்ணம் இருந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டும், இயேசு அவனிடம் "தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி அனுப்ப" , அவன் போய் "இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவித்தான்" என்று பார்க்கிறோம், அப்படியென்றால் பல பிசாசுகளை கண்ட அவனுடைய இருதயத்தில் இயேசு மாத்திரமே தெய்வமாக இருந்தார், அது மாத்திரமே ஊழியம் செய்வதற்கு தேவையான தகுதியாய் இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம், அவனுக்கு வேத ஞானமோ, கல்வி ஞானமோ, ஒரு நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சாட்சியோ கிடையாது, அப்படியென்றால் கர்த்தருக்கு ஊழியம் ஒன்றே ஒன்று தான் அவசியம், அது இயேசு கிறிஸ்து மாத்திரமே தெய்வம் என்பதை அறிந்த நன்றியுள்ள இருதயம் மாத்திரமே - இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான் - லூக்கா 8:39
ஆனால் பழைய ஏற்பாட்டு காரியங்களையும் அற்புதங்களையும் யவீருவுக்கோ, இயேசு தன் மகளை தோடு உயிரோடு எழுப்பினதை கண்டவுடன், இவர் எலியா எலிசாவை போல என் மகளையும் உயிரோடு எழுப்பி விட்டார், அதனால் இவர் நிச்சியமாகவே ஒரு பெரிய தீர்க்கதரிசி என்று எண்ணியிருப்பான், அவனை ஊழியத்திற்கு அனுப்பி இருந்தால் என்ன சொல்லி இருப்பான் இயேசுவை குறித்து, அவர் எலியா என்றோ அல்லது எலியாவை காட்டிலும் இரண்டு மடங்கு வரம் பெற்ற எலிசா என்றோ, இல்லாவிட்டால் அதைக் காட்டிலும் அதிகமான வரங்களைப் பெற்ற பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றுதான் சொல்லி இருப்பானே அன்றி இயேசு தான் தெய்வம் என்று சொல்லி இருக்க வாய்ப்பு இல்லை, அப்படிப்பட்ட எண்ணத்தோடு ஊழியம் செய்வதை காட்டிலும் செய்யாமல் இருப்பதே மேல், அதனால் ஒரு பலனும் கிடையாது - 18.பின்பு அவர் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். 19.அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள் - லூக்கா 9:18-19
தங்களை விட்டுப் போகும்படி வேண்டிக்கொண்ட கதரேனர் VS சந்தோஷமாய் ஏற்றுக்கொண்ட கப்பர்நகூம் ஜனங்கள்
கலிலேயாவுக்கு எதிராக இருந்த இந்த கதரேனருடைய நாட்டினர் கர்த்தரை தங்களை விட்டு போகும் படி வேண்டிக்கொண்ட மக்கள் தான், ஆனால் அவர்கள் மத்தியில் தான் கர்த்தர் லேகியோன் பிசாசுகளிடம் இருந்து விடுதலை பெற்றவனை ஊழியம் செய்யச் சொன்னார், அது ஒரு கடினமான பணித்தளம் தான், ஆனாலும் கர்த்தரை "தெய்வமாக" ஏற்றுக்கொள்ள கூடியவர்களாய் இருந்தவர்கள்.
ஆனால் அதே சமயத்தில் கலிலேயாவுக்கு இப்புறத்திலிருந்தவர்கள் கர்த்தரை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார்கள் என்று வேதாகமம் சொல்லுகிறது, ஆனால் அவர்கள் கர்த்தரை சர்வ வல்லமையுள்ள தேவன் என்று ஏற்றுக் கொண்டார்களா என்றால் சந்தேகம் தான், அவர்களால் இயேசு கிறிஸ்துவை தெய்வமாக பார்க்க முடியவில்லை, அதனால் தான் அந்த பட்டங்களை பார்த்து கர்த்தர் இப்படியாக சொன்னார் - 13.கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள். 14.நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும். 15.வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, 16.சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார் - லூக்கா 10:13-16
பிரேதக் கல்லறைகளிலே தங்கினவன் VS ஜெபஆலயத்தலைவன்
லேகியோன் பிசாசுகளிடம் இருந்து விடுதலை பெற்றவனை, கர்த்தர் எங்கு ஊழியத்திற்கு அனுப்பினார்? எங்களை விட்டு போய் விடும் என்று வேண்டிக்கொண்ட மக்களின் மத்தியில் தான் ஊழியம் செய்ய அனுப்பினார். மேலும், யாரை அனுப்பினார்? அவர்கள் பன்றிக்கறியை தின்கிற மக்கள், அந்நாட்களில் பன்றிக்கறியை தின்பது ஒரு அவலட்சணமான காரியமாக தான் பல சமுதாயங்களால் பார்க்கப்பட்டது, அப்படிப்பட்டவர்களுக்கே அருவருப்பானவனாகி கல்லறைக்கு துரத்தி விடப்பட்டவனை தான் கர்த்தர் அனுப்பினார்.
அதே சமயத்தில் கலிலேயா கடலுக்கு இக்கரையிலே, ஜெப ஆலய தலைவனாக இருந்த யவீரு நிச்சயமாகவே அவனிருந்த பட்டணத்து மக்களால் மிகவும் மரியாதைக்குரிய பாத்திரமாகத்தான் இருந்திருப்பார், ஆனால் கர்த்தரால் அவன் ஒரு பயன்படுத்த முடியாத பாத்திரமாகத்தான் இருந்தார் - அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார் - லூக்கா 8:56