இயேசு கிறிஸ்து ஒருமுறை கை கழுவாமல் சாப்பிடும் தன்னுடைய சீஷர்களை குறை சொன்ன பரிசேயர்களை "கொர்பான்" என்கிற ஒரு காரியத்தை சொல்லி உபதேசித்தார், இந்த "கொர்பான்" என்கிற வார்த்தையானது, பழைய ஏற்பாடு நாட்களில், ஜனங்கள் தங்கள் பாவ மன்னிப்புக்காக படைக்கும் பலியின் எபிரேய வார்த்தையாகும், மேலும், அந்த கொர்பான் பலியை "அல்பா ஒமேகா" என்கிற ஒருவர்தான் செலுத்த வேண்டும் என்றும் லேவியராகமம் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருந்தது.
எப்படி நாம் PM(Prime Minister) அல்லது CM(Chief Minister) என்று சொல்கிறோமோ, அது போலவே, மூல பாஷையில் எழுதப்பட்ட வேதாகமத்தில், "அல்பா ஒமேகா" என்கிற இரண்டு எழுத்துக்கள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டன, அவைகள் ஒரு மொழி பெயர்க்க பட முடியாத வார்த்தையாகவே இருந்தது, இது யாரை குறிக்கிறது என்கிற கேள்விகளுக்கும் பதில் இல்லாத சமயத்தில் தான், நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து தான்தான் அந்த "அல்பா ஒமேகா" என்று வெளிப்படுத்தின புத்தகத்தில் உறுதிப்படுத்தினார்.
பழைய ஏற்பாடு நாட்களில் இந்த "கொர்பான்" என்கிற காணிக்கையானது ஒரு பாவநிவர்த்தி பலியாகத்தான் பார்க்கப்பட்டது, இன்று கூட குர்பானி என்று ஒட்டகத்தை கொல்லுபவர்கள் உண்டு, பரிசேயரும் வேதபாரகரும் அதே "கொர்பான்" வார்த்தையை பெற்றோருக்கு தேவையான பணத்தை கொடுத்து ஒதுக்கி வைக்கவும் பயன்படுத்தினார்கள்.
ஆனால் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து நேசிக்கப்படத் தக்கவராய் இருக்கிறார், நாம் அவரை ஒரு பாவநிவாரண பலியாக பார்க்காமல், நம்மேல் அன்பு வைத்த காரணத்தினால் பலியானாரே என்று அவருக்கு கீழ்படிந்து அவரை நேசிக்க வேண்டும், ஆனால் இந்த பரிசேயர் மற்றும் வேதபாரகரின் காரியங்கள் அதற்கு நேர் மாறாக இருக்கிறதே என்கிற ஆதங்கத்தோடு கர்த்தர் செய்த உபதேசம் தான் இந்த "கொர்பான்" உபதேசம் - 1.எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். 2.அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர் கழுவாத அசுத்த கைகளாலே போஜனம்பண்ணுகிறதை அவர்கள் கண்டு குற்றம்பிடித்தார்கள். 3.ஏனெனில் பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கைக்கொண்டு, அடிக்கடி கைகழுவினாலொழியச் சாப்பிடமாட்டார்கள். 4.கடையிலிருந்து வரும்போதும் ஸ்நானம்பண்ணாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும் கிண்ணங்களையும் செப்புக்குடங்களையும் மணைகளையும் கழுவுகிறதுமல்லாமல், வேறு அநேக ஆசாரங்களையும் கைக்கொண்டுவருவார்கள். 5.அப்பொழுது, அந்தப் பரிசேயரும் வேதபாரகரும் அவரை நோக்கி: உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கை கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள். 6.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும், 7.மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான். 8.நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்து வருகிறீர்கள் என்றார். 9.பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்கு தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது. 10.எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே. 11.நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி, 12.அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்; 13.நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார் - மாற்கு 7:1-13
லூக்காவின் புஸ்தகத்திலிருந்து
இதன் "கொர்பான்" உபதேசத்தின் நோக்கத்தை அறிந்துக் கொள்வது சற்று கடினம் தான், அதனால் தான் பரிசுத்த ஆவியானவர் லூக்காவின் புஸ்தகத்தில், இந்த உபதேசத்தின் கருப்பொருளை நேரடியாக எழுதியுள்ளார், அது "தேவ அன்பை" குறித்தது, மேலும் நாம் செலுத்தும் காணிக்கைகளும், கர்த்தரின் சிலுவை அன்பை அடிப்படையாக கொண்டதாகவே இருக்க வேண்டும், லூக்கா இதை எழுதும் பொழுது மோசேயின் கட்டளையையோ அல்லது "கொர்பான்" காணிக்கையையோ குறித்து ஒன்றும் சொல்லாமல் உபதேசத்தின் கருப்பொருளை மாத்திரம் எழுதியுள்ளார் - 37.அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், பரிசேயன் ஒருவன் தன்னுடனேகூட அவர் பகற்போஜனம் பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் போய்ப் பந்தியிருந்தார். 38.அவர் போஜனம்பண்ணுகிறதற்குமுன் கைகழுவாமலிருந்ததைப் பரிசேயன் கண்டு, ஆச்சரியப்பட்டான். 39.கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயராகிய நீங்கள் போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்கள் உள்ளமோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது. 40.மதிகேடரே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ? 41.உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும். 42.பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே - லூக்கா 11:37-42
மத்தேயுவின் புஸ்தகத்திலிருந்து
இயேசு கிறிஸ்து பரிசேயர் மற்றும் வேதபாரகரிடம் இதை சொல்லக் காரணம் என்ன? ஏனென்றால், பரிசேயரும் வேதபாரகரும் "உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக" என்கிற கட்டளையை நிறைவேற்ற பணம் மாத்திரமே போதும் என்று உபதேசித்தர்கள், ஆனால் நம் தேவனோ நமக்குள் வாசம் பண்ணுகிற தேவனாய் இருக்கிறார், அவரை நம் காணிக்கைகளினால் பெற்றுக் கொள்ள முடியாதும் மாறாக கீழ்ப்படுதலினாலும் தெய்வ அன்பினால் மாத்திரமே அவரைப் பெற்றுக்கொள்ள முடியும் - 1.அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து: 2.உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம்பண்ணுகிறார்களே! என்றார்கள். 3.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? 4.உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே. 5.நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்து, 6.உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள். 7.மாயக்காரரே, உங்களைக்குறித்து: 8.இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது. 9.மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார் - மத்தேயு 15:1-9
ஏன் கர்த்தர் வேதபாரகர் மற்றும் பரிசேயரை பார்த்து குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள் என்று சொன்னார்? தேவன் தந்த மிக முக்கியமான "உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக" என்கிற கட்டளையை பிரதான நோக்கம், நாம் தேவனை நேசிக்க வேண்டும் என்பதாகும், ஆனால் இந்த வேதபாரகரும் பரிசேயரும் அதை அன்பற்ற காரியமாக மாற்றி, பணத்தின் மூலமாக இந்த கட்டளையை செய்து முடிக்க முடியும் என்று போதித்தார்கள் - 10.பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டு உணருங்கள். 11.வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். 12.அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள். 13.அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும். 14.அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார். 15.அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான். 16.அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா? 17.வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா? 18.வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். 19.எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். 20.இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார் - மத்தேயு 15:10-20
கர்த்தர் இதை சொல்லும் பொழுது, பழைய ஏற்பாடு கட்டளையாகிய உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்னும் காரியத்தை சொல்லி உபதேசித்ததால், இந்த "கொர்பான்" உபதேசம் உலக பெற்றோருக்கான காரியமாக தான் தோன்றும், ஆனால் கர்த்தரின் இந்த உபதேசத்தில், இவ்வுலக பெற்றோர் ஒரு உவமையாக தான் இருந்தார்கள், ஆனால் இந்த "கொர்பான்" உபதேசத்தின் பிரதான நோக்கம் நாம் தேவனை நேசிக்க வேண்டும், அவரே நம் தந்தையும் தாயுமாய் இருக்கிறார் என்கிற மேலான இரகசியத்தை வெளிப்படுத்தவே - 34.இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை. 35.என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது - மத்தேயு 13:34-35
மேலும், உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்று தேவன் மோசேயின் மூலமாக கொடுத்த கட்டளையில், "உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு" என்று சொல்லும் பொழுது, அது இப்பூமிக்குரிய நாட்களை குறிக்காமல், நாம் பரலோக தேவனின் பிள்ளைகளாக மாறுவதினால் நாம் அடைய போகும் நித்திய ஜீவனையே குறிக்கிறது - உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக - யாத்திராகமம் 20:12
மேலும், தாய் என்பவள் பிரசவ வேதனையடைந்து நம்மை பெற்றெடுத்தவளாய் இருக்கிறாள், அது நம்மை சிலுவையில் பாடுபட்டு சொந்த ஜனமாக மாற்றின கர்த்தரின் அன்பையே குறிக்கிறது - தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன் - யாத்திராகமம் 21:17
நிச்சியமாகவே இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளினால் தான் நமக்கு புத்திரசுவிகாரம் கிடைத்தது, அப்படியென்றால் மோசேயின் நாட்களிலேயே "உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக" என்று கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணம், இயேசு கிறிஸ்துவின் பிரசவ வேதனையை தீர்க்கதரிசனமாக அறிவிக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை, அதனால் தான் தேவன் அருளிய நியாயப்பிரமாணத்திற்கு தீர்க்கதரிசனம் என்கிற மற்றொரு பெயரும் உண்டு - 35.அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி: 36.போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான். 37.இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; 38.இது முதலாம் பிரதான கற்பனை. 39.இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. 40.இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார் - மத்தேயு 22:35-40
மோசே இந்த கட்டளையை பெற்ற பொழுது, அவரின் பெற்றோர் உயிரோடு இருந்திருக்க வாய்ப்பில்லை, அப்படியினால் மோசேக்கே இந்த கட்டளை ஒரு செல்லாத கட்டளையாய் தானே இருந்திருக்கும், இதிலிருந்து "உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக" என்கிற கட்டளையானது, இந்த பூமிக்குரிய பெற்றோரை குறிக்காமல், நம் பரலோக தந்தையாம் தேவனையும், நம்மை சிலுவையில் பெற்ற இயேசு கிறிஸ்துவையுமே குறிக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம் - பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார் - மத்தேயு 23:9B & அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள் - கலாத்தியர் 4:26B
ஒருவேளை இந்த கட்டளை, நம் பூமிக்குரிய தகப்பனையும் தாயையும் குறிப்பதாய் இருந்திருந்தால், தன் தகப்பனை அடக்கம்பண்ண வேண்டும் என்று கேட்ட சீஷனை இயேசு கிறிஸ்து உடனே அனுப்பியிருப்பார் அல்லவா? 21.அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். 22.அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார் - மத்தேயு 8:21-22
ஒருவேளை இந்த கட்டளை, நம் பூமிக்குரிய தகப்பனையும் தாயையும் குறிப்பதாய் இருந்திருந்தால், ஆபிரகாம் எங்கள் தகப்பன் என்று சொல்லி உங்கள் மூதாதையரை கனப்படுத்துங்கள் என்று தானே சொல்லியிருப்பார், ஆனால் அதற்கு மாறாக அல்லவா கர்த்தரின் உபதேசம் இருந்தது - மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் - லூக்கா 3:8
மேலும், பரலோகத்தின் தேவன், தம்முடைய சாயலில் நம்மை உருவாக்கி, பிரசவ வேதனையை காட்டிலும் பல மடங்கு அதிகமான சிலுவையின் பாடுகளினால் மீட்டிருக்கும் பொழுது, நம்முடைய மூதாதையைரையோ, அல்லது இந்த உலக மனிதர்களையோ, எங்கள் தகப்பன் என்று சொல்லி பெருமை பாராட்டுவது எவ்வளவாய் தேவனை தூக்கப்படுத்துகிற காரியமாய் இருக்கிறது.
இன்றைக்கும் பல நேரங்களில் நான் நம் பெற்றோர்களையும் முன்னோர்களையும் குறித்து மேன்மை பாராட்டுகிறோம், ஏனென்றால் அவர்களை குறித்த நல்ல காரியங்களை மாத்திரமே நாம் கேளிவிப்பட்டிருப்போம், ஆனால் அவர்களின் ரகசிய பாவங்களையும் இருதயத்தின் சீர்கேடுகளையும் தேவன் ஒருவரே அறிவார், அப்படி இருக்கும்போது நான் நம் மூதாதையரின் காரியங்களை குறித்து மேன்மை பாராட்டுவோம் என்றால், அவர்களின் ரகசிய பாவங்ளையும் குறித்து மேன்மை பாராட்கிறோம் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும், நாம் தேவனுடைய பிள்ளைகளாக மாறி அவரை உயர்த்தாமல், முன்னோர்களை குறித்துப் பேசி அவர்களையே உயர்த்தி கொண்டிருப்போமானால், நாமே அவர்களின் பிள்ளைகள் என்று சாட்சி இடுகிறவர்களாகவும், அவர்களின் செய்யாமல் விட்டு சென்ற பாவங்களையும் செய்து முடிகிறவர்களாக இருப்போம் - 29.மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து: 30.எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள். 31.ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலை செய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள். 32.நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள் - மத்தேயு 23:29-32
இதிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரே வழி, பாவமற்ற இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகளாக மாறி, அவரை நேசித்து, அவரை மாத்திரமே நம் நாவலும், இருதயத்திலும் உயர்த்தி அவருக்காக வாழ்வதே.