நம் கரங்களில் இருக்கும் புதிய ஏற்பாட்டு புஸ்தகமானது எதோ ஒரு விபத்து அல்ல, இது எப்பொழுது கிடைக்கும் என்கிற ஏக்கம் காலங்காலமாய் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகளிடம் இருந்தது, உதாரணத்திற்கு, இயேசு கிறிஸ்து இந்த பூமியில் மனுஷகுமாரனாக வெளிப்படுவதற்கு ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்பே ஏசாயா தீர்க்கதரிசி புதிய ஏற்பாட்டு புஸ்தகமானது கர்த்தரின் மூலமாக வெளிப்படும் என்பதை "வேதம் என்னிலிருந்து வெளிப்படும்" என்று சொல்லியிருந்தார் - என் ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; என் ஜாதியாரே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபிப்பேன் - ஏசாயா 51:4
இதில் "வேதம் என்னிலிருந்து வெளிப்படும்" என்று சொல்லும் பொழுது, இயேசு கிறிஸ்துவின் உபதேசம், காலங்காலமாய் சொல்லப்பட்டு வந்த காரியங்களுக்கு மாறானதாக இருக்கும் என்கிற இரகசியமும் அடங்கியிருந்தது, அதனால் தான் இயேசு கிறிஸ்து தன் முதல் பிரசங்கமாகிய மலை பிரசங்கதிலுருந்து, சீஷர்களுக்கு உபதேசித்த கடைசி பிரசங்கம் வரை "நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று உபதேசித்ததைப் பார்க்கலாம் - 21.கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 22.நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு ஏதுவாயிருப்பான் - மத்தேயு 5:21-22 & அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார் - யோவான் 16:23
மேலும், இயேசு கிறிஸ்துவின் உபதேசம் முழு உலக மக்களுக்கும் உரியது என்பதை, கர்த்தரருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும், அதாவது புறஜாதி மக்கள் காத்திருக்கிறார்கள் என்றும் ஏசாயா தீர்க்கதரிசி சொல்லியிருந்தார் - அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும் - ஏசாயா 42:4
மோசே இந்த புதிய ஏற்பாடு புஸ்தகத்தைக் குறித்துச் சொல்லும் பொழுது, இயேசு கிறிஸ்து இந்த பூமியில் இருக்கும் பொழுது அல்ல, மாறாக அவர் மரணத்தை வென்று பிதாவின் வலதுபாரிசத்தில் உட்கார்ந்த பிறகு தான் எழுதப்பட வேண்டும் என்பதை தீர்க்கதரிசனமாக சொல்லியிருந்தார் - 18.அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமை கொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும், 19.இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு, 20.அவன் லேவியராகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண நூலைப் பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்; இப்படிச் செய்வதினால், தானும் தன் குமாரரும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்யத்திலே நீடித்து வாழுவார்கள் - உபாகமம் 17:18-20
இதில் ஆச்சரியமான காரியம் என்னவென்றால், இயேசு கிறிஸ்து 'வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்" என்று சொன்ன பொழுது, புதிய ஏற்பாடு என்கிற புஸ்தகமே கிடையாது, ஆனால் மரித்து உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து தான் சொன்ன வார்த்தைகளை நிறைவேறி புதிய ஏற்பாடும் பழைய ஏற்பாடும்(புதியவை மற்றும் பழையவை) சேர்ந்த புஸ்தகமாக வேதாகமத்தை நமக்கு தந்தருளி தான் சொன்னதை நிறைவேற்றினார் - அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இப்படியிருக்கிறபடியால், பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார் - மத்தேயு 13:52
"பழைய ஏற்பாடு" மற்றும் "புதிய ஏற்பாட்டு" என்கிற பெயர் எப்படி உண்டாயிற்று?
வேதாகமத்தில் ஆதியாகமம் முதல் மல்கியா வரையுள்ள புத்தகங்கள், பல்வேறு தொகுப்புகளாகவும், வெவ்வேறு பெயருடனும் அழைக்கப்பட்டன, அப்படியிருக்கும் பொழுது "பழைய ஏற்பாடு" என்கிற ஒரே பெயர் அவைகளுக்கு எப்படி கொடுக்கப்பட்டது? அதை தேவ ஆவியானவர் அப்போஸ்தலனாகிய பவுல் மூலமாகவே செய்து முடித்தார் என்று பார்க்கிறோம், கொரிந்தியருக்கு எழுதின புத்தகத்தில் அப்போஸ்தலனாய் பவுல் ஆதியாகமம் முதல் மல்கியா வரைக்கும் இருந்த புத்தகங்களை "பழைய ஏற்பாடு" என்று அழைத்தார், அதற்கு பின்பு எத்தனையோ நூற்றாண்டுகள் கழித்து வேதபுஸ்தகத்தை தொகுத்த பொழுது, அப்போஸ்தலனாகிய பவுல் "பழைய ஏற்பாடு" என்று எப்படி அழைத்தாரோ அதுவே அதற்கு பெயராயிற்று, மேலும் அதுவே இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷ புஸ்தகத்திற்கு "புதிய ஏற்பாடு" என்கிற பெயர் சூட்டவும் காரணமாயிற்று - 6.புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது. 7.எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே. 8.ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்? 9.ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. 10.இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்குமுன்பாக மகிமைப்பட்டதல்ல. 11.அன்றியும் ஒழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. 12.நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம். 13.மேலும் ஒழிந்துபோவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப்பாராதபடிக்கு, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை. 14.அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது. 15.மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே. 16.அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம். 17.கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு - II கொரிந்தியர் 3:6-17