இயேசு கிறிஸ்து, கலிலேயாக் கடலோரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த யோனாவின் மகனாகிய சீமோனை, ஊழியத்திற்கு அழைத்து, அவனுக்கு "பேதுரு" என்று பெயரிட்டிருந்தார் - 40.யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். 41.அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். 42.பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம். 43.மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக்கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார் - யோவான் 1:40-43
இயேசு கிறிஸ்து தன்னை "யோனாவின் குமாரனாகிய சீமோனே" என்று அழைப்பதை பேதுருவும் விரும்பினார், அது பேதுருவுக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் கொடுத்தது.
ஏனென்றால், இயேசு கிறிஸ்து வாழ்ந்த நசரேத்துக்கு மிக அருகாமையிலும், நசரேத்திலுருந்து கப்பர்நகூமுக்கு போகும் வழியில் காத்தேப்பேர் என்கிற ஊர் இருந்தது, அது மீனின் வயிற்றில் மூன்று நாள் இருந்த, பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியாகிய யோனா வாழ்ந்த ஊர் - காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன்[யோவாசின் குமாரன் யெரொபெயாம்] ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான் - II இராஜாக்கள் 14:25
கர்த்தருடைய தூதன் யோசேப்பை, தாவீதின் குமாரனாகிய யோசேப்பே என்று அழைத்த பொழுது, நம் எல்லோருக்கும் தெரியும் கர்த்தருடைய தூதனானவர் யோசேப்பின் காலத்திற்கு எறக்குறைய 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அவனுடைய மூதாதையராகிய தாவீது ராஜாவை குறிப்பிட்டு பேசுகிறார் என்று - 18.இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. 19.அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். 20.அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. 21.அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான் - மத்தேயு 1:18-21
அது போல தான், பேதுருவும் "யோனாவின் மகனாகிய சீமோனே" என்று அழைக்கப்பட்டார், மேலும் கர்த்தரால் பேதுரு என்று பெயரிடப்பட்டிருந்தாலும், கர்த்தர் தன்னுடைய ஊழிய நாட்களிலெல்லாம், "யோனாவின் குமாரனாகிய சீமோனே" என்று தான் பேதுருவை அழைத்து வந்தார் - 15.அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். 16.சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17.இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 18.மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. 19.பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார் - மத்தேயு 16:15-19
கர்த்தர் தன் சிலுவை மரணத்திற்கு முன்பு, கடைசியாக கெத்செமனே தோட்டத்திலும், பேதுருவை "சீமோனே" என்று தான் அழைத்தார் - 37.பின்பு அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா? 38.நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார் - மாற்கு 14:32-38
முதல் முறையாக பேதுரு என்று அழைக்கப்பட்ட சீமோன்
இப்படி "யோனாவின் குமாரனாகிய சீமோன்" என்று உலக அடையாளத்தோடு அழைக்கப்பட்டு வந்தவர், கர்த்தரின் உயிர்த்தெழுதலுக்கு பின்பே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட "பேதுரு" என்கிற பெயரால் அழைக்கப்பட்டார், அது நம் ரட்சகராகிய இயேசு கிறிஸ்து தன் சொந்த இரத்தத்தை சிந்தி உண்டாக்கின சிலுவையின் உடன்படிக்கையால் உண்டானது, அந்த பரிசுத்த இரத்தம் தன்னை தெரியாது என்று சொல்லி சபித்த சீமோனுக்காகவும் பரிந்து பேசினதினால் தான் பரலோகம் அவரை பேதுரு என்று அழைத்தது - 6.அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம். 7.நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான் - மாற்கு 16:6-7
ஆனால், அதற்கு பின்பும் கர்த்தர், கடைசியாக பேதுருவை "யோனாவின் குமாரனாகிய சீமோனே" என்று அழைத்தார், அதுவும் ஒருமுறை அல்ல மூன்று முறை "யோனாவின் குமாரனாகிய சீமோனே" என்று அழைத்து "நீ என்னை நேசிக்கிறாயா" என்று கேட்டார், அது கர்த்தர் பேதுருவிடம் நீ உன் மூதாதையராகிய யோனாவை நேசிக்கிறாயா? அல்லது, உனக்காக மரணத்தை ருசித்த என்னை நேசிக்கிறாயா? என்பதாகவே இருந்தது - 14.இயேசு மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு தம்முடைய சீஷருக்கு அருளின தரிசனங்களில் இது மூன்றாவது தரிசனம். 15.அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். 16.இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். 17.மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார் - யோவான் 21:14-17
அப்பொழுது பேதுரு, "நான் உம்மை நேசிக்கிறேன்" என்று தன் நாவினால் அறிக்கை செய்து, தன்னை முழுமையாக கர்த்தரின் ஊழியத்திற்கு ஒப்புக்குக் கொடுத்தார், தன்னை "யோனாவின் குமாரனாகிய சீமோன்" என்று சொல்லிக் கொள்ளாமல், தன்னை "இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு" என்று சொல்லி வேதபுத்தகத்தையும் எழுதினார் - 1.இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே சிதறியிருக்கிறவர்களில், 2.பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது. 3.நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக - I பேதுரு 1:1-3
நாம் நம் பெயருடன், நமது படிப்பையோ, பதவியையோ, ஜாதியையோ, நாம் பிறந்த ஊரையோ அல்லது குடும்ப பெயரோ இணைத்திருப்பது, கர்த்தரை காட்டிலும் அதின் மேலிருக்கும் பற்றுதலாய் இருக்குமானால் சீர்படுத்திக் கொள்வோம்.
மேலும், இயேசு கிறிஸ்துவின் நாட்களில், இஸ்ரவேல் தேசத்தில் லட்சக் கணக்கான வாலிபர்கள் இருந்தார்கள், ஆனாலும் கர்த்தர் யோனாவின் குமாரனாகிய பேதுருவை தேடி வந்ததுக்கு ஒரு நோக்கம் உண்டு, அது யோனாவின் மேல் தேவனுக்கு இருந்த அன்பு தான், இப்படி கர்த்தர் யோனாவின் சந்ததியை 500 ஆண்டுகள் கழித்தும் பயன்படுத்துவார் என்றால், நாம் ஏன் நம் பிள்ளைகளை குறித்து கவலை கொள்ள வேண்டும்? கர்த்தருடைய பணியை மாத்திரம் தொடர்ந்து உற்சாகத்தோடு செய்வோம்.