வாசல், ஆடுகளின் மேய்ப்பன், வாசலைக் காக்கிறவன்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
முந்தைய பாகம்: யோனாவின் விளக்கம்
நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, வார்த்தையானவரின் குமாரன் மாத்திரம் அல்ல, அவருக்குள் பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் வாசம் செய்தார்கள், இப்படியாக நம் கர்த்தர் திரியேக தேவனாக இருக்கிறார், ஆனால், இயேசு கிறிஸ்து என்றாலே திருத்துவத்தில் இரண்டாவது நபர் என்பது போல தான் அறிவிக்கப்பட்டது, அதே சமயத்தில் இயேசு கிறிஸ்துவுக்குள் பிதாவானவரும் பரிசுத்த ஆவியானவரும் வாசம் செய்தது உவமைகளாகளாகவும் மறைமுகமாகவும் அறிவிக்கப்பட்டது, இந்த தொகுப்பில், சிலுவையில் வார்த்தையானவரின் குமாரனோடு, பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் பாடுபட்டது எப்படியாக அறிவிக்கப்பட்டது என்பதை பார்ப்போம்.
இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை, சர்வாங்க தகனபலி என்று சொன்ன மோசே, கர்த்தர் யூதா கோத்திரத்தை சேர்ந்தவராய் இருப்பார் என்பதையும், எருசலேமிலே சிலுவையில் அறையப்படுவார் என்பதையும் மறைமுகமாகச் சொல்லி, மேலும் நமக்காக பலியான கர்த்தரை[வார்த்தையானவரின் குமாரனை] வாசல் என்றும், அந்த வாசலிலே வெளிமானையும்[பிதாவானவரின் குமாரன்] கலைமானையும்[பரிசுத்த ஆவியானவரின் குமாரன்] புசிக்கலாம் என்று இரண்டு காரியங்களையும் சொல்லி இருந்தார் - 14.உன் கோத்திரங்கள் ஒன்றில் கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தில்மாத்திரம் நீ உன் சர்வாங்க தகனபலிகளையிட்டு, நான் உனக்குக் கற்பிக்கிற யாவையும் அங்கே செய்வாயாக. 15.ஆனாலும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளும் ஆசீர்வாதத்திற்குத்தக்கதாய், நீ உன் வாசல்களிலெங்கும் உன் இஷ்டப்படியே மிருகஜீவன்களை அடித்துப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும், அவைகளை, வெளிமானையும் கலைமானையும் புசிக்கிறதுபோல புசிக்கலாம் - உபாகமம் 12:14-15
இதை விளக்குவதற்காகவே இயேசு கிறிஸ்து தன்னை வாசல் என்றும், தன்னோடு மேய்ப்பன் மற்றும் வாசலைக் காக்கிறவர் என இருவர் இருக்கிறார்கள் என்றும் உவமையாக சொன்னார், ஆனால் ஒருவரும் அதைப் புரிந்துக் கொள்ளவில்லையாம் - 1.மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். 2.வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான். 3.வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான். 4.அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. 5.அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார். 6.இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை. 7.ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 8.எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை - யோவான் 10:1-8
அதனால் தான் கர்த்தர் இதை ஒரு உதாரணத்தோடு ஒப்பிட்டுச் சொன்னார், அந்நாட்களில் ஆடுகளைத் திருட வருகிறவர்கள் தனியாக வர மாட்டார்கள், குறைந்தது இருவர் இருப்பார்கள், அதில் ஒருவனுக்கு பேர் கள்ளன், மற்றவர்களுக்கு பெயர் கொள்ளைக்காரர்கள், முதலாவது அந்த கள்ளன் ஆடுகள் இருக்கும் தொழுவத்தை கன்னமிட்டு ஒரு துவாரத்தை கண்டு பிடிப்பான், அதன்பின்பு அந்த துவாரத்தின் வழியாக உள்ளே சென்று ஒவ்வொரு ஆடாக வெளியே கொடுக்க, வெளியே இருக்கும் கொள்ளைக்காரன் அதை எடுத்துக் கொண்டு போவான்.
மறுநாள் ஆட்டுக்கு உரிமையாளர் வந்து பார்க்கும் பொழுது, அந்த துவாரத்தை மாத்திரம் பார்த்து, ஆடுகள் திருடப்பட்டிருப்பதை கண்டு வருத்தம் கொள்வான், ஆனால் கள்ளனும் கொள்ளைக்காரனும் அங்கிருக்க மாட்டார்கள்.
இதை ஒரு உதாரணமாக சொல்லி, கர்த்தர் தன்னுடைய திருத்துவதை விளக்கிச் சொன்னார், எப்படியெனில் தன்னை வாசல் என்றும், நீங்கள் என்னை காண்கிறீர்கள், ஆனால் என்னோடு மேய்ப்பன் மற்றும் வாசலைக் காக்கிறவர் என இருவர் இருக்கிறார்கள், அவர்களையும் நீங்கள் அறிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்.
அதனால் தான் தேவன் நோவாவிடம் மூன்று அடுக்குள்ள பேழையை செய்யச் சொன்னார், அதாவது வாசலுள்ள மேலடுக்கு, அதின் வழியாக உட்பிரவேசிக்கும் பொழுது, நாம் மூன்று அடுக்குகளையும் சுதந்தரித்துக் கொள்ளலாம் -.நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத் தாழ்த்தியிலே அதைச் செய்துமுடித்து, பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும் - ஆதியாகமம் 6:16
மூவரின் மரணத்தை சொன்ன கர்த்தர்
இதை சொல்லி, சிலுவையில் வார்த்தையானவரின் குமாரனோடு, பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் மரிக்க வேண்டும் என்பதை இப்படி விளக்கிச் சொன்னார், முதலாவது வார்த்தையானவரின் குமாரன், நாம் நித்திய வீடு என்கிற பரலோக தேவனை சேர்ந்தடையும் வாசலாக இருக்கிறார் என்பதையும், நமக்காக தன் ஜீவனையும் கொடுப்பவர் என்று சொன்னார் - 9.நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். 10.திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் - யோவான் 10:7-10
அதற்கு பின்பு, தனக்குள் வாசம் செய்யும் பரிசுத்த ஆவியானவரின் குமாரனை, ஓநாய்களை கண்டு ஓடிப்போகாத நல்ல மேய்ப்பன் என்றும் [அதாவது வெள்ளம்போல் சத்துரு வரும்போது அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுகிற கர்த்தருடைய ஆவியானவர்] அவரும் சிலுவையில் தன் ஜீவனை தர போகிறார் என்று சொன்னார் - 11.நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். 12.மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளைவிட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். 13.கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான் - யோவான் 10:11-13
அடுத்ததாக, தனக்குள் வாசம் செய்யும் பிதாவானவரின் குமாரனை, நம்மை இழுத்துக் கொள்ளுகிற நல்ல மேய்ப்பன் என்றும், அவரும் சிலுவையில் தன் ஜீவனை தர போகிறார் என்று சொன்னார் - 14.நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், 15.நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். 16.இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். 17.நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். 18.ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார் - யோவான் 10:14-18
அதனால் தான் சங்கீதகாரனாகிய தாவீது, வார்த்தையானவரின் குமாரனை "வாசல்" என்று சொல்லி, அவரோடு இருக்கும் பிதாவானவரின் குமாரனை "மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்" என்று சொல்லி, மறுபடியுமாக "மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார்" என்று பரிசுத்த ஆவியானவரின் குமாரனை குறித்துச் சொன்னார் - 3.யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? 4.கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே. 5.அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான். 6.இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா.) 7.வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். 8.யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுமுள்ள கர்த்தராமே. 9.வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். 10.யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா. (சேலா.) - சங்கீதம் 24:3-10
இங்கே நிற்கிறவர்களில் சிலர்
இயேசு கிறிஸ்து தன்னுடைய சிலுவை மரணத்திற்கு முன்பு, இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று யாரை குறித்துச் சொன்னார்? இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் - லூக்கா 9:27
தன்னுடைய சீஷர்களில் சிலரை குறித்து தான் கர்த்தர் "இங்கே நிற்கிறவர்களில் சிலர்" என்று குறிப்பிட்டு சொன்னார் என்பது பொதுவான அபிப்பிராயம், ஆனால் மரித்து உயிர்த்தெழுந்த இயேசு சீஷர்களிடம் சொன்னதை நன்றாய் ஆராய்ந்துப் பார்த்தால், கர்த்தர் தன்னுடைய சீஷர்களை குறித்து அப்படி சொல்லவில்லை என்பதை அறிந்துக் கொள்ளலாம் - 17.மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். 18.நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைகட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 19.இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறானென்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். 20.பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும், இராப்போஜனம்பண்ணுகையில் அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகிய சீஷன் பின்னே வருகிறதைக் கண்டான். 21.அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான். 22.அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார். 23.ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லையென்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார் - யோவான் 21:21-23
இதை சொன்ன வசனங்களை நன்றாய் ஆராய்ந்துப் பார்த்தால், முதலாவது கர்த்தர் தன்னுடைய மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் குறித்து இப்படியாகச் சொன்னார், ஏனென்றால் அதுவே நாம் தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதற்கு ஆதாரமாய் இருக்கிறது - 22.மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள்படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார் - லூக்கா 9:22
தான் உயிர்த்தெழுந்த பின்பு, தன்னை பின்பற்றுகிறவர்களும் தங்கள் பாடுகளை அதாவது சிலுவையை சுமந்து கொண்டு தான் அவரை பின்பற்ற வேண்டும் என்று சொன்னார் - 23.பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். 24.தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். 25.மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? 26.என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரன் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார் - லூக்கா 9:23-26
அப்படியென்றால், இங்கே நிற்கிறவர்களில் சிலர் என்னோடு மரிப்பார்கள் என்று கர்த்தர் சொன்னதின் அர்த்தம் என்ன? அதாவது, தேவனுடைய ராஜ்யத்துக்கான வழி, சிலுவையில் உறுதி செய்யும் வரை, அவர்கள் மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று என்று சொன்னதின் அர்த்தம் என்ன? அவர்கள் யார் என்பதை காண்பிக்கவே, கர்த்தர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு மலையின்மேல் ஏறி, தனக்குள் வாசம் செய்யும் பிதாவானவரின் குமாரனையும் [மோசேயையும்] பரிசுத்த ஆவியானவரின் குமாரனையும் [எலியாவையும்] காண கிருபை செய்தார், அவர்களே கர்த்தரோடு சிலுவையில் பாடுபட்டு, தேவனுடைய ராஜ்யம் வருவதை உறுதி செய்த பின்பு கர்த்தரோடு ஜீவனை விட்டவர்கள் - 28.இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டு நாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார். 29.அவர் ஜெபம்பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது. 30.அன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி, 31.அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். 32.பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டுபேரையும் கண்டார்கள். 33.அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்துபோகையில், பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது இன்னதென்று அறியாமல் சொன்னான். 34.இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது; அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள். 35.அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று. 36.அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லாமல் அடக்கிவைத்திருந்தார்கள் - லூக்கா 9:28-36
இப்படி தன்னோடு மகிமையோடே காணப்பட்ட இரண்டு பேரை குறித்து கர்த்தர் ஏற்கனவே தன் சீஷர்களிடம் சொல்லியிருந்தார், அதாவது பிதாவானவரின் குமாரனை "பிதாவானவரின் மகிமை" என்றும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனை "பரிசுத்த தூதர்களின் மகிமை" என்றும் சொல்லியிருந்தார் - 26.என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரன் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார் - லூக்கா 9:23-26
அவர்கள் மூவரும் ஒருமைப்பட்டு இயேசு என்கிற ஒரே தெய்வமாக இருந்த படியால் தான், சீஷர்கள் கர்த்தரிடத்தில் "உங்களின் வருகையின் அடையாளம்" என்று சொல்லாமல், "உம்முடைய வருகையின் அடையாளம்" என்ன என்று கேட்டார்கள் - பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள் - மத்தேயு 24:3
ஆனால் பரிசுத்த ஆவியானவரின் குமாரனை, பரிசுத்த தூதர்கள் என பண்மையில் சொல்லக் காரணம் என்ன? பரிசுத்த தூதர்கள் என்பது விசுவாசிகளை குறிக்கிறது என்பது பொதுவான அபிப்பிராயம், அது சரியா? இதை ஆராய்ந்துப் பார்க்கும் முன்பு, மெய்யான ஒளியாகிய இயேசு கிறிஸ்துவை [யோவான் 1:9] குறித்த விளக்கத்தை ஆதியாகமம் புத்தகத்தில் இருந்து பார்ப்போம், இயேசு கிறிஸ்துவின் திருத்துவதை விளக்கவே, தேவன் மூன்று விதமான சுடர்களை உண்டாக்கினார், அதில் சூரியன் பிதாவானவரின் குமாரனையும், சந்திரன் வார்த்தையானவரின் குமாரனையும், நட்சத்திரங்கள் பரிசுத்த ஆவியானவரின் குமாரனையும் குறிக்கிறது, இதில் நமக்கு வெளிச்சத்தை கொடுக்க ஒரு சூரியனையும், ஒரு சந்திரனையும் உண்டாக்கின தேவன், இந்த நட்சத்திரங்களை மாத்திரம் எண்ணிக்கைக்கு அடங்காததாய் படைக்க காரணம் என்ன? ஏனென்றால் அது நம்மெல்லோரையும் நிரப்பும் பரிசுத்த ஆவியானவரை குறிக்கிறது - 14.பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். 15.அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 16.தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். 17.அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், 18.பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 19.சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று - ஆதியாகமம் 1:14-19
இப்படி நம்மெல்லோரையும் நிரப்பும் பரிசுத்த ஆவியானவரின் குணாதிசயத்தை விளக்கவே, சாலொமோன் ஞானி, தேவனுடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை "ஒரே பிள்ளை" என்றுஅழைத்து, கர்த்தரின் திருத்துவத்தை விளக்க வார்த்தையானவரின் குமாரனை "சந்திரனைப்போல் அழகுள்ளவர்" என்றும், பிதாவானவரின் குமாரனை "சூரியனைப்போல் பிரகாசமுள்ளவர்" என்றும் சொல்லி, பரிசுத்த ஆவியானவரின் குமாரனை "கொடிகள் பறக்கும் படை" என்று பாடியுள்ளார் - 9.என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள். 10.சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம்போல் உதிக்கிற இவள் யார்? - உன்னதப்பாட்டு 6:9-10
அடுத்த பாகம்: போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்