நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் உபதேசங்களில் மிகவும் முக்கியமான ஒன்று, பெருமைக்கு வழி சேர்க்கும் எந்த ஒரு காரியமும் நம்மிடத்தில் இருக்க கூடாது என்பதாகும், அதிலும் குறிப்பாக தேவனுக்கு படைக்கும் காணிக்கையை மற்றவர்களிடம் தெரியப்படுத்துவது, இல்லாவிட்டால் ஏறெடுக்கும் ஜெபத்தை மற்றவர்களிடம் சொல்லுவது போன்ற காரியங்கள் நம்மிடம் அறவே இருக்க கூடாது.
உதாரணத்திற்கு ஆபிரகாம் ஜெபம் செய்ய அபிமெலேக்கின் வாழ்க்கையில் கர்த்தர் ஒரு பெரிய அற்புதத்தை செய்தார் - 17.ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளின்நிமித்தம் கர்த்தர் அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்தபடியால், 18.ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம்பண்ணினார் - ஆதியாகமம் 20:17-18
ஆனால் அடுத்த முறை ஆபிரகாம் அபிமலேகை சந்தித்தபோது நான் உனக்காக ஜெபம் செய்தேன், அதனால் தான் உனக்கு பிள்ளைகள் பிறந்தது என்று அவன் சொல்லவே இல்லை, ஏனென்றால் நமக்குள் இருந்து வேண்டிக் கொள்பவர் பரிசுத்த ஆவியானவராக இருக்கிறார் - 22.அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார். 23.ஆகையால், நீ எனக்காவது, என் குமாரனுக்காவது, என் பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல், நான் உனக்குச் செய்த தயவின்படியே, நீ எனக்கும், நீ தங்கியிருக்கிற இந்தத் தேசத்திற்கும், தயவு செய்வேன் என்று இங்கே தேவன் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான் - ஆதியாகமம் 21:22-23
உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே
இதை தான் இயேசு கிறிஸ்து நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு தாரை ஊதுவியாதே என்று சொன்னார் - 1.மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. 2.ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 3.நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலது கை செய்கிறதை உன் இடது கை அறியாதிருக்கக்கடவது; 4.அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார் - மத்தேயு 6:1-4
நாம் ஏறெடுக்குக்கும் ஜெபங்களும் மற்றவர்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை - 5.அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 6.நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார் - மத்தேயு 6:5-6
நம்முடைய உபவாசங்களும் மற்றவர்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை - 16.நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 17.நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. 18.அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார் - மத்தேயு 6:16-18
தெரியப்படுத்து
ஆனால் ஓன்று மாத்திரம் எல்லோரும் அறிய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், அது நம்முடைய சாந்தகுணம் - உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார் - பிலிப்பியர் 4:5