முந்தைய பாகம்: என்னைத் தொடாதே
இதுவரை, "இயேசுவின் வார்த்தைகள்" என்கிற தலைப்பில், கர்த்தர் தன்னுடைய ஊழிய நாட்களில் செய்த தெய்வீக அற்புதங்களை கடந்த சில தொகுப்புகளில் பார்த்தோம், இந்த தொகுப்பில், கர்த்தர் மரித்து உயிர்த்தெழுந்த பின்பும், தான் சொன்ன வார்த்தைகளை எப்படியாக நிறைவேற்றினார் என்பதை பார்ப்போம்.
இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் முதல் ஆளாக இருந்தவர் யோனாவின் மகனாகிய சீமோன், கலிலேயாக் கடலோரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்த சீமோனை, இயேசு கிறிஸ்து ஊழியத்திற்கு அழைத்து, அவனுக்கு "பேதுரு" என்று பெயரிட்டார் - 14.அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும், 15.வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார். 16.அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் "பேதுரு" என்கிற பெயரிட்டார். 17.செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார். 18.அந்திரேயா, பிலிப்பு, பர்த்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன், 19.அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே - மாற்கு 3:14-19
கர்த்தர் சீமோனை, "பேதுரு" என்று அழைத்ததற்கு காரணம், ஒரு பிரதான அப்போஸ்தலராக ஊழியம் செய்வதற்கு மாத்திரம் அல்ல, "யோனாவின் மகனாகிய சீமோன்" என்கிற உலக அடையாளங்களோடு நரகத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தவரை, தன்னுடைய பிள்ளையாக மாற்றி, பரலோக ராஜ்யத்தில் சேர்க்கவே - 40.யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். 41.அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். 42.பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம். 43.மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக்கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார் - யோவான் 1:40-43
இயேசு கிறிஸ்து, யோனாவின் மகனாகிய சீமோனுக்கு "பேதுரு" என்று பெயரிட்டு இருந்தாலும், தன்னுடைய ஊழிய நாட்களிலெல்லாம், அவனை "சீமோனே" என்று அழைத்தது தான் அதிகம், உதாரணத்திற்கு இயேசு கிறிஸ்து தான் சிலுவைக்கு போகும் முன்பு, கெத்சமனே தோட்டத்தில் பேதுருவை "சீமோனே" என்று தான் அழைத்தார் - பின்பு அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: "சீமோனே", நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா? - மாற்கு 14:37
பேதுருவுக்கு கர்த்தர் தன்னை "யோனாவின் குமாரனாகிய சீமோனே" என்று அழைப்பதில் தான் அலாதி பிரியம், அது பேதுருவுக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும், கௌரவத்தையும் கொடுத்தது, ஏனென்றால், அவர் மீனின் வயிற்றில் மூன்று நாள் இருந்த, பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியாகிய யோனாவின் வம்சத்தில் வந்தவர் - 15.அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். 16.சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17.இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார் - மத்தேயு 16:15-17
உதாரணத்திற்கு, கர்த்தருடைய தூதன் யோசேப்பை, "தாவீதின் குமாரனாகிய யோசேப்பே" என்று அழைத்ததற்கு காரணம், யோசேப்பின் தகப்பனார் பெயர் தாவீது என்பதற்காக அல்ல, மாறாக அவர் தாவீதின் வம்சத்தில் வந்தவர் என்பதினால் தான், அதுபோல தான் இந்தப் பேதுருவும் யோனா தீர்க்கதரிசியின் வம்சத்தில் வந்தவர் - 20.அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. 21.அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான் - மத்தேயு 1:20-21
பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியாகிய யோனா வாழ்ந்த ஊர் காத்தேப்பேர் என்பதாகும், அது இயேசு கிறிஸ்து வாழ்ந்த நசரேத்துக்கு மிக அருகாமையிலும், நசரேத்திலுருந்து கப்பர்நகூமுக்கு போகும் வழியில் தான் இருக்கிறது, அதனால், கர்த்தர் தன்னை "யோனாவின் குமாரனாகிய சீமோனே" என்று அழைப்பதில் பேதுருவுக்கு ஒரு அலாதி பிரியம் - காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன்[யோவாசின் குமாரன் யெரொபெயாம்] ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான் - II இராஜாக்கள் 14:25
இப்படியாக, இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களில் முதல் ஆளாக இருந்த பேதுரு, கர்த்தர் சிலுவைக்கு போகும் சமயத்தில் அவரை மருதலித்து சபித்தான், கர்த்தரின் தெய்வத்துவதை அறிந்த பேதுருவுக்கு, கர்த்தரை குறித்து தான் சொன்ன வார்த்தைகளையெல்லாம் அவர் அறிவார் என்பது தெரியும், அதனால் அவருடைய இருதயத்தில் ஒரு குற்ற உணர்வு இருந்து கொண்டுதான் இருந்தது - 69.வேலைக்காரி அவனை மறுபடியும் கண்டு: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள். 70.அவன் மறுபடியும் மறுதலித்தான். சற்றுநேரத்துக்குப்பின்பு மறுபடியும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து: மெய்யாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள். 71.அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். 72.உடனே சேவல் இரண்டாந்தரம் கூவிற்று. சேவல் இரண்டுதரங் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவு கூர்ந்து, மிகவும் அழுதான் - மாற்கு 14:69-72
இவைகளெல்லாம் நடந்து முடிந்த பின்பு, சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்த கர்த்தர், பேதுருவை சந்தித்தார், பொதுவாக தன்னை "யோனாவின் குமாரனாகிய சீமானே" என்று அழைப்பதை விரும்பும் பேதுரு, இந்த முறை கர்த்தர் தன்னை "பேதுரு" என்று அழைக்கவே விரும்பினான், ஆனால் கர்த்தரோ அவனை "யோனாவின் குமாரனாகிய சீமோனே" என்று அழைத்து "நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா" என்று கேட்டார்.
ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, மூன்று முறை "யோனாவின் குமாரனாகிய சீமோனே" என்று அழைத்து "நீ என்னை நேசிக்கிறாயா" என்று கேட்டார், அது கர்த்தர் பேதுருவிடம் நீ உன் மூதாதையராகிய யோனாவை நேசிக்கிறாயா? அல்லது, என்னை நேசிக்கிறாயா? என்பதாகவே இருந்தது - 14.இயேசு மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு தம்முடைய சீஷருக்கு அருளின தரிசனங்களில் இது மூன்றாவது தரிசனம். 15.அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். 16.இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். 17.மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார் - யோவான் 21:14-17
அப்பொழுது பேதுரு, "நான் உம்மை நேசிக்கிறேன்" என்று மனதார அறிக்கையிட்டு, தன்னை முழுமையாக கர்த்தரின் ஊழியத்திற்கு ஒப்புக்குக் கொடுத்தார், அதன் பின்பு, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு தரிசனத்திலும், கர்த்தர் அவனை "பேதுரு" என்றே அழைத்தார்.
பேதுருவும், தன்னை "யோனாவின் குமாரனாகிய சீமோன்" என்று சொல்லிக் கொள்ளாமல், தன்னை "இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு" என்று சொல்லி கர்த்தரின் ஊழியத்தை செய்து முடித்தார், பேதுரு தன்னை எப்படியாக அழைத்துக்கொண்டார் என்பதற்கு, அவருடைய எழுத்துகளே இன்றளவும் சாட்சியாக இருக்கிறது - 1.இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே சிதறியிருக்கிறவர்களில், 2.பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந் தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது. 3.நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக - I பேதுரு 1:1-3
நீ பேதுருவாய் இருக்கிறாய்
இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழிய நாட்களில் சீமோனுக்கு "பேதுரு" என்று பெயரிட்டிருந்தாலும், அவன் பிதாவின் அருளால் இயேசு கிறிஸ்துவை "நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து" என்று அறிக்கை செய்த பொழுது தான், "நீ பேதுருவாய் இருக்கிறாய்" என்று கர்த்தர் உறுதிப்படுத்தினார் - 13.பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். 14.அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். 15.அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். 16.சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17.இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 18.மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. 19.பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார் - மத்தேயு 16:13-19
மேலும், பேதுரு இயேசு கிறிஸ்துவை மருதலித்து சபித்து சத்தியம் பண்ணியிருந்தாலும், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நற்செய்தியை அறிவிக்க, பரலோகம் பேதுருவின் பெயரை தான் முதலாவதாக உச்சரித்தது - 6.அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம். 7.நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான் - மாற்கு 16:6-7
இன்று உலகமெங்கும் ஒவ்வொரு வினாடியும் கோடிக்கணக்கான ஜெபங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஏறெடுக்கப்படுகின்றன, இப்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபிப்பதே கிறிஸ்தவ ஜீவியத்தின் ஆதாரமாக இருக்கிறது, இதை முதலாவது செய்து காட்டியது பேதுருவே, சபைக்கு அடித்தளமான இந்த இரகசியத்தை பாறை என்று அழைக்கப்பட்ட பேதுருவின் மூலமாகவே தேவ ஆவியானவர் வெளிப்படுத்தினார் - 1.ஜெபவேளையாகிய ஒன்பதாம் மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். 2.அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டு வந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள். 3.தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான். 4.பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். 5.அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான். 6.அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி; 7.வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது. 8.அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான் - அப்போஸ்தலர் 3:1-8
எந்த நாளில், பேதுரு இயேசு கிறிஸ்துவை மறுதலித்துதானோ, எந்த சம்பவம் பேதுருவை பாரப்படுத்திக் கொண்டிருந்ததோ, அதே போன்ற ஒரு பஸ்காபண்டிகை நாளில், தேவன் அவனை சிறைச்சாலையிலிருந்து விடுவித்து, பேதுரு இயேசுவை மறுதலித்த நாளையே அவனுக்கு சாட்சியாக மாற்றினார் - 4.அவனைப் பிடித்துச் சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாமென்று எண்ணி, அவனைக் காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான். 5.அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காக தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள். 6.ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரைபண்ணிக்கொண்டிருந்தான்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். 7.அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது, அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது - அப்போஸ்தலர் 12:4-8
அதே பேதுரு தான், புறஜாதியானாகிய கொர்நேலியுக்கு ஞானஸ்நானம் கொடுத்து, இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பு புற ஜாதிகளுக்கும் செல்ல வழிவகை செய்தார் - 44.இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்தஆவியானவர் இறங்கினார். 45.அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும், 46.பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்தஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள். 47.அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்தஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, 48.கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள் - அப்போஸ்தலர் 10:44-48
அடுத்த பாகம்: பொவனெர்கேஸ்