முந்தைய பாகம்: நீ போதகனாயிருந்தும்?
இயேசு கிறிஸ்துவே நமக்கு மெய்யான மகா பரிசுத்த பலிபீடமாய் இருக்கிறார் என்றும், நாம் அவரை தொட்டு பரிசுத்தத்தையும், அதனோடு கிடைக்கும் சுகத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தீர்க்கதரிசனம் சொல்லுகிறது - 36.பாவநிவிர்த்திக்காக ஒவ்வொருநாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவநிவாரண பலியாகப் பலியிட்டு; பலிபீடத்துக்காகப் பிராயச்சித்தம் செய்த பின், அந்தப் பலிபீடத்தைச் சுத்திசெய்ய வேண்டும்; அதைப் பரிசுத்தப்படுத்தும்படி அதை அபிஷேகம் பண்ணக்கடவாய். 37.ஏழுநாளளவும் பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அதைப் பரிசுத்தமாக்கக்கடவாய்; பலிபீடமானது மகா பரிசுத்தமாயிருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும் - யாத்திராகமம் 29:36-37
அதனால் தான், இயேசு கிறிஸ்து ஒரு குஷ்டரோகியை தொட்ட பொழுது, கர்த்தரிடமிருந்த புறப்பட்ட பரிசுத்தம், அந்த குஷ்டரோகியை சுத்தமாக்கினது மாத்திரம் இல்லாமல் அவனின் குஷ்டரோக வியாதியையும் சுகப்படுத்திவிட்டது - 40.அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். 41.இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். 42.இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான் - மாற்கு 1:40-42
மேலும், இயேசு கிறிஸ்துவின் வல்லமை, ஒரு குறிப்பிட்ட மனிதனை மாத்திரமல்ல, இந்த உலகத்திலுள்ள எல்லோரையும் பரிசுத்தமாக்க வல்லமையுள்ளது என்பதை கெனேசரேத்து நாட்டினர் செய்து காட்டினார்கள் - 34.பின்பு, அவர்கள் கடலைக் கடந்து, கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள். 35.அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து, 36.அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள் - மத்தேயு 14:34-36
காரியம் இப்படி இருக்கும் பொழுது, கர்த்தர் மகதலேனா மரியாளிடம் "என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை" என்று சொன்னதின் அர்த்தம் தான் என்ன? தன்னை யாரும் தொடக்கூடாது என்பது கர்த்தரின் நோக்கமாக இருந்திருக்குமானால், மகதலேனா மரியாள் தன்னை நெருங்க முடியாத தூரத்திலோ, அல்லது மலையின் மேல் இருந்தவாரோ தரிசனம் தந்திருக்கலாமே! - 15.இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள். 16.இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். 17.இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார் - யோவான் 20:15-17
ஒரு சின்ன உதாரணத்தோடு பார்த்தால், இதை எளிதாக புரிந்துக் கொள்ளலாம், ஒரு குழந்தை, தன் இரண்டு கைகளையும் உயர்த்தியவாறு தன் தாயாரிடம் வர, அந்தத் தாயாரோ "உன்னை தூக்க முடியாது, இப்பொழுது நான் சமைத்துக் கொண்டிருக்கிறேன்" என்று பதில் சொன்னார். தாயார் சொன்ன பதிலின் உண்மையான அர்த்தம் என்னவென்றால், "சமையல் வேலையை முடித்தவுடன், உன்னை தூக்கி என் மடியில் வைத்துக் கொள்ளுகிறேன்" என்பதுதான், அது அந்த குழந்தைக்கும் தெரியும்.
ஒருவேளை, அந்தத் தாயார் "உன்னை தூக்க முடியாது" என்று சொல்லியிருந்தால், அவருக்கும் அந்த குழந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுதான் அர்த்தம், ஆனால் அந்தத் தாயாரோ "உன்னை தூக்க முடியாது, இப்பொழுது நான் சமைத்துக் கொண்டிருக்கிறேன்" என்றே பதில் சொன்னார், அது போல தான், நம் கர்த்தர் "என்னைத் தொடாதே" என்று சொல்லாமல், "என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை" என்று சொன்னார், ஏனென்றால் நம் கர்த்தர் பிதாவினிடத்திற்கு ஏறிப்போன பின்பும், அதாவது பரலோகத்திற்கு சென்ற பின்பும் நாம் அவரை தொட முடியும் என்பதை உணர்த்துவதற்காகத் தான் "என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை" என்று சொன்னார்.
மேலும் மகதலேனா மரியாள் மாத்திரம் அல்ல, நாமும் அவரை தொட்டு சுகத்தை பெற்றுக் கொள்ள முடியும் என்பதற்காக தான் "நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு" என்றும் கட்டளையிட்டார்.
அது மாத்திரம் இல்லாமல், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார், அவர் பூமியில் இருக்கும் பொழுது கெனேசரேத்து நாட்டை சேர்ந்த பிணியாளிகளெல்லாரும் தொட்டு சுகம் பெற முடியும் என்றால், பரலோகத்தில் இருக்கும் அவரை நாம் தொட்டு சுகம் பெற முடியும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை, நமக்காக தன் ஜீவனையே தந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசத்தோடு தொடுவோம், பரிபூரண சுகம் பெறுவோம் - இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் - எபிரெயர் 13:8
அடுத்த பாகம்: நீ கேபா என்னப்படுவாய்