முந்தைய பாகம்: நீ அவரைக் கண்டிருக்கிறாய்
யோவான் சுவிசேஷ புஸ்தகத்தில் சொல்லப்பட்ட "யூதருடைய பண்டிகை" என்பது, பழுதற்ற ஆட்டுக்குட்டியை பலியிடும் பஸ்கா பண்டிகையையே குறிக்கிறது, அதை நிறைவேற்றும் அடையாளமாக தான், பாவமற்ற தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசு கிறிஸ்து எருசலேமுக்கு வந்தார் - 1.இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார். 2.எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு. 3.அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். 4.ஏனெனில் சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான் - யோவான் 5:1-4
அந்த எருசலேமிலே, ஆட்டு வாசலினருகே, ஐந்து மண்டபங்களுடன் இருந்த சுகமளிக்கும் பெதஸ்தா குளம், நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவையே குறிக்கிறது, எருசலேம் பட்டணத்திலிருந்த ஐசுவரியவான்களுக்கும், நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தவர்களுக்கும் இந்த குளம் ஒரு பொருட்டே கிடையாது, அவர்கள் அங்கு வரவும் மாட்டார்கள், ஆனால் அங்கிருந்த குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர்களுக்கு அந்த குளம் ஒரு ஜீவ விருட்சமாய், அவர்களின் எதிர் காலமாய், நம்பிக்கையாய் இருந்தது.
அவர்கள் ஒரு சிறு கூட்ட மக்கள், உலகத்தாரால் கைவிடப்பட்டவர்கள், உலகத்தில் அவர்களுக்கு அங்கீகாரமும், மதிப்பும் மரியாதையும் இருக்காது, அப்படிப்பட்டவர்கள் தான் அந்த குளத்தை சுற்றி அமர்ந்திருந்தார்கள், அதுதான் கிறிஸ்தவ ஜீவியமாய் இருக்கிறது, உலகத்தாரிடம் அவர்களுக்கு அங்கீகாரம் இருக்காது, இயேசுவே அவர்களின் நம்பிக்கையாய் இருக்கிறார்.
அந்த பெதஸ்தா குளத்திலிருந்து எப்பொழுது சுகமளிக்கும் வல்லமை வெளிப்படுமென்றால், அது அந்த குளம் கலக்கப்படும் பொழுது தான் வெளிப்படும், இதில் "கலக்குவது" என்பதின் கிரேக்க மொழியின் அர்த்தம் பாடுபடுவது [trouble] என்பதாகும், அந்த தெளிந்த தண்ணீர் கலக்கப்படும் பொழுது, அது ஆலையில் இருந்து வழிந்தோடும் திராட்சை ரசம் போல தான் இருக்கும், அது ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தினால் மாத்திரமே நமக்கு பாவமன்னிப்பும், இரட்சிப்பும், நித்திய ஜீவனும் உண்டு என்பதை காலம் காலமாக தீர்க்கதரிசனமாக அறிவித்துக் கொண்டிருந்தது.
இந்த பெதஸ்தா குளத்தின் அருகே, 38 வருடம் படுத்த படுக்கையாய் கிடந்த ஒருவனுக்கு, தண்ணீர் கலங்கினவுடனே, குளத்தில் இறங்கி சுகம் பெற ஆசை, ஆனால் தண்ணீர் கலங்கினவுடனே போக முடியாத ஒரு பரிதாபமான சூழ்நிலை. இயேசு கிறிஸ்து செய்த இன்னொரு அற்புதத்தில், சீலோவாம் குளத்தின் அருகே பிச்சை எடுத்துக் கொண்டிருந்தவனுக்கு பார்வை இல்லை, ஆனால் அவனால் சீலோவாம் குளத்திற்கு போக முடிந்தது, கர்த்தரும் "சீலோவாம்" குளமாக மாறி, அவனுக்கு பார்வை கொடுத்தார், அதை கடந்த தொகுப்பில் பார்த்தோம்.
ஆனால், இவனுக்கோ குளத்துக்கு போக ஆசை, ஆனால் போகமுடியாத ஒரு பரிதாபமான சூழ்நிலை, அப்பொழுது தான் பெதஸ்தா குளமாக இருந்தவர், பண்டிகை நாளன்று இயேசு கிறிஸ்துவாக அவனுக்கு தரிசனமாகி, அவனுடைய விருப்பத்தை கேட்டார், 38 வருடம் படுத்த படுக்கையாய் கிடந்தவனும், கர்த்தரிடம், குளத்தில் இறங்க வேண்டும் என்கிற தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தான், உடனே, பெதஸ்தா குளமாக இருந்த கர்த்தர், அவனுக்கு பரிபூரண சுகத்தை கொடுத்தார் - 5.முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான். 6.படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார். 7.அதற்கு வியாதிஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான். 8.இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். 9.உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது - யோவான் 5:5-9
சிலர் மருத்துவமனையில் சிகிச்சை செய்து, சுகமடைந்து வரும் பொழுது, அவர்களால் உடனே எழும்பவோ, அல்லது நடக்கவோ முடியாது, அதற்கு மருத்துவர்கள் அனுமதிக்கவும் மாட்டார்கள், அவர்களுக்கு சில பயிற்சிகளை கொடுத்து, அதன் பின்புதான் நடக்க அனுமதிப்பார்கள், சில நாட்கள் படுக்கையில் இருப்பவர்களுக்கே இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இருக்குமானால், 38 வருடம் படுக்கையில் கிடந்த ஒருவனால், சுயமாக எழும்பி உட்கார கூட முடியாது, ஆனால் இங்கு இயேசு கிறிஸ்து, 38 வருடம் படுத்த படுக்கையாய் கிடந்தவனை, ஒரே நொடிப் பொழுதில் சுகமாக்கி, அவன் உடனே எழும்பவும், தன் படுக்கையை தூக்கிக்கொண்டு போகவும் கிருபை செய்தார், இது எந்த ஒரு மருந்தினாலும் மருத்துவராலும் முடியாத காரியம்.
சீலோவாம் குளத்தில் கழுவி பார்வையடைந்தவனுக்கு, தனக்கு பார்வை கொடுத்தவரின் பெயர் "இயேசு" என்பது தெரியும், ஆனால் அவன் கர்த்தரை பார்த்ததில்லை, தனக்கு கண்கள் இல்லாததினால், தனது முதல் சந்திப்பில் கர்த்தரை அவனால் பார்க்க முடியவில்லை, ஆனால் இவனோ, தனது முதல் சந்திப்பில் இயேசுவை பார்த்திருந்தான், ஆனால் அவர் யார் என்பதை அறியாமல் இருந்தான், அதனால் தான், தன்னை விசாரித்தவர்களிடம், "என்னைச் சொஸ்தமாக்கினவர்" என்று சொல்ல முடிந்ததே ஒழிய, "என்னைச் சொஸ்தமாக்கின இயேசு" என்று சொல்லத் தெரியவில்லை - 10.ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள். 11.அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைச் சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான். 12.அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள். 13.சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னாரென்று அறியவில்லை; அவ்விடத்தில் ஜனங்கள் கூட்டமாயிருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார் - யோவான் 5:10-13
அவன் சரீர பிரகாரமாக, பரிபூரண சுகத்தை பெற்றிருந்தான், ஆனால் தனக்கு சுகம் தந்த "இயேசுவை" அறியாமல் இருந்தால், ஆனால் வேதாகமம் சொல்லுகிறது, இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்ளுவதே நித்தியஜீவன் என்று, அதாவது நித்திய சுகம் என்று - ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன் - யோவான் 17:3
38 வருடம் படுத்த படுக்கையாய் கிடந்து, சுகம் பெற்றிருந்தான்,ஆனால் இயேசுவை இன்னும் அறியாமல் இருந்தான், அவன் சரீர பிரகாரமாக சொஸ்தமாகியிருந்தான், ஆனால் பரலோக ராஜ்யத்திற்கான சுகத்தை அவன் இன்னும் பெறவில்லை, அதனால் தான், இயேசு கிறிஸ்து அவனுக்கு மறுபடியும் தரிசனமானார், கர்த்தரின் சத்தத்தை கேட்டவுடனே, தன்னை குணமாக்கின இயேசுவை அறிந்துக் கொண்டான், அப்பொழுது, கர்த்தர் சொன்னது தான் "இதோ, நீ சொஸ்தமானாய்" என்பதாகும் - 14.அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார். 15.அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான் - யோவான் 5:14-15
எத்தனை நாட்கள் கழித்து, இயேசு கிறிஸ்து அவனை தேவாலயத்திலே சந்தித்தார் என்பது சொல்லப்படவில்லை, ஆனால் அவன் தன் முதல் சந்திப்பில்லையே சுகத்தை பெற்றிருந்தான், அவன் தன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து பொழுது, இயேசு கிறிஸ்து, "இதோ, நீ சொஸ்தமானாய்" என்று சொல்லவில்லை, யூதர்கள் அவனை விசாரித்த பொழுது "இதோ, நீ சொஸ்தமானாய்" என்று சொல்லவில்லை, கடைசியாக அவன் இயேசு கிறிஸ்துவை அறிந்துக் கொண்ட பொழுது தான் "இதோ, நீ சொஸ்தமானாய்" என்று சொன்னார்.
இனிப் பாவஞ்செய்யாதே
அப்பொழுது கர்த்தர் "அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே" என்று சொன்னது, ஒரு பரிசுத்த வாழ்க்கைக்கான அழைப்பாகவும், தேவனுடைய பிள்ளையாக மாற்றினதின் அடையாளமாகவும், நாம் இவ்வுலகத்திலிருந்து வேறு பிரிக்கப்பட்டவர்கள் என்பதின் அடையாளமாகவும் இருந்தது.
மேலும், "இனிப் பாவஞ்செய்யாதே" என்று சொல்லும் பொழுது, 38 வருடங்களாக படுக்கையில் கிடந்த அவன், ஒரு மதுபான கடையிலோ அல்லது ஒரு விபச்சார விடுதியில் வாழ்ந்தவன் கிடையாது, ஆனால் இயேசுவை அறியாமல் இருந்தான், அப்படிப் பார்க்கும்போது, ஒருவன் கர்த்தரை அறியாமல் இருப்பது, தேவனுடைய பார்வை பாவமாக இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம், ஏனென்றால் அவரே நம்மை சிருஷ்டித்தவர், அவர் நமக்குள் வாசம் செய்யாவிட்டால், நமக்கு நித்திய ஜீவனும் கிடையாது, அப்படியென்றால் இயேசு கிறிஸ்துவை அறியாமல் இருப்பது ஒரு பாவம் தானே.
அடுத்ததாக அவன் என்ன செய்தான், "இனிப் பாவஞ்செய்யாதே" என்று கர்த்தர் சொன்னதை கேட்டவுடனே இயேசுவை அறிவிக்கிற ஆக மாறிவிட்டான், அப்படியென்றால், கர்த்தருக்கு ஊழியம் செய்யாமல் இருப்பதும் ஒரு பாவமாகத்தான் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம், தேவனுடைய பிள்ளைகளுக்கு பரிசுத்த வாழ்க்கை, என்பது ஒரு அத்தியாவசியமான அடையாளம், அதனோடு நாம் கிறிஸ்துவினால் நிரப்பப்பட்டவர்களாகவும், அவருக்காக ஊழியம் செய்கிறவர்களாகவும் இருக்க வேண்டும்.
அடுத்த பாகம்: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா?