கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்
கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்
முந்தைய பாகம்: உன்னிடத்தில் நீ அன்புகூருவது போல
யூதர்கள் தங்கள் கைகளையும் கால்களையும் அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக் கொள்வது வழக்கம், ஒருவர் மரித்து விட்டால் அவரின் சரீரத்தை கூட குளிப்பாட்டி, அதன் பின்பு தான் அடக்கம் செய்வார்கள், உலகிலுள்ள எல்லா மதங்களும் ஏதோ ஒரு வகையில் இந்த வழக்கத்தை கடைப்பிடிக்கிறார்கள், இப்படி கைகளையும் கால்களையும் சரீரத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்வதினால் நாம் பரலோகத்திற்கு போக முடியாது, மாறாக, நம்முடைய இருதயம் பாவக் கரையற்று சுத்தமாக இருந்தால் மாத்திரமே பரலோகத்திற்கு போக முடியும், அதனால் தான், தேவன் தன்னுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை பாவம் போக்கும் பலியாக இந்த பூமிக்கு அனுப்பினார், இயேசு கிறிஸ்துவின் ரத்தமே நம்மை கழுவி சுத்திகரித்து பரலோக ராஜ்யத்தை சுதந்திரிக்க செய்யும்.
காரியம் இப்படியிருக்க, வெளிப்புறமான சுத்தத்தை நம்பின ஒரு பரிசேயன், இயேசு கிறிஸ்துவை தன்னுடனேகூட பகற்போஜனம் பண்ண அழைத்தான், அவன் கர்த்தரை போஜனம் பண்ண அழைத்த விதத்தை நாம் சற்றே ஆராய்ந்து பார்க்க வேண்டும், ஏனென்றால், தலைமை பொறுப்பில் இருக்கிறவர்கள் தான், ஒருவரை சாப்பிட அழைக்கும் பொழுது "என்னோடு போஜனம் பண்ண வாருங்கள்" என்று அழைப்பார்கள், இன்றைக்கும் வெளிநாடுகளில் "முதலமைச்சருடன் இரவு உணவு" என்று விருந்துக்கு அழைப்பதுண்டு, இங்கு இந்த பரிசேயன் தன்னை அந்தஸ்தில் உயர்ந்தவனாக நினைத்ததால் தான், படைத்த தேவனையே தன்னோடு பகற்போஜனம் பண்ண அழைத்தான் - 37.அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், பரிசேயன் ஒருவன் தன்னுடனேகூட அவர் பகற்போஜனம் பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் போய்ப் பந்தியிருந்தார். 38.அவர் போஜனம்பண்ணுகிறதற்குமுன் கைகழுவாமலிருந்ததைப் பரிசேயன் கண்டு, ஆச்சரியப்பட்டான். 39.கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயராகிய நீங்கள் போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்கள் உள்ளமோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது. 40.மதிகேடரே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ? 41.உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும். 42.பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே - லூக்கா 11:37-42
தன்னை விருந்துக்கு அழைத்தவரை, வாழ்த்துவதும், பரிசுகள் அளிப்பதும் இந்த உலகத்தின் நியதி, ஆனால் இங்கு கர்த்தர் தன்னை விருந்துக்கு அழைத்தவனை, மதிகேடனே என்று அழைத்து, அவனின் பாவ உணர்வும், தேவ அன்பும் இல்லாத இருதயத்தை சுட்டிக் காட்டினார்.
இந்த பாவ உணர்வும், தேவ அன்பும் இல்லாத இருதயத்தை குறித்து, கர்த்தர் சில உவமைகளை சொன்னார், அது மார்க் சுவிசேஷம் புஸ்தகத்தில் பதிவிடப்பட்டுள்ளது, உவமைகள் என்றாலே, அதற்கு நேரடியான ஒரு அர்த்தம் இருக்கும், அது இந்த உலக மக்களுக்குரியது, அதேசமயத்தில் அந்த உவமைகளுக்கு மறைமுகமான அர்த்தமும் இருக்கும், அது தேவனுடைய பிள்ளைகளுக்குரியது, அவைகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்
முதலாவதாக, கர்த்தர் பாவ உணர்வற்ற இருதயத்தைக் குறித்து சொன்ன உவமை தான் "மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டு, கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்களே" என்று கேட்ட கேள்வியாகும் - 1.எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். 2.அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர் கழுவாத அசுத்த கைகளாலே போஜனம்பண்ணுகிறதை அவர்கள் கண்டு குற்றம்பிடித்தார்கள். 3.ஏனெனில் பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கைக்கொண்டு, அடிக்கடி கைகழுவினாலொழியச் சாப்பிடமாட்டார்கள். 4.கடையிலிருந்து வரும்போதும் ஸ்நானம்பண்ணாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும் கிண்ணங்களையும் செப்புக்குடங்களையும் மணைகளையும் கழுவுகிறதுமல்லாமல், வேறு அநேக ஆசாரங்களையும் கைக்கொண்டுவருவார்கள். 5.அப்பொழுது, அந்தப் பரிசேயரும் வேதபாரகரும் அவரை நோக்கி: உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கை கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள். 6.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும், 7.மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான். 8.நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்து வருகிறீர்கள் என்றார் - மாற்கு 7:1-8
இயேசு கிறிஸ்து, மனுஷருடைய பாரம்பரியம் என்று சொன்னது, முன்னோர்களின் பாரம்பரியத்தையோ, அல்லது ஒரு சமூகத்தின் கலாச்சாரத்தையோ குறித்துச் சொல்லவில்லை, மாறாக, ஆதாம் தொடங்கி தலைமுறை தலைமுறையாகத் நம்மை தொடர்ந்து வரும் பாவத்தையே அப்படிச் சொன்னார்.
மேலும், பாவத்தை மறைக்க நாம் செய்யும் காரியங்களை தான் "கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்களே" என்று கேட்டார், உதாரணமாக, ஒரு கொலைகாரன் தான் சிந்திய இரத்தத்தின் தடயங்களை மறைக்கத் தனது கத்தியை கழுவுவான், அது போலவே, ஒரு திருடன், தான் செய்த திருட்டை மறைக்கத் தனது கைரேகை தடயங்களை துடைப்பான், அது போலவே, ஒரு விபச்சார பாவம் செய்தவன், தன் அந்தரங்க உறுப்புகளைக் கழுவுவான், சில சமயங்களில், இந்த மறைக்கிற காரியம் கருக்கலைப்பு[கருப்பையைக் கழுவுதல்] வரை செல்லுகிறது.
இந்த பாவம் ஆதாமின் மீறுதல்களினிமித்தம் உண்டானது, இதை தான், "முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கைக்கொண்டு அடிக்கடி கைகழுவுகிறவன்" என்றும், பாவ உணர்வே இல்லாமல் அடுத்தவரின் மனைவியிடம் பிரவேசிக்கிறவனை தான் "கடைக்கு போய் விட்டு வந்து ஸ்நானம்பண்ணுகிறவன்" என்றும் உவமையாக சொல்லப்பட்டுள்ளது.
தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக
அடுத்ததாக, இந்த பாவ காரியங்களே நம்மை தேவனிடமிருந்து பிரிக்கிறது என்பதைத்தான் " உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்கு தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது" கர்த்தர் உவமையாக சொன்னார், மேலும் தேவ அன்பை விட்டு விட்டதை "தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும் மோசே சொல்லியிருக்கிறாரே" என்று நியாயப்பிரமாண கட்டளையையே உவமையாக சொன்னார் - 9.பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்கு தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது. 10.எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே. 11.நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி, 12.அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்; 13.நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார். 14.பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள். 15.மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும். 16.கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார் - மாற்கு 7:9-16
பரிசேயரும் வேதபாரகரும், கர்த்தர் தங்களிடம் சொன்னது உவமை என்றோ, அல்லது அந்த உவமையின் உண்மையான அர்த்தத்தையோ அறிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் கர்த்தரால் போதிக்கப்பட்ட சீஷர்கள், கர்த்தர் சொன்னது உவமை என்பதை அறிந்துக் கொண்டார்கள், அதைத் தங்களுக்கு விளக்கிச் சொல்லுமாறு கர்த்தரிடம் கேட்டார்கள் - 17.அவர் ஜனங்களைவிட்டு வீட்டுக்குள் பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள். 18.அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? 19.அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப்போகும். 20.மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். 21.எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், 22.களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். 23.பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார் - மாற்கு 7:17-23
அப்பொழுது கர்த்தர், தான் முன்னோர்களின் பாரம்பரியம் என்று சொன்னவைகளை பட்டியலிட்டு காட்டினார், அவைகள் மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து வரும் பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடுமானவைகளே,
இவைகளை மேற்கொள்ளவும் இயேசுவின் இரத்தத்தினால் கழுவப்பட்டு பரிசுத்தமாய் வாழவும் தேவன் நம்மை அழைத்திருக்கிறார்.
அடுத்த பாகம்: நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால்