முந்தைய பாகம்: இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி
இந்த பூமியில் எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும், உண்மையான தெய்வத்தை "நல்லவர்" என்கிற ஒரு அடையாளத்தை கொண்டு கண்டு பிடிக்க முடியும் என்பதை சங்கீதக்காரனாகிய தாவீது இப்படி எழுதியுள்ளார் - கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது - சங்கீதம் 100:5
எப்படியெனில் ஒரு தேசத்திற்கு, ஒரே ஒரு ஜனாதிபதி தான் இருக்க முடியும், ஒரு கல்லூரிக்கு ஒரே ஒரு முதல்வர் தான் இருக்க முடியும், அதே போல சர்வலோகத்திலும் ஒரே ஒருவர் தான் நல்லவராய் இருக்க முடியும், அவர் தான் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சர்வவல்லமையுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்து.
அவர் இந்த பூமிக்கு வந்த பொழுது, ஒருவன் இயேசு கிறிஸ்துவை "நல்லவரே" என்று அழைத்தான் - பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான் - மாற்கு 10:17
அவன் இயேசு கிறிஸ்துவை "தேவன்" என்று அறிக்கை செய்ய அப்படி அழைக்கவில்லை, மாறாக, தன்னை ஒரு உத்தமனாக காட்டிக் கொள்ளவே அப்படி அழைத்தான். அவன் இதயத்திற்குள் இருப்பதை வெளியே கொண்டு வர கர்த்தர் இந்த கேள்வியை கேட்டார் - 18.அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே. 19.விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார் - மாற்கு 10:18-19
அப்பொழுது, அவன் சொன்ன பதிலில், இயேசு கிறிஸ்துவை குறித்து அவன் இருதயத்தில் இருந்த எண்ணம் வெளிப்பட்டது, எப்படியேனில், ஆரம்பத்தில் "நல்ல போதகரே" என்று அழைத்தவன், இப்பொழுது "நல்லவர்" என்கிற வார்த்தையை ரகசியமாக நீக்கிவிட்டு "போதகரே" என்று அழைத்தான் - அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான் - மாற்கு 10:20
அதாவது, அவன் "நல்லவர்" என்ற வார்த்தையை நீக்கி, இயேசு கிறிஸ்துவை "தேவன்" இல்லை என்று அறிக்கை செய்தான், முடிவு பரிதாபம் தான், அவன் தேவனுடைய ராஜ்யத்தை இழந்தவனாக அங்கிருந்து போனான் - 21.இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு: நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார். 22.அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான் - மாற்கு 10:21-22
ஒருவேளை அவன் இயேசு கிறிஸ்துவிடம், நீங்கள் தானே "தேவன்", அதனால் தான் உம்மை "நல்ல போதகரே" என்று அழைத்தேன் என்று சொல்லியிருப்பானேயானால், தேவ சமாதானம் நிறைந்தவனாக பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்து இருப்பான் - 9.என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். 10.நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். 11.அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது - ரோமர் 10:9-11
பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்
மத்தேயு மற்றும் லூக்கா புஸ்தகம், அவனை குறித்துச் சொல்லும் பொழுது, அவன் தன்னுடைய சுயநிதியினால் தான், தேவனுடைய ராஜ்யத்தை இழந்தான் என்று சொல்லுகிறது. எப்பயெனில், கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார் என்று சொன்ன தாவீது, இன்னொரு ரகசியத்தையும் எழுதி வைத்துள்ளார், அது என்னவென்றால், எவன் ஒருவன் தன் குறைகளை உணர்ந்து, தன்னை பாவியென்று அறிக்கை செய்கிறானோ, அவனுக்கு தான் கர்த்தர் நித்திய ஜீவணுக்கான வழியை வெளிப்படுத்துவார் என்று எழுதியுள்ளார் - கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார் - சங்கீதம் 25:8
ஆனால், இந்த ஐசுவரியவானோ, தன்னை பாவி என்று ஒத்துக் கொள்ளவே இல்லை, தன்னை ஒரு நல்லவனாகவே காட்டிக் கொண்டிருந்தான், அதாவது தன்னை தேவனுக்கு சமமாக காட்டிக் கொண்டிருந்தான் - 18.அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். 19.அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே. 20.விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலைசெய்யாதிருப்பாயாக, களவுசெய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார். 21.அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான் - லூக்கா 18:18-21
விளைவு, மனமடிவும், துக்கமும் சூழ்ந்துக் கொண்டவனாய், தேவனுடைய ராஜ்யத்தை இழந்தவனாக போய்விட்டான் - 22.இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். 23.அவன் அதிக ஐசுவரியமுள்ளவனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான். 24.அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது. 25.ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். 26.அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். 27.அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார் - லூக்கா 18:22-27
ஒருவேளை அவன் இயேசு கிறிஸ்துவிடம், நீர் சகலத்தையும் அறிந்த பரிசுத்த தேவன், நானோ ஒரு குறைவுள்ள மனுஷன், எனக்கு உதவி செய்தருளும் என்று கேட்டிருப்பானேயானால், அவன் கர்த்தரிடமிருந்து பாவமன்னிப்பை பெற்று, பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாக, பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்து இருப்பான்.
நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம்
தேவனுடைய குமாரனை "நல்லவர்" என்று அறிமுகப்படுத்திய சங்கீதக்காரனாகிய தாவீது, அவர் அருளும் பரிசுத்த ஆவியானவரை "நன்மை" என்று அறிமுகப்படுத்துகிறார், மேலும் அந்த பரிசுத்த ஆவியானவரை நாம் கேட்டு பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லுகிறார் - 8.தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று, 9.அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக - சங்கீதம் 107:8-9
வேதாகமத்தில் "நன்மை" என்கிற வார்த்தை பரிசுத்த ஆவியானவராயே குறிக்கிறது, எப்படியெனில், மத்தேயு எழுதின சுவிசேஷ புஸ்தகத்தில், தேவன் "தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" என்று எழுதப்பட்டுள்ளது- 11.பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? - மத்தேயு 7:11
ஆனால், லூக்காவின் புஸ்தகத்தில், தேவன் "தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" என்று எழுதப்பட்டுள்ளது, அதாவது, நம் எல்லோருக்கும் நன்மையான ஓன்று இருக்குமானால், அது "பரிசுத்த ஆவியானவர்" தான் என்று விளக்கியுள்ளது - 13.பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார் - லூக்கா 11:13
மீண்டும், சங்கீதக்காரனாகிய தாவீது, இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே நாம் பரிசுத்த ஆவியைப் பெற முடியும் என்றும், மற்ற எல்லா தெய்வங்களும் உங்களுக்கு தீய ஆவியை மட்டுமே கொடுக்கும் என்றும், அது உங்களை நித்திய நரகத்திற்கு வழிநடத்தும் என்றும் உறுதிப்படுத்துகிறார் - சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது - சங்கீதம் 34:10
இதை தான் சாலமோன் ஞானி, எவன் பேதையோ, அவன் தேவகுமாரனிடத்தில் [தேவஞானத்திடம்] வரக்கடவன், வந்து பாவமன்னிப்பையும், பரிசுத்த ஆவியானவரையும் பெற்று கொள்ளக்கடவன் என்று எழுதியுள்ளார் - 1.ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து, 2.தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்துவைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி, 3.தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு, 4.புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன். 5.நீங்கள் வந்து என் அப்பத்தைப் புசித்து, நான் வார்த்த திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள். 6.பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது - நீதிமொழிகள் 9:1-6
இயேசு கிறிஸ்து நம்மை நித்திய ஜீவனுக்கு அழைப்பது போலவே, பிசாசும் [மதியற்ற ஸ்திரீ] பாவ இச்சை, விக்கிரக ஆராதனை மூலமாக நம்மை நித்திய நரகத்தில் தள்ள போராடிக் கொண்டிருக்கிறான், ஒருவன் கர்த்தரிடமிருந்து பாவமன்னிப்பையும், பரிசுத்த ஆவியானவரையும் பெற்றுக் கொள்ளாவிட்டால், அவன் முடிவு என்னவாயிருக்கும் என்பதை சாலமோன் ஞானி இப்படியாக எழுதியுள்ளார், அதின் முடிவு நரகபாதாளமே - 13.மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள். 14.அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம்போட்டு உட்கார்ந்து, 15.தங்கள் வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கரைப் பார்த்து: 16.எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும், 17.மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள். 18.ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான் - நீதிமொழிகள் 9:13-18
அடுத்த பாகம்: உன்னிடத்தில் நீ அன்புகூருவது போல