இரையாதே, அமைதலாயிரு!
இரையாதே, அமைதலாயிரு!
முந்தைய பாகம்: இயேசுவின் வார்த்தைகள்
இயேசு கிறிஸ்து தனது ஊழியத்தின் பெரும்பகுதியை மேற்கொண்ட இடம் தான் கலிலேயாக் கடல் பகுதியாகும், இதில் ஆச்சரியப்படக் கூடிய விஷயம் என்னவென்றால், பரலோகத்தின் தேவனாகிய இயேசு கிறிஸ்து கப்பர்நகூம் என்னும் கடற்கரை கிராமத்தில் வசித்து மக்களுக்குச் சேவை செய்து கொண்டிருக்க, அந்த கப்பர்நகூமுக்கு எதிரே இருந்த கதரேனருடைய நாட்டில், பிசாசுகளின் கூட்டம் ஒரு மனிதனை வேதனை படுத்திக் கொண்டிருந்தன, அதனால் அவன் புத்தி பேதலித்து நிர்வானியாய் அழைந்துக் கொண்டிருந்தான், அவனுடைய பரிதாபமான நிலையை குறித்து மார்கு சுவிசேஷ புஸ்தகத்தில் இப்படி எழுதப்பட்டுள்ளது - 3.அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. 4.அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது. 5.அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான் - மாற்கு 5:3-5
இந்த மாற்கு சுவிசேஷ புத்தகத்தை நன்றாய் கவனித்துப் பார்த்தால், முக்கியமான பாத்திரங்களாகிய அன்னை மரியாளைப் குறித்தோ, யோவான்ஸ்நானனை குறித்தோ ஒன்றும் எழுதப்படவில்லை, ஆனால், பிசாசுகளினால் அவதிப்பட்ட இந்த மனிதனின் நிலையை குறித்து எழுதப்பட்டுள்ளது, ஏனென்றால் இவ்வுலகிலுள்ள எந்த ஒரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் இந்த பிசாசுகளினால் பாதிக்கப்பட்டவனாக தான் இருக்கிறான்.
இயேசு கிறிஸ்துவின் ஊழிய நாட்களில், மக்கள் நோயாளிகளையும் பிசாசு பிடித்தவர்களையும் கர்த்தரிடம் கொண்டு வருவது வழக்கம், கர்த்தரும் மணமிறங்கி அவர்களை சுகப்படுத்தி, பிசாசுகளிடம் இருந்து விடுதலை கொடுத்ததை வேதாகமத்தில் பல இடங்களில் பார்க்கலாம் - 40.சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ளே பலபல வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக்கினார். 41.பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரைக் கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டினார் - லூக்கா 4:40-41
ஆனால், 'லேகியோன்' எனப்படும் பல பிசாசுகள் பிடித்திருந்த அந்த மனிதனின் நிலைமை முற்றிலும் வேறுபட்டிருந்தது, காரணம், யாரும் அவனருகில் வரவும் முடியாது, அவனை கட்டவும் முடியாது, மேலும் அவன் இருந்ததோ கடலுக்கு அக்கரையில், அப்படியிருக்க, அவனை எப்படி இயேசுவிடம் அழைத்து வர முடியும்? அதனால் அந்த லேகியோன் பிசாசுகள் தாங்கள் மிகவும் பாதுகாப்பான இடத்தில் வசிப்பதாகக் கருதி, அவனைத் தொடர்ந்து வேதனை படுத்திக்கொண்டிருந்தன.
அப்போது தான், இயேசு கிறிஸ்து, அந்த மனிதனை லேகியோன் பிசாசுகளிடமிருந்து விடுவிப்பதற்காக கதரேனருடைய நாட்டை நோக்கி தன் சீடர்களுடன் படவில் சென்றார், ஆனால் சீடர்களுக்கோ ஏன் கதரேனருடைய நாட்டை நோக்கி போகிறோம் என்பது தெரியாது - 35.அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார். 36.அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக் கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது - மாற்கு 4:35-36
அவர்கள் கதரேனருடைய நாட்டை சேர்ந்தவுடன், சீஷர்களால் லேகியோன் பிசாசுகள் பிடித்த மனிதனை கண்டுபிடித்து இயேசுவிடம் அழைத்து வரகூடுமா? என்றால், அதுவும் கூடாத காரியம் தான். இதே போன்ற நிலைமை தீரு மற்றும் சீதோன் எல்லையில் வசித்த கானானிய பெண்ணும் இருந்தது. அவளால் பிசாசு பிடித்த தனது மகளை இயேசுவிடம் அழைத்து வர முடியவில்லை, அதனால் மகளை வீட்டிலேயே விட்டுவிட்டுத் தனியாக வந்து இயேசுவிடம் வேண்டிக்கொண்டாள், அவளுடைய மகளும் பிசாசு நீங்கி குணமடைந்தாள் - 26.அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள். 27.இயேசு அவளை நோக்கி: முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். 28.அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும், மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். 29.அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார். 30.அவள் தன் வீட்டுக்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள்- மாற்கு 7:26-30
ஆனால் இங்கே, லேகியோன் பிசாசுகள் பிடித்த மனிதனுக்காகப் பரிந்துபேச யாரும் இல்லை, அந்த சமயத்தில் தான், புயலும் அலைகளும் படகுக்கு எதிராக எழுந்தன, சீஷர்கள் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ள அலறத் தொடங்கி, இயேசுவிடம், "போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா" என்று கேட்டனர். சீஷர்கள் ஒருமனதாக இயேசுவிடம் ஏறெடுத்த முதல் ஜெபமும் இது தான், அது ஒரு அந்நிய பாஷை ஜெபமாகவும் இருந்தது, ஏனென்றால் அவர்கள் தங்களுக்காக மட்டுமல்ல, கதரேனருடைய நாட்டு மலையில் இருந்த லேகியோன் பிசாசுகள் பிடித்த மனிதனுக்காகவும் ஜெபித்துக்கொண்டிருந்தனர் - 37.அப்பொழுது, பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று. 38.கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள் - மாற்கு 4:37-38
சீடர்கள் கொந்தளிக்கும் கடலின் இரைச்சலையும் புயலின் ஓசையையும் மட்டுமே கேட்டனர், ஆனால் ஆண்டவரோ, வேதனைப்படுத்தும் லேகியோன் பிசாசுகளின் கூச்சலையும் கேட்டார், அவருடைய ஒரே ஒரு கண்டிப்புக்கு கொந்தளிக்கும் கடல், புயல், லேகியோன் பிசாசுகளும் அடங்கி அமைதியாயின - 39.அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று. 40.அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார். 41.அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 1.பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள். 2.அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான் - மாற்கு 4:39-5:2
ஆண்டவரின் ஒரே ஒரு வார்த்தைக்கு காற்றும் கடலும் கீழ்ப்படிந்ததைக் கண்டு சீடர்கள் வியந்தனர், ஆனால் ஆண்டவரின் வல்லமை நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது என்பதை அவர்கள் கதரேனருடைய பகுதிக்குச் சென்றடைந்த போது தான் உணர்ந்தனர், யாராலும் கட்டி வைக்க முடியாத, லேகியோன் பிசாசுகள் பிடித்திருந்த அந்த மனிதன், தானாகவே ஓடிவந்து ஆண்டவரின் பாதத்தில் விழுந்து வணங்கினான். யாராலும் கட்ட முடியாத அவன் எப்படித் தானாகவே வந்தான்? அது தான் கர்த்தர் இட்ட கட்டளையின் மகத்துவம், கர்த்தர் இரையாதே, அமைதலாயிரு என்று சொன்ன ஒரே வார்த்தையில், "அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ" என்கிற கட்டளையும் இருந்தது என்று வேதாகமம் கூறுகிறது - 6.அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப்பணிந்துகொண்டு: 7.இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். 8.ஏனெனில் அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார் - மாற்கு 5:6-8
சமுத்திரத்தின் நடுவில் இருந்து கர்த்தர் "இரையாதே, அமைதலாயிரு" என்று கட்டளையிட்டதில், இன்னொரு இரகசியமும் இருந்தது, அது என்னவென்றால் புயலும் கடலும் அமைதியான அந்த கடலில் தானே, அந்த லேகியோன் பிசாசுகளும் சாந்தியடைய வேண்டும் என்கிற கட்டளையும் இருந்தது, அதனால்தான் அந்த லேகியோன் பிசாசுகள் எங்களை வேதனைப்படுத்த வேண்டாம் என்று கதறிக் கொண்டிருந்தது, ஆனால் கர்த்தரின் கட்டளையை யாரால் மாற்ற முடியும்? எனவே பிசாசுகள் பன்றிகள் என்று அழைக்கப்படும் இன்னொரு வாகனத்தில் ஏறி, நேராக கடலை நோக்கி ஓடி, புயலும் கடலும் அமைதியான அந்த இடத்தில் விழுந்து மாண்டது - 9.அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி, 10.தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடாதபடிக்கு அவரை மிகவும் வேண்டிக்கொண்டான். 11.அப்பொழுது, அவ்விடத்தில் மலையருகே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது. 12.அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி: பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன. 13.இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டது - மாற்கு 5:9-13
சுமார் இரண்டாயிரம் பன்றிகள் கடலில் மூழ்கின என்று வேதாகமம் கூறுகிறது, ஆனால், அவற்றுடன் மூழ்கிய பிசாசுகளைப் பற்றி வேதாகமம் ஏன் ஒன்றுமே சொல்லவில்லை? இரண்டு காசுக்கு விற்கபடும் ஐந்து அடைக்கலான் குருவிகளில் ஒன்றை கூட நம் தேவன் மறப்பதில்லை என்று வேதாகமம் கூறியிருக்க, லேகியோன் பிசாசுகளின் தொகையை குறித்து ஏன் எதுவும் சொல்லவில்லை? இதற்குக் காரணம், நம் தேவனுக்கு எதிராக செயல்படும் இந்தப் பிசாசுகள், நாட்டுமிருகங்களை காட்டிலும், சகல காட்டுமிருகங்களை காட்டிலும் மிகத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டதே ஆகும் - 14.அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய் - ஆதியாகமம் 3:14
மூன்று விதமான சாட்சிகள்
இந்தச் சம்பவம் கதரேனர் நாட்டு மக்களுக்கு பெரும் பேச்சு பொருளாக மாறியிருந்தது, மூன்று வகையான சாட்சிகள் இச்செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டனர், அதில் முதலாவது சாட்சி யாரென்றால், பன்றியை மேய்த்தவர்கள், அவர்களின் சாட்சியத்தைக் கேட்டபோது மக்கள் மத்தியில் அச்சம் தொற்றிக்கொண்டது, கதரேனர் நாட்டு மக்கள் நடந்த அனைத்தையும் தங்கள் சொந்தக் கண்களால் பார்த்தார்கள், ஆனாலும் அவர்கள் மத்தியில் அச்சமே மேலோங்கியிருந்தது என்று வேதாகமம் சொல்லுகிறது - 14.பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு; 15.இயேசுவினிடத்தில் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள் - மாற்கு 5:14-15
அடுத்ததாக, நடந்ததை நேரில் கண்டவர்களும் சாட்சி சொன்னார்கள், அதனால் நிலைமை இன்னும் மோசமடைந்தது, விளைவு, அந்த கதரேனர் நாட்டு மக்கள் பரலோகத்தின் தேவனாம் இயேசு கிறிஸ்துவை தங்கள் பகுதியை விட்டு போகுமாறு வேண்டிக்கொண்டனர் - 16.பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் சம்பவித்ததைக் கண்டவர்களும் அவர்களுக்கு விவரமாய்ச் சொன்னார்கள். 17.அப்பொழுது தங்கள் எல்லைகளை விட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள் - மாற்கு 5:16-17
கடைசியாக, லேகியோன் பிசாசு பிடித்திருந்த மனிதனே சாட்சி கொடுத்தான், அவனுடைய சாட்சி அவர்கள் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்ததாம், ஏனென்றால் மற்றவர்களுக்கு தெரியாத பல ரகசியங்கள் அவன் சாட்சியில் இருந்தது - 18.அப்படியே அவர் படவில் ஏறுகிறபொழுது, பிசாசு பிடித்திருந்தவன், அவரோடேகூட இருக்கும்படி தனக்கு உத்தரவுகொடுக்க அவரை வேண்டிக்கொண்டான். 19.இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார். 20.அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள் - மாற்கு 5:18-20
லேகியோன் பிசாசு பிடித்திருந்த மனிதனின் சாட்சி
மற்றவர்களின் சாட்சிகளை காட்டிலும் இவனுடைய சாட்சி ஏன் இவ்வளவு மாறுபட்டதாக இருந்தது? மந்தையை மேய்த்தவர்களின் சாட்சி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது, நேரில் கண்டவர்களின் சாட்சி இயேசுவை அந்தப் பகுதியை விட்டு வெளியேறச் செய்தது, இறுதியில் லேகியோன் பிசாசு பிடித்திருந்த மனிதனின் சாட்சி எல்லாவற்றையும் மாற்றியமைத்தது, அது எப்படி?
அந்த லேகியோன் பிசாசு பிடித்த மனிதன் வாழ்ந்த இடம் மலையின் மேலிருந்த கல்லறைகள், அங்கிருந்து கலிலேயா கடலை முழுமையாக பார்க்க முடியும், இயேசுவின் படவில் இருந்து காற்றையும் கடலையும் அதட்டி செய்த அற்புதத்தை, ஒருவர் பால்கனியில் தனியாக அமர்ந்து முழு விளையாட்டு போட்டியையும் பார்ப்பது போல அவன் பார்த்திருந்தான், இயேசுவின் படகு தன்னை நோக்கி வருவதை அவன் பார்த்தான், அப்பொழுது உண்டான புயலின் சீற்றத்தை அவனும் அனுபவத்திருந்தான், இயேசு கிறிஸ்து "இரையாதே, அமைதலாயிரு" என்று சொல்லி காற்றையும் கடலையும் அமைதிப்படுத்தினதையும் பார்த்தான், தண்ணீர்களின் மேல் தொனிக்கும் கர்த்தரின் வார்த்தைகள் அவன் காதில் விழுந்த மாத்திரத்தில் தானே, தன்னை அலைக்கழித்துக் கொண்டிருந்த லேகியோன் பிசாசுகள், அவனை வேதனை படுத்துவதை நிறுத்தி விட்டு, எங்களை வேதனைப்படுத்த வேண்டாம் என்று கெஞ்ச ஆரம்பித்ததையும் அறிந்திருந்தான் - கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார் - சங்கீதம் 29:3
அவன் தன்னுடைய சாட்சியை இப்படித்தான் சொன்னான், நான் லேகியோன் பிசாசுகளால் வேதனைப்பட்டவன், அவைகள் ஒன்றோ இரண்டோ அல்ல, ஆயிரக்கணக்கில் இருந்தன, அவைகள் என்னை இரவும் பகலும் சித்திரவதை செய்தன, அதனால் நான் மனநிலை இழந்தவனாக, நிர்வாணமாக அலைந்துக் கொண்டிருந்தேன், ஜனங்கள் என்னைக் கண்டால் கற்களை கொண்டு அடிப்பார்கள், அதனால் ஊருக்குள் செல்ல முடியாமல், கல்லறை தோட்டத்தில் தங்கினேன், அங்கு சாப்பாடும் இருக்காது குடிக்க தண்ணீரும் இருக்காது, செத்து அழுகிப்போன பறவைகளும் எலிகளுமே எனக்கு உணவாக இருந்தது.
ஒரு நாள் மாலை வேளையில், கடலின் மறுபுறத்திலிருந்து ஒரு படகு வருவதைக் கண்டேன், வானத்தையும் பூமியையும் உண்டாக்கின சர்வ வல்லமையுள்ள தேவன் அந்தப் படகில் இருக்கிறார் என்பது எனக்குத் தெரியாது, நான் அவரை நேரில் காண்பேன் என்றோ, அவர் என் வாழ்க்கையை மீட்டெடுக்கப் போகிறார் என்றோ நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, அன்று இரவு, அந்த லேகியோன் பிசாசுகள் என்னை மிகவும் அலைக்கழித்தது, யாராவது அருகில் வந்தால் அவர்களைத் தாக்க வேண்டும் என்று என்னை வெறிக்க செய்து கொண்டிருந்தது, நான் வேதனை தாங்க முடியாமல் கதறிக் கொண்டிருந்தேன்.
அந்த படகு என்னை நெருங்கி வர வர, பலத்த காற்று வீசி தொடங்கியது, அந்த புயல் காற்று என்னை பாறையின் மீது மோத செய்து சாகடித்துவிடும் என்கிற அளவுக்கு உக்கிரமாக இருந்தது, அப்பொழுது தான் அந்த படவிலிருந்து "இரையாதே, அமைதலாயிரு" என்று ஒரு சத்தம் உண்டானது, அது ஒரு வல்லமையுள்ள சத்தம், மிகவும் அதிகாரமிக்கதாகவும் இருந்தது, என்ன அதிசயம், அந்த சத்தம் வந்தவுடனே புயல் காற்று நின்று போனது, கொந்தளித்த கடல் அமைதியானது, அது மாத்திரம் இல்லாமல், அந்த சத்தம் கேட்டவுடனே லேகியோன் பிசாசுகள் என்னை வேதனை படுத்துவதை நிறுத்தி விட்டு, தங்கள் உயிருக்காக அலற ஆரம்பித்தன.
பின்பு அவர் கரைக்கு வந்து, என்னை வேதனைப்படுத்தின எல்லா பிசாசுகளையும் துரத்தி விட்டார், ஒன்றுகூட தப்பவில்லை, அந்த பிசாசுகள் எல்லாம், பன்றிகளுக்குள் புகுந்து, புயலும் கடலும் எங்கு அமைதியானதோ அதே இடத்தில் விழுவதற்காக, கடலை நோக்கி ஓடின, இறுதியில் அந்த பிசாசுகள் எல்லாம் கடலில் விழுந்து மாண்டன, அதன் பின்பு இயேசு கிறிஸ்து என்னை முற்றிலும் குணப்படுத்தி, அவரே எனக்கு ஆடை உடுத்துவித்து, என்னை மனிதனாக மாற்றினார்.
என்னைப் பார்த்த மக்களோ, அவருடைய சீஷர்கள் தான் எனக்கு ஆடை உடுத்துவித்தது என்று நினைத்தார்கள், ஆனால் அப்படியல்ல, யூத பாரம்பரியத்தில் மிகவும் உறுதியாக இருந்த சீஷர்கள் என் அருகில் கூட வரவில்லை. ஆனால் இயேசு தான் என்னருகில் வந்து, எனக்குப் புதிய ஆடையை உடுத்துவித்து, என்னை மனிதனாக மாற்றினார், என் வாழ்க்கையில் முதன்முறையாக அன்பு என்றால் என்ன என்பதை உணர்ந்தேன், அவருடைய அன்பு என்னை ஆட்கொண்டது.
பொய்யான தெய்வங்களும் பிசாசுகளும் ஒரு மனிதனுக்கு என்ன செய்யும் என்பது எனக்குத் தெரியும், இப்பொழுதோ தேவன் ஒரு மனிதனுக்கு என்ன செய்வார் என்பதை நான் அறிந்திருக்கிறேன், அந்த தெய்வத்தின் பெயர் இயேசு கிறிஸ்து, அவருடைய பெயரை சொன்னாலே போதும் நமக்கு இரட்சிப்பு உண்டு என்று சாட்சி சொன்னான், அதனால் தான் அவனுடைய சாட்சியைக் கேட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள், தாங்கள் வெறுத்து அனுப்பிவிட்ட இயேசுவை காண ஆவல் கொண்டார்கள்.
அடுத்த பாகம்: என்னைத் தொட்டது யார்?