முந்தைய பாகம்: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா?
பரலோகத்தின் தெய்வம் மறுரூபம் எடுத்து, இயேசு கிறிஸ்துவாக இந்த பூமிக்கு வந்தபொழுது, , அவருடைய கரம் விலையுயர்ந்த வைரத்தையோ அல்லது தங்கத்தையோ தொடவில்லை; மாறாக, அது முதலில் ஒரு குஷ்டரோகியைத் தொட்டது.
குஷ்டரோகிகளுக்கு சக மனிதர்களுடன் சேர்ந்து வாழ அனுமதி கிடையாது, யூத கலாச்சாரத்தில் குஷ்டரோகியை தொடுவது தீட்டான[பாவமான] காரியமாகவும் இருந்தது, அதனால் குஷ்டரோகிகள் மேல் மனிதர்களின் கரம் படுவது கிடையாது, அப்படிப்பட்ட காலத்தில் தான், தெய்வத்தின் கரம் அந்த குஷ்டரோகியின் மேல் பட்டது.
ஒரு குஷ்டரோகி தொட்டால், தொட்டவர்களை பயமும் சாபமும் தீட்டும் பிடித்துக் கொள்ளும், ஆனால் இயேசு கிறிஸ்து அந்த குஷ்டரோகியை தொட்ட பொழுது, கர்த்தரிடமிருந்த புறப்பட்ட பரிசுத்தம், அந்த குஷ்டரோகியின் சுத்தப்படுத்தி, அவனுடைய குஷ்டரோகத்தையும் குணப்படுத்தி விட்டது - 40.அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். 41.இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். 42.இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான் - மாற்கு 1:40-42
ஆனால், இவ்வளவு பெரிய அற்புதத்தை பெற்ற அந்த குஷ்டரோகியால், கர்த்தர் சொன்ன ஒரு சின்ன கட்டளையை நிறைவேற்ற முடியாமல் போய்விட்டது - 43.அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; 44.ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார். 45.அவனோ புறப்பட்டுப் போய்: இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம் பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய் பட்டணத்தில் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள் - மாற்கு 1:43-45
இது எப்படி நடந்திருக்கும்? சிறையில் இருக்கும் ஒரு ஆயுள் கைதி, தனக்கு விடுதலை கொடுத்த அதிகாரியை எவ்வளவாய் நேசித்து, அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவான்? இந்த குஷ்டரோகியின் நிலைமையோ, அந்த ஆயுள் கைதியின் காட்டிலும் மிக மோசமாக இருந்தது, அப்படியிருக்கும் பொழுது, அவனால் கர்த்தரின் கட்டளையை நிறைவேற்ற முடியாமல் போனதென்ன?
அவன் இயேசு தான் அந்த பிரதான ஆசாரியர் என்பதை புரிந்து கொள்ளவில்லை, இந்த உலகத்து ஆசாரியர்களை தேடி அவர்களிடம் நடந்ததை சொல்லி கர்த்தரை பிரபலப்படுத்தியது தான் மிச்சம், அதன் விளைவாக, கர்த்தர் தான் வனாந்திரத்தில் தங்கும் சூழ்நிலை ஏற்பட்டது, அது கல்லுகளும் விஷ ஜந்துக்களும் நிறைந்த வனாந்திரம், அங்கு தங்குவதை யாரும் விரும்பவும் மாட்டார்கள், நிச்சியமாகவே கர்த்தருடைய சீஷர்களுக்கு அது கஷ்டமான இரவுகள் தான்.
ஆனால், இப்பொழுதோ, பத்து குஷ்டரோகிகள் இயேசு கிறிஸ்துவிடம் வர, அவர்களிடமும் கர்த்தர் "நீங்கள் போய் ஆசாரியர்களுக்கு காண்பியுங்கள்" என்று சொல்ல, முதலாவது கலங்கினது சீஷர்கள் தான், ஒரு குஷ்டரோகி ஆசாரியரிடம் போனதினால் நாம் வனாந்திரத்தில் பல நாட்கள் தங்க நேர்ந்ததே, இப்பொழுது பத்து பேர் ஆசாரியர்களை தேடி போகிறார்களே, இதனால் தான் எத்தனை நாட்கள் வனாந்திரத்தில் தங்க நேருமோ என்று கவலை அடைந்திருப்பார்கள் - 11.பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்துபோனார். 12.அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று: 13.இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். 14.அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள் - லூக்கா 17:11-14
ஆனால் அந்த பத்து குஷ்டரோகிகளில், ஒருத்தனுக்கு உலக ஆசாரியர்களிடம் போக விருப்பமில்லை, இந்த உலக ஆசாரியர்களிடம் போனால், அவர்கள் என் பழைய காரியங்களை குறித்து விசாரிப்பார்கள், உன்னுடைய பாவ வாழ்க்கை தான் இதற்கு காரணம் என்றும் சொல்லுவார்கள், தூரத்தில் இருந்தவாறே என் சரீரத்தை பார்த்து, நான் உண்மையிலேயே சுகமடைந்து விட்டேனா என்று சோதித்துப் பார்ப்பார்கள், நான் ஏன் அவர்களிடம் போக வேண்டும்? என்று தன் இருதயத்திலே சொல்லிக் கொண்டு, என் பழைய காரியங்களை குறித்து எதுவுமே விசாரிக்காமல் என் மீது கருணை வைத்த அவரிடமே போவேன் என்று சொல்லிக்கொண்டு இயேசுவிடம் வந்தான் - 15.அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, 16.அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான் - லூக்கா 17:15-16
அந்த குஷ்டரோகி தான், இந்த உலகில் உண்மையான பிரதான ஆசாரியரை அடையாளம் கண்ட முதல் நபர் - 26.பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார் - எபிரெயர் 7:26
அப்பொழுது தான், "நீங்கள் போய் ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள்" என்பதின் இரகசியம் புரிந்தது, அது நம் பிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்துவை அண்டிக் கொள்வதேயாகும், மேலும், தன் ஜீவனை கொடுத்து நம்மை மீட்ட அவருக்கே, மோசே கட்டளையிட்ட காணிக்கையாகிய துதி கணம் மகிமை எல்லாம் உரியது.
ஆனால், என்ன ஆச்சரியம், அந்த குஷ்டரோகி பிரதான ஆசாரியரை மாத்திரம் கண்டுபிடிக்கவில்லை, தன்னுடைய விசுவாசத்தினால் பரலோகத்தின் தேவனையே கண்டுபிடித்திருந்தான் - 17.அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? 18.தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, 19.அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார் - லூக்கா 17:17-19
அடுத்த பாகம்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்?