முந்தைய பாகம்: எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்
தன்னை தேடி வந்த கானானிய ஸ்திரீயிடம், கர்த்தர் தான் "காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல" என்று சொல்ல காரணம் என்ன? - 21.பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு, சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார். 22.அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். 23.அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். 24.அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார். 25.அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள் - மத்தேயு 15:21-25
நன்றாய் ஆராய்ந்து பார்த்தால், அந்த கானானிய ஸ்திரீ கர்த்தரை தேடி வரவில்லை, மாறாக கர்த்தர் தான் அவளைத் தேடி தீரு சீதோன் பட்டணத்துக்குப் போனார்.
கலிலேயாவிலிருந்து, தீரு சீதோனுக்கு குறைந்தபட்சம் 80 கிமீ தூரம் நடந்து செல்ல வேண்டும், அதாவது இரண்டு நல்லது அல்லது மூன்று நாள் தூர பயணம், அப்படியென்றால் கர்த்தர் தானே அவளை தேடி சென்றிருக்கிறார்.
அங்கிருந்தது, மறுபடியும் தெக்கப்போலியின் வழியாய்க் கலிலேயாவுக்கு வரவேண்டுமென்றால், மொத்தம் 175 கிமீ தூரம் நடக்க வேண்டும், மேலும், இந்த பிரயாணத்தில் இயேசு கிறிஸ்து செய்த ஒரே அற்புதம் கானானிய ஸ்திரீன் மகளை குணப்படுத்தியது தான், அப்படியென்றால் கர்த்தர் யாருக்காக அந்த பயணத்தை மேற்க்கொண்டார்? நிச்சயமாகவே அந்த கானானிய ஸ்திரீக்காகத் தான்.
பின்பு ஏன் நான் "காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல" என்று கர்த்தர் சொன்னார்? வேதாகமத்தில், முதல் ஆளாக, யாக்கோபு என்கிற புறஜாதியனை, கர்த்தர் இஸ்ரவேலனாக மாற்றினார் - 24.யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி, 25.அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று. 26.அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான். 27.அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான். 28.அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார். 29.அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார் - ஆதியாகமம் 32:24-29
இந்த யாக்கோபு, அழிவுக்கு நேரான சீரிய தேசத்தானாயிருந்தான், அதாவது நரகத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்த ஒரு புறஜாதியனாக இருந்தான் - அப்பொழுது நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நின்று வசனித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரிய தேசத்தானாயிருந்தான். அவன் கொஞ்சம் ஜனங்களோடே எகிப்துக்குப்போய், அவ்விடத்தில் பரதேசியாய்ச் சஞ்சரித்து, அங்கே பெரிய பலத்த திரட்சியான ஜாதியானான் - உபாகமம் 26:5
பின்பு எப்படி அந்த யாக்கோபு இஸ்ரவேலனாக மாறினார்? ஒரு முறை யாக்கோபு பொழுது விடிந்தால் தன் சகோதரனாகிய ஏசா தன் குடும்பத்தை அழித்து விடுவான் என்கிற இக்கட்டான சூழ்நிலையில், தேவனோடு போராடி பெற்று கொண்டது தான் இந்த இஸ்ரவேல் என்னும் பெயர், இதில் "போராடி" என்கிற வார்த்தை யாக்கோபை ஒரு மல்யுத்த வீரன் போல தான் காட்டுகிறது, ஆனால் உண்மையில் என்ன நடந்ததென்றால், கர்த்தர் மாத்திரமே தன்னை காப்பாற்ற முடியும் என்பதை அறிந்த யாக்கோபு, அந்த இரவு முழுவது கர்த்தரிடம் அழுது வேண்டிக்கொண்டான், அந்த விசுவாசமே அவனை இஸ்ரவேலனாக ஆக மாற்றியது - 3.அவன் தாயின் கர்ப்பத்திலே தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான், தன் பெலத்தினால் தேவனோடே போராடினான். 4.அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார். 5.கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நாமசங்கீர்த்தனம் - ஓசியா 12:3-5
இதைத்தான் கானானிய ஸ்திரீயும் நமக்கு செய்து காட்டினாள், கர்த்தரை விடாப்பிடியாக தேடி, அழுது, தனக்கு தேவையான ஆசிர்வாதத்தை பெற்று, இறுதியில் இஸ்ரவேல் வீட்டாராகவும் [தேவனுடைய பிள்ளையாகவும்] மாறி விட்டாள் - 26.அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். 27.அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். 28.இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள். 29.இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார் - மத்தேயு 15:26-29
இப்படியாக, கர்த்தர், காணாமற்போன ஆடாக இருந்த கானானிய ஸ்திரீயை, இஸ்ரவேல் வீட்டாராக மாற்றினார், அதனால் தான் கர்த்தர் "காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல" என்று சொன்னார் - 6.ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே. 7.அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே. 8.அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள் - ரோமர் 9:6-8
உட்கார்ந்தார்
தன்னுடைய மகளின் திருமணத்திற்காக உழைக்கும் தகப்பனாரை குறித்துச் சொல்லும் பொழுது, "திருமணம் நல்லபடியாக முடிந்த பின்புதான் மணப்பெண்ணின் தகப்பனார் உட்கார்ந்தார்" என்று சொல்லுவது அக்காலத்தின் வழக்கம், அது போல தான், இங்கு கானானிய ஸ்திரீயை பரலோகத்தின் பிள்ளையாக மாற்றி "அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்" என்று வேதாகமம் கர்த்தரை குறித்து சொல்லுகிறது
மறைவாயிருக்கக் கூடாமற்போயிற்று
விசுவாசத்தின் முக்கியத்தை வேதாகமம் கற்றுக் கொடுக்கும் விதம் ஆச்சரியமாக தான் இருக்கிறது, எப்பயென்றால், ஒருமுறை பஸ்கா பண்டிகை நாளில் திரளான மக்கள் கூடியிருந்தார்கள், இயேசுவும் அங்கே இருந்தார், ஆனால் அங்கிருந்த ஒருவரும் இயேசுவை கர்த்தர் என்று விசுவாசிக்க வில்லை, அவர்களுக்கு கர்த்தர் தேவைப் படவுமில்லை, இப்படி தன்னை விசுவாசிக்காத கூட்டத்தாரின் மத்தியில் இருக்க விரும்பாத இயேசு நொடிப் பொழுதில் அங்கிருந்து மறைந்து போனார் - 35.அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான். 36.ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களைவிட்டு மறைந்தார். 37.அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை - யோவான் 12:35-37
ஆனால், அதே சமயத்தில், கர்த்தருக்காக ஏங்கி நின்ற ஒரு ஸ்திரீயின் விசுவாசம், சகலத்தையும் உருவாக்கின சர்வ வல்லமையுள்ள தேவனை, மறைவாயிருக்க கூடாமல் செய்து விட்டதாம் - 24.பின்பு, அவர் எழுந்து அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய், ஒரு வீட்டுக்குள் பிரவேசித்து, ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும், அவர் மறைவாயிருக்கக் கூடாமற்போயிற்று. 25.அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள். 26.அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள். 27.இயேசு அவளை நோக்கி: முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். 28.அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும், மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். 29.அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார். 30.அவள் தன் வீட்டுக்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள். 31.மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளை விட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய்க் கலிலேயாக் கடலருகே வந்தார் - மாற்கு 7:24-31
அடுத்த பாகம்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்?