முந்தைய பாகம்: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தை
இயேசு கிறிஸ்து இரண்டு முறை அப்பங்களை பிட்டு, திரளான ஜனங்களை போஷித்ததை வேதாகமத்தில் பார்க்கிறோம், கர்த்தர் இரண்டு முறை இந்த அற்புதத்தை செய்ததற்கு ஒரு காரணம், தன்னிடமிருந்த கிருபைகளையும் சத்தியத்தையும் சிலுவையில் நமக்கு பகிர்ந்தளிக்க போவதை தான், கர்த்தர் இப்படி செய்து காண்பித்தார்.
இயேசு கிறிஸ்து பரலோக தேவனின் நேச குமாரனாக இருந்தார், மேலும் கர்த்தர், பிதாவுக்கு ஏற்ற பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்ததினால், பிதாவினால் என்னுடைய நேசகுமாரன் என்கிற சாட்சியையும் பெற்றார், அதனால் அவரிடம் தேவகுமாரனுக்குரிய கிருபைகள் [முதல் அந்தஸ்து] ஏராளமாய் இருந்தது, அது மாத்திரம் இல்லாமல், சத்திய ஆவியானவரும் இயேசு கிறிஸ்துவை அபிஷேகித்து இருந்தார், இப்படி தன்னிடமிருந்த கிருபையையும் சத்தியத்தையும் சிலுவையில் நமக்கு பிட்டு கொடுப்பதைத்தான், இயேசு கிறிஸ்து இரண்டு முறை அப்பங்களை பிட்டு செய்து காண்பித்தார் - 14.அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. 15.யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான். 16.அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம். 17.எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. 18.தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார் - யோவான் 1:14-18
கிருபைகளை பகிர்ந்தளித்த இயேசு கிறிஸ்து
முதலாவது, கர்த்தர் ஐந்து அப்பங்களை கொண்டு ஐயாயிரம் பேரை போஷித்து அற்புதம் செய்தார், ஆனால் கர்த்தர் இந்த அற்புதத்தை செய்வதற்கு முன்பு, அங்கிருந்த ஜனங்களை சொஸ்தமாக்கினார், சுகமடையும் அற்புதம், நிச்சியமாகவே ஒரு வேளை போஜனத்தை காட்டிலும் மிகவும் விசேஷமானது, ஆனால் வேதாகமம் வியாதியஸ்தர்கள் சொஸ்தமானதை மிகைப்படுத்திச் சொல்லாமல், எல்லோருக்கும் அப்பம் கொடுக்கப்பட்டதை மிகைப்படுத்திச் சொல்லக் காரணம் என்ன? - 13இயேசு அதைக் கேட்டு அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள். 14இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார். 15சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப் போய்த் தங்களுக்கு போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். 16இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டுவதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். 17அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள். 18அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். 19அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள். 20எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள். 21ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள் - மத்தேயு 14:14-21
இதை ஒரு உதாரணத்தோடு பார்த்தால் எளிதாக புரிந்து கொள்ளலாம், குமார் என்பவருக்கு ஏராளமான கடன் இருந்தது, எதிர்காலமே இல்லை என்கிற சூழ்நிலையில், அவருடைய நண்பர் ஒருவர் வந்து எல்லா கடன்களையும் ஒரே பொழுதாக அடைத்து விட்டார், கடனை அடைத்தவர் தான் போகும் பொழுது ஒரு சாப்பாடும் வாங்கிக் கொடுத்தார், அப்பயென்றால் குமார் எதை குறித்து மேன்மை பாராட்டுவார்? தன்னுடைய கடனையெல்லாம் அடைத்ததை குறித்து மேன்மை பாராட்டுவாரா? இல்லையென்றால் அவர் வாங்கிக் கொடுத்த சாப்பாட்டைக் குறித்து மேன்மை பாராட்டுவாரா? நிச்சயமாகவே, தன்னுடைய கடனையெல்லாம் அடைத்ததை குறித்து தான் மேன்மை பாராட்டுவார்.
ஆனால் இங்கு, கர்த்தரால் சுகம் பெற்ற ஜனங்கள், கர்த்தர் கொடுத்த போஜனத்தை குறித்து மேன்மை பாராட்டினார்களாம், அதனால் தான் சுகம் பெற்ற பின்பும் திருப்தி அடையாத ஜனங்கள், சாப்பிட்டு திருப்தி அடைந்தார்கள் என்று வேதாகமம் சொல்லுகிறது, இதற்குக் காரணம், கர்த்தர் கொடுத்த அப்பமே, அது கர்த்தர் தன்னிடமிருந்த கிருபைகளை நமக்கு பகிர்ந்தளித்ததை குறிக்கிறது, அது விலையேறப்பெற்றது, அது நம்முடைய ஆத்துமாவை திருப்திப்படுத்த போதுமானது.
இந்த கிருபை தான், அநேக இடங்களில் சுவிசேஷமாக பிரசங்கிக்கப்படுகிறது, அநேகர் கர்த்தருடைய விசுவாசிக்கிறவர்களாய் மாறுகிறார்கள், அதனால் தான் கர்த்தர் அவர்களை நினிவே பட்டணத்தாரோடு ஒப்பிட்டார் - 41.யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள் - மத்தேயு 12:41
சத்திய ஆவியானவரை பகிர்ந்தளித்த இயேசு கிறிஸ்து
அடுத்ததாக, கர்த்தர் ஏழு அப்பங்களை கொண்டு நாழாயிரம் பேரை போஷித்தார், இந்த முறையும் கர்த்தர் அற்புதத்தை செய்வதற்கு முன்பு, அங்கிருந்த ஜனங்களை சொஸ்தமாக்கினார், சொஸ்தமானவர்கள் என்று சொல்லும் பொழுது அவர்கள் சாதாரண காய்ச்சல், தலைவலி போன்ற வியாதியுள்ளவர்கள் அல்ல, வாழ்க்கையில் சப்பாணிகளாய் இருந்து நடக்க ஆரம்பித்தவர்கள், குருடராய் இருந்து கண் பார்வை பெற்றவர்கள், ஊமையாய் இருந்து பேச ஆரம்பித்தவர்கள், உடல் உறுப்புகள் ஊனராய் இருந்து சுகம் பெற்றவர்கள், அதனால் இவர்களிடம் கொஞ்சம் தேவஅன்பு அதிகமாகத்தான் இருக்கும். ஆனாலும் வேதாகமம், எல்லோருக்கும் சொஸ்தமானதை மிகைப்படுத்திச் சொல்லாமல், எல்லோருக்கும் சாப்பிட்டு திருப்தி அடைந்ததை மிகைப்படுத்திச் சொல்லக் காரணம் என்ன? - 29இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார். 30அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார். 31ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள். 32பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்து போவார்களே என்றார். 33அதற்கு அவருடைய சீஷர்கள்: இவ்வளவு திரளான ஜனங்களுக்குத் திருப்தியுண்டாகும்படி வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்தரத்திலே நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள். 34அதற்கு இயேசு: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள். 35அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, 36அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள். 37எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடை நிறைய எடுத்தார்கள். 38ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர் நாலாயிரம் பேராயிருந்தார்கள். 39அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு, படவில் ஏறி, மக்தலாவின் எல்லைகளில் வந்தார் - மத்தேயு 15:29-39
இதை ஒரு ஊதாரணத்தோடு பார்த்தால் எளிதாய் புரிந்துக் கொள்ளலாம், மணி என்கிற பிறவி குருடனும், மாணிக்கம் என்கிற ஊமையனும் அந்த கூட்டத்திற்கு சென்றார்கள், இயேசு கிறிஸ்து மணிக்கு பார்வை கிடைக்க செய்தார், மாணிக்கமும் பேச ஆரம்பித்து விட்டார், ஆனாலும் அவர்கள் இருதயம் திருப்தியடையாமல் இருந்ததாம், ஆனால் இறுதியில் இயேசு கிறிஸ்து கொடுத்த அப்பத்தை சாப்பிட்ட பின்பு தான் அவர்கள் ஆத்மா திருப்தியடைந்ததாம்.
இறுதியில் மணியும் மாணிக்கமும் பார்வையடைந்தவராகவும், பேசுகிறவராகவும் தங்கள் கிராமத்திற்கு சென்ற பொழுது, ஊராருக்கு ஒரே ஆச்சரியம், எல்லாரும் இது எப்படி நடந்தது என்று கேட்ட பொழுது, பார்வையடைந்த மணியும், பேசுகிற மாணிக்கமும் இயேசு கிறிஸ்து கொடுத்த அப்பத்தை குறித்து பேச ஆரம்பித்தார்களாம், ஏனென்றால் அவர்கள் சாப்பிட்ட அப்பம் பரிசுத்த ஆவியானவரை குறிக்கிறது.
மேலும், முதல் முறை ஐயாயிரம் பேரை போஷித்த கர்த்தர், அடுத்த முறை இன்னும் அதிகமானோரை போஷித்திருக்கலாமே என்கிற கேள்வி எழும்ப தான் செய்யும், ஆனால் கர்த்தர் செய்த இரண்டாவது அற்புதத்தில் நாலாயிரம் பேர் மாத்திரமே போஷிக்க பட்டார்கள், ஏனென்றால் அது பரிசுத்த ஆவியானவரை பகிர்ந்து அளிப்பதை குறிக்கிறது, அதற்கு அலாதி விசுவாசம் தேவை, பாடுகளின் வழியாக கடந்து போகிற அனுபவம், அதனால் தான் கிருபையை பெற்றுக் கொள்ளுகிறவர்களை காட்டிலும் அபிஷேகத்தை பெற்றுக் கொள்கிறவர்கள் குறைவாய் இருக்கிறார்கள்.
கிருபையை பெற்றுக் கொண்டவர்கள் அநேகராய் இருந்தார்கள், அவர்கள் வியாதியஸ்தர்களாய் இருந்தவர்கள், ஆனால் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக் கொண்டவர்களோ சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் என முற்றிலும் தகுதியற்றவர்களாய் இருந்தவர்கள், அவர்கள் வாழ்க்கையில் கிறிஸ்து பிரத்தியட்சமாய் வெளிப்பட்டிருந்தார், அதனால் தான் கர்த்தர் அவர்களை சாலொமோனை தேடி வந்த தென்தேசத்து ராஜஸ்திரீயோடு ஒப்பிடுகிறார் - 42.தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள் - மத்தேயு 12:42
இந்த விலையேறப் பெற்ற கிருபையும் சத்தியமும், நாம் வியாதியஸ்தர்களாய் இருந்ததினாலோ, இல்லையென்றால் நாம் சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனராக இருந்ததினாலோ உண்டானது அல்ல, மாறாக இயேசு கிறிஸ்து சிலுவையில் பாடுபட்டு மரித்து மரணத்தை வென்றதினால் உண்டானது - 40.யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார் - மத்தேயு 12:40
வேதாகமம் வியாதியஸ்தர்கள் சொஸ்தமானதை மிகைப்படுத்திச் சொல்லாமல், கர்த்தர் கொடுத்த அப்பத்தை மிகைப்படுத்திச் சொல்லுகிறது, நாம் எதை குறித்து மேன்மை பாராட்டுகிறோம்?
கர்த்தர் நமக்கு கொடுத்த அப்பம், அதாவது கிருபையும் சத்தியமும் விலையேறப்பெற்றது தான், ஆனால் அது கிறிஸ்துவின் பாடுகளினால் உண்டானது, அதனால் நாம் கர்த்தர் கொடுத்த வரங்களை குறித்து மேன்மை பாராட்டாமல், இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை குறித்தே மேன்மை பாராட்டுவோம் - 14.நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங் குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன் - கலாத்தியர் 6:14
அடுத்த பாகம்: சமாதானத்தோடே போ