நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால்
நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால்
முந்தைய பாகம்: கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்
பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்க, நாம் மனந்திரும்பி சிறு பிள்ளைகளைப் போல மாறவேண்டியது அவசியமாக இருக்கிறது, இயேசு கிறிஸ்து சொன்ன இந்த உபதேசத்தில் இரண்டு காரியங்கள் இருக்கிறது, முதலாவது நாம் பாவத்தை விட்டு மனந்திரும்ப வேண்டும், அடுத்ததாக நாம் தேவனுடைய பிள்ளைகளாக மாற வேண்டும் - 1.அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள். 2.இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி: 3.நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 4.ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான் - மத்தேயு 18:1-4
இதை ஏன் கர்த்தர் சீஷர்கள் "பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான்" என்று கேட்டபொழுது சொன்னார்? நாம் பாவத்தை விட்டு மனம் திரும்ப வேண்டும் என்று சொன்ன வேதாகமம், பாவங்களிலேயே பிரதான பாவமாக அகந்தையையும் மனமேட்டிமையும் வரிசைப் படுத்துகிறது, இந்த அகந்தை மனமேட்டிமையானது அநேக நேரங்களில் ஒரு பாவமாகவே தெரியாது, ஆனால் எல்லோரை காட்டிலும் தன்னை உயர்ந்தவனாக, அதாவது தன்னை தேவனைப் போல காண்பிக்கச் செய்யும், அதன் விளைவாகவே சீஷர்கள் "பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான்" என்று கேட்டார்கள் - 17.தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான். 18.அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை - நீதிமொழிகள் 16:17-18
பள்ளிக் கல்லூரிகளில், பாட வகுப்பு[Theoretical Class], செய்முறை வகுப்பு[Practical Class] என இரண்டு விதமான பாடமுறை இருக்கும், ஆனால் கற்றுக் கொடுக்கும் பாடங்களில் எல்லாவற்றையும் செய்முறை வகுப்பில் செய்து காண்பிக்க மாட்டார்கள், சில முக்கியமான பாடத்தை மாத்திரம் செய்முறை வகுப்புகளில் செய்து காண்பிப்பார்கள், ஏனென்றால் அது வேலையில் சேர்வதற்கு மிகவும் அத்தியாவசியமான பாடமாய் இருக்கும், அதுபோல தான் இங்கு கர்த்தர், தன்னுடைய உபதேசங்களில், நாம் மனம் திரும்பி சிறு பிள்ளைகளை போல மாறினால் தான் கர்த்தருடைய நித்திய ராஜ்யத்தில் பிரவேசிக்கமுடியும் என்பதை "சிறு பிள்ளைகளை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்து" செய்து காண்பித்தார் - 13.அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள். 14.இயேசு அதைக் கண்டு, விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. 15.எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, 16.அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார் - மாற்கு 10:13-16
எனவே, நாம் தேவனுடைய பிள்ளையாக மாறாவிட்டால், அப்போஸ்தல ஊழியம் செய்தால் கூட, பரலோக ராஜ்யத்தை சுதந்தரிக்க முடியாது என்பதினால் தான், கர்த்தர் அப்போஸ்தல ஊழியத்திற்காக தெரிந்தெடுக்கப்பட்ட தன்னுடைய சீஷர்களிடம் இதை சொன்னார் - 15.பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள். 16.இயேசுவோ அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவைகளைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. 17.எவனாகிலும் சிறுபிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் - லூக்கா 18:15-17
ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறப்பதின் மூலமாக
முதிர்வயதான நிக்கொதேமுவுக்கு, தான் சிறு பிள்ளையாவது எப்படி என்கிற ஒரு கேள்வி உண்டானது, அப்பொழுது கர்த்தர் நாம் ஞானஸ்நானம் பெற்று பரிசுத்த ஆவியினாவரின் அபிஷேகத்தை பெறுவதே, சிறு பிள்ளையாக மாறுவதின் முதல் படி என்பதை இப்படியாகச் சொன்னார் - 3.இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 4.அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான். 5.இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் - யோவான் 3:3-5
மேலும், நாம் பரிசுத்த ஆவியானவருக்காக வேண்டிக் கொள்ளும் பொழுதே, தேவனுடைய பிள்ளையாக மாறிவிடுகிறோம், அதனால் தான் "பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா" என்று இயேசு கிறிஸ்து கற்றுக் கொடுத்தார் - பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார் - லூக்கா 11:13
கர்த்தர்மேல் வைக்கும் விசுவாசத்தின் மூலமாக
"விசுவாசம்" என்பது நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதின் அடையாளமாக இருக்கிறது, அதாவது நம்முடைய வாழ்க்கையில் இம்மைக்கும் மறுமைக்கும் இயேசு கிறிஸ்து மாத்திரம் போதும் என்ற நம்பிக்கை உள்ளவர்களாக மாறும் பொழுது, நாம் தேவனுடைய பிள்ளையாக மாறிவிடுகிறோம் - 12.அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். 13.அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள் - யோவான் 1:12-13
இப்படி, விசுவாசத்தின் மூலமாக நான் தேவனுடைய பிள்ளைகளாக மாறுவதை தான், இயேசு கிறிஸ்து "நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள்" என்று சொன்னார் - 35.அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான். 36.ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களைவிட்டு மறைந்தார் - யோவான் 12:35-36
"விசுவாசம்" நம்மை தேவனுடைய பிள்ளையாக மாற்றுகிறது, ஆனால் அந்த விசுவாசத்திற்கு ஒரு குறிப்பிட்ட எல்லை கிடையாது, இங்கு ஒருவன் பாவமன்னிப்புக்காக இயேசுவின் மேல் விசுவாசம் வைத்து, தேவனுடைய பிள்ளையாக மாறிவிட்டான், அதனால் தான், கர்த்தர் அவனை "மகனே" என்று அழைத்தார் - 1.அப்பொழுது, அவர் படவில் ஏறி, இக்கரைப்பட்டுத் தம்முடைய பட்டணத்திற்கு வந்தார். 2.அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார் - மத்தேயு 9:1-2
அதேபோல இங்கு ஒரு ஸ்திரீ இரட்சிப்புக்காக கர்த்தர்மேல் விசுவாசம் வைத்து, தேவனுடைய பிள்ளையாக மாறினாள், அதனால் தான் கர்த்தர் அவளை "மகளே" என்று அழைத்தார் - 20.அப்பொழுது, பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ: 21.நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். 22.இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம்முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள் - மத்தேயு 9:20-22
இயேசு கிறிஸ்து ஒருவரே நல்லவர் என்று அறிக்கை செய்யும் பொழுது
இந்த உலகம் கர்த்தரை வெறுக்கிற உலகமாக தான் இருக்கிறது, இதில் அநேகர் பலவிதமான உலக காரியங்களை குறித்து மேன்மை பாராட்டி கொண்டிருக்கிறார்கள், இவைகளுக்கு மத்தியில் எல்லாவற்றையும் உண்டாக்கிய ஞானமாகிய இயேசு கிறிஸ்து மாத்திரமே நல்லவர் என்றும் நீதியுள்ளவரென்றும் நாம் அறிக்கை செய்யும் பொழுது நாம் தேவனுடைய பிள்ளைகளாக மாறி விடுகிறோம் என்பதைத்தான் கர்த்தர் இப்படியாக சொன்னார் - 16.இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப் பார்த்து: 17.உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது. 18.எப்படியெனில், யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள். 19.மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார் - மத்தேயு 11:16-19
இயேசு கிறிஸ்துவை துதிக்கும் பொழுது
இயேசு கிறிஸ்து எருசலேமுக்கு வந்தபொழுது திரளான ஜனங்கள், கர்த்தரை துதித்து ஆர்ப்பரித்தார்கள் - 6.சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து, 7.கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள். 8.திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். 9.முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள் - மத்தேயு 21:6-9
இப்படி கர்த்தரை துதித்து ஆர்ப்பரித் ஜனங்களுக்குள், அநேகர் குருடர் சப்பாணியராய் இருந்து சுகம் பெற்றவர்கள், அவர்கள் கர்த்தரை துதித்து ஆர்ப்பரித்த பொழுது, வேதாகமம் அவர்களுக்கு கொடுத்த பெயர் தான் பிள்ளைகள், குழந்தைகள், பாலகர் என்பதாகும் - 14.அப்பொழுது, குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களைச் சொஸ்தமாக்கினார். 15.அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து, 16.அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார் - மத்தேயு 21:14-16
இதைத்தான் சங்கீதக்காரன் தீர்க்கதரிசனமாக இப்படி சொல்லி இருந்தான் - 1.எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர். 2.பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர் - சங்கீதம் 8:1-2
சத்துருக்களைச் சிநேகிக்கும் பொழுது
இந்த உலகில் யாருமே எனக்கு பகைஞர் இல்லை என்று சொல்ல முடியாது, என்னை துன்பப்படுத்துகிறீர்கள் யாருமே கிடையாது என்றும் சொல்ல முடியாது, விசுவாசிகள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில், ஒவ்வொரு நாளும், பலரால் விரோதிக்கப்பட்டும் துன்பப்படுத்தப்பட்டும் தான் வருகிறார்கள்.
ஆனால், கர்த்தர் நம்மை துன்பப்படுத்துகிறவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் என்று சொல்லுகிறார், நாம் இதை செய்வோமானால், நாம் தேவனுடைய பிள்ளைகளாக மாறிவிடுகிறோம் - 43.உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 44.நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். 45.இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார் - மத்தேயு 5:43-45
அதில் மிக முக்கியமானது என்னவென்றால், நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்கும் பொழுதும், உதவி செய்யும் பொழுதும், அவர்களிடம் இருந்து எதையுமே எதிர்பார்க்க கூடாது, ஏனென்றால் நம்மை சபிக்கிறர்களுக்கும் நிந்திக்கிறவர்களுக்கும் நன்மை செய்ய நம்மால் கூடாது, கர்த்தர் கட்டளையிட்டதால் தான் அதை செய்கிறோம், நமக்குள் வாசம் செய்கிற பரிசுத்த ஆவியானவரே அதை செய்கிறவர், அதனால் அதற்கான பிரதிபலனை மனிதர்களிடம் எதிர்பார்க்கவும் கூடாது - 32.உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே. 33.உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. 34.திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே. 35.உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே - லூக்கா 6:32-35
ஊழியத்தை கர்த்தருக்கு அர்ப்பணித்து நன்றி சொல்லும் பொழுது
ஊழியத்தை முடித்து வந்த சீஷர்கள், எல்லா அற்புதங்களும் கர்த்தருடைய நாமத்தினால் தான் நடந்தது என்று அறிக்கை செய்த பொழுது, கர்த்தர் ஆவியில் களிகூர்ந்து, பிள்ளைகள்(பாலகர்) என்று அழைத்தார் - 17.பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள். 18.அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். 19.இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. 20.ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். 21.அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது - லூக்கா 10:17-21
ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும் பொழுது
தான் சிலுவைக்கு போகும் முன்பு, கர்த்தர் தன்னுடைய சீஷர்களை, "பிள்ளைகளே" என்று அழைத்து கொடுத்த கட்டளை தான் "ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளை", இதற்குள் எல்லா கட்டளைகளும் அடங்கி விடுகிறது என்பதினால் தான் கர்த்தர் இதை புதிய கட்டளை என்று சொன்னார், கர்த்தரின் இந்த கட்டளையின்படி, நாம் அன்பு நிறைந்தவர்களாக இருக்கும் பொழுது தேவனுடைய பிள்ளையாகவே மாறிவிடுகிறோம் - 33.பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன். 34.நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். 35.நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார் - யோவான் 13:33-35
அடுத்த பாகம்: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தை