முந்தைய பாகம்: யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி
நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, வார்த்தையானவரின் குமாரன் மாத்திரம் அல்ல, அவரோடு பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் இருந்தார்கள், அவர்கள் மூவரும் நமக்காக மரணத்தை ருசி பார்த்தார்கள் என்பதை வேதாகம ஆதாரத்துடன் இந்த தொகுப்பில் பார்ப்போம்.
இங்கே நிற்கிறவர்களில் சிலர்
முதலாவது, தேவனுடைய ராஜ்யம் வருவது என்பது கர்த்தரின் சிலுவை மரணத்தையே குறிக்கிறது என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும், அதனால் தான் கர்த்தரை கல்லறையில் வைக்க வந்த யோசேப்பை, தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்த யோசேப்பு என்று வேதாகமம் கூறுகிறது - கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான் - மாற்கு 13:43
இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழிய நாட்களில் சொன்ன ஒரு காரியம் - இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் - லூக்கா 9:27
கர்த்தர் தன்னுடைய சீஷர்களில் சிலரை குறித்து இப்படியாக சொன்னார் என்பது பொதுவான அபிப்பிராயம், அப்படியென்றால் ஒவ்வொரு சீஷரின் மரணத்தை குறித்தும் வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்க வேண்டுமே? இதை ஒரு உதாரணத்தோடு பார்த்தால் எளிதாக புரிந்துக் கொள்ளலாம், ஒரு ஏழை விதவை, என்னுடைய எல்லா பிள்ளைகளையும் கரை சேர்க்கும் வரை இந்த சரீரம் ஓய்வெடுக்காது என்று சொல்லிக் கொண்டு வந்தார், அது போலவே மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து, தன்னுடைய எல்லா பிள்ளைகளும் படித்து நல்ல நிலைமைக்கு வரும் வரை வேலை பார்த்து அதன் பின்பு மரித்தும் போனார்.
அது போலவே, கர்த்தர் இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் வருவதை ஊர்ஜீதம் செய்த பின்பு, அதாவது மனு குலத்தின் மீதான தேவ கோபாக்கினை சிலுவையில் தீர்ந்ததை நிச்சியம் செய்த பின்பு தான் தங்கள் ஜீவனை விடுவார்கள் என்றார், மேலும் அவர்கள் யார் என்பதை காண்பிக்கவே, கர்த்தர் இதை சொல்லி, சில நாட்கள் கழித்து தன் சீஷர்களை அழைத்துக் கொண்டு மலைக்கு சென்றதாக மத்தேயு, மாற்கு, லூக்கா என மூன்று சுவிசேஷ புஸ்தகங்களிலும் எழுதப்பட்டுள்ளது - 28.இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டு நாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார். 29.அவர் ஜெபம்பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது. 30.அன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி, 31.அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். 32.பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டுபேரையும் கண்டார்கள். 33.அவ்விருவரும் அவரை விட்டுப் பிரிந்துபோகையில், பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது இன்னதென்று அறியாமல் சொன்னான். 34.இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது; அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள். 35.அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று. 36.அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லாமல் அடக்கிவைத்திருந்தார்கள் - லூக்கா 9:28-36
இப்படி கர்த்தர், இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று சொன்னது, மோசேயும் எலியாவுமாக காணப்பட்ட பிதாவானவரின் குமாரனும் பரிசுத்த ஆவியானவரின் குமாரனுமே!
யூதருடைய ராஜா என்று எழுதி சிலுவையின்மேல் கட்டினார்கள்
பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலின் படியே, நமக்கு ஆலோசனை சொன்ன அப்போஸ்தலனாகிய பவுல், நமக்காக சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவை மாத்திரமே நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்று இந்த வசனத்தில் சொல்லுகிறார் - 1.சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. 2.இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன் - I கொரிந்தியர் 2:1-2
சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவை மாத்திரம் நாம் அறிந்துக் கொள்ள வேண்டுமென்றால், மத்தேயு, மார்க், லூக்கா, யோவான் என நான்கு சுவிஷேச புஸ்தகங்கள் கர்த்தரோடு சிலுவையில் அறையப்பட்ட இரண்டு பேரை குறித்துச் சொல்ல வேண்டும்? அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற தீர்க்கதரிசனம் நிறைவேறினதை சொல்வது மாத்திரம் நோக்கமாய் இருந்தால், கர்த்தரோடு வேறு சிலரும் சிலுவையில் அறையப்பட்டார்கள் என்று ஒரே ஒரு சுவிஷேச புஸ்தகத்தில் மாத்திரம் சொல்லியிருக்கலாமே? ஏன் இரண்டு பேர் கர்த்தரோடு சிலுவையில் சொல்லி அறையப்பட்ட இரண்டு பேரை குறித்து நான்கு சுவிஷேச புஸ்தகத்திலும் சொல்ல வேண்டும்? அதுவும் கர்த்தரின் வலது பக்கத்தில் ஒருவரும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவருமாக அவர்கள் இருவரும் அறையப்பட்டார்கள் என்று சொல்லப்பட வேண்டும்?
இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை குறித்து சொல்லும் பொழுது, வார்த்தையானவரின் குமாரனோடு, பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் பாடுபட்டதை மத்தேயுவும், மார்க்கும் அறிந்திருந்தார்கள், ஆனாலும் அவர்கள் மூவருமே பிரிக்க முடியாத ஒரே தேவன் என்கிற அணுகுமுறையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் என மத்தேயுவும், மார்க்கும் சொல்லி, அதன் பின்பு சிலுவையின்மேல் யூதருடைய ராஜா என்று எழுதப்பட்டதையும் சொல்லி, அதன் பின்பு இரண்டு கள்ளர்கள் சிலுவையில் அறையப்பட்டதை எழுதியிருக்கிறார்கள் - 22.கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய், 23.வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 24.அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு, அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள். 25.அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம்மணி வேளையாயிருந்தது. 26.அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின்மேல் கட்டினார்கள். 27.அல்லாமலும், அவருடைய வலது பக்கத்தில் ஒருவனும் அவருடைய இடது பக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேகூடச் சிலுவைகளில் அறைந்தார்கள். 28.அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதனாலே நிறைவேறிற்று - மாற்கு 15:22-28
ஆனால் லூக்காவும், யோவானும், வார்த்தையானவரின் குமாரன், பிதாவானவரின் குமாரன், பரிசுத்த ஆவியானவரின் குமாரன் மூவருமே தனித்தனியாக சிலுவையில் அறையப்பட்டது போல் பாடுபட்டார்கள் என்பதை விளக்க, அவரோடு இரண்டு பேர் சிலுவையில் என்று சொல்லி, அதன் பின்பு மூன்று பாஷைகளில் "நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா" என்று எழுதினார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் - 17.அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார். 18.அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள். 19.பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது. 20.இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது. 21.அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள். 22.பிலாத்து பிரதியுத்தரமாக: நான் எழுதினது எழுதினதே என்றான் - யோவான் 19:17-22
மத்தேயு மற்றும் மார்க் சுவிஷேச புத்தகங்களின் மூலமாக இயேசுவுடன் இரண்டு திருடர்களும் சிலுவையில் அறையப்பட்டதை நாம் அறிந்திருந்ததினால், இரண்டு பேர் என்றவுடன் நமக்கு அவர்களை குறித்த எண்ணம் தான் வருகிறது, ஆனால் இங்கே அப்போஸ்தலனாகிய யோவான் அந்த திருடர்களைப் பற்றிப் பேசவில்லை, மாறாக கிறிஸ்துவைப் பற்றி மட்டுமே பேசுகிறார். மேலும், இந்த வசனத்தை இரண்டு விதமாகப் படிக்கலாம், இதன் உலகப் பொருள் என்னவென்றால், இயேசு இரண்டு பூவுலக மனிதர்களுடன், அதாவது இரண்டு திருடர்களுடன் சிலுவையில் அறையப்பட்டார் என்பதாகும், ஆவிக்குரிய அர்த்தம் என்னவென்றால், வார்த்தையின் குமாரன், பிதாவின் குமாரனுடனும் பரிசுத்த ஆவியின் குமாரனுடனும் சிலுவையில் அறையப்பட்டார், எனவே, கிரேக்க மூலநூலின் சரியான மொழிபெயர்ப்பு என்னவென்றால் - அங்கே அவரை இரண்டு பேருடன் சிலுவையில் அறைந்தார்கள், ஒரு பக்கத்தில் ஒருவரையும், மறு பக்கத்தில் அடுத்தவரையும், நடுவிலுமாக இயேசுவை சிலுவைகளில் அறைந்தார்கள்.
ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி
இவர்கள் இருவரும், வார்த்தையானவரின் குமாரனின் பாடுகளை இனிமேலும் காண முடியாது என்று சொல்லி, தங்கள் ஜீவனை விட்ட பொழுது தான், ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி என்கிற வேதனையின் சத்தம் வார்த்தையானவரின் குமாரனிடமிருந்தது உண்டானது - 45.ஆறாம் மணி நேரமுதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. 46.ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். 47.அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். 48.உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். 49.மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். 50.இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார் - மத்தேயு 27:45-50
சில நேரங்களில் கணவன் மரிக்கும் பொழுது, "ஏன் என்னைக் கைவிட்டீர்" என்று சொல்லி அழுவதும், அந்த அதிர்ச்சியில் தன்னுடைய ஜீவனை விட்ட மனைவிகளும் உண்டு, அது அவர்களுக்கிடையே இருந்த மாசற்ற அன்பையே வெளிப்படுத்துகிறது.
இப்படியாக இயேசு கிறிஸ்து என்கிற நாமத்தில், ஒன்றாய் இருந்த மூவரில், இரண்டு பக்கத்திலும் இருந்த பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனும் முதலாவது மரிக்க வேண்டும், அதன் பின்பே வார்த்தையானவரின் குமாரன் மரிக்க வேண்டும், என்பதை விளக்க தான், மோசே ஒரு ஆட்டுக்குட்டியை அடித்து அதின் இரத்ததை, முதலாவது இரண்டு நிலைக்கால்களிலும், அதன் பின்பு மேற்சட்டத்திலும் என மூன்று இடத்தில் தெளிக்க சொன்னார் - 5.அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒருவயதுள்ளதுமாய் இருக்கவேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்துகொள்ளலாம். 6.அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து, 7.அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, 8.அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள் - யாத்திராகமம் 12:5-8
மூவரின் வருகை
இங்கே நிற்கிற சிலர் என்று சொல்லி, அவர்களின் மரணத்தை சொன்ன கர்த்தர், தன்னுடைய வருகையின் பொழுதும் அவர்கள் என் கூட வருவார்கள் என்பதை இப்படியாகச் சொன்னார் - 26.என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரன் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார் - லூக்கா 9:23-26
இங்கு பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் என்று கர்த்தர் யாரை குறித்துச் சொன்னார்?அவர்களையும் தன்னுடைய சீஷர்கள் மறுரூப மலையில் தரிசிக்க கர்த்தர் கிருபை செய்தார், அது மோசேயும் எலியாவுமாக காணப்பட்ட பிதாவானவரின் குமாரனும் பரிசுத்த ஆவியானவரின் குமாரனுமே!
மூவரின் ராஜ்யம்
கர்த்தரின் சீஷர்களில் சகோதரர்களாக இருந்த யாக்கோபும் யோவானும் கர்த்தரோடு அமர்ந்து பரலோக ராஜ்ஜியத்தில் ஆளுகை செய்ய விரும்பினார்கள், அது இப்படியாக வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது - 35.அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள். 36.அவர் அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார். 37.அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள் செய்யவேண்டும் என்றார்கள். 38.இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும், உங்களால் கூடுமா என்றார். 39.அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள். 40.ஆனாலும் என் வலதுபாரிசத்திலும் என் இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார். 41.மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, யாக்கோபின் மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள் - மாற்கு 10:35-41
இது வேதாகமத்தில் எழுதப்பட காரணம் என்ன? நாம் அந்த சீஷர்களின் இருதயத்தில் இருந்த காரியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவா இது வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கிறது? இல்லவே இல்லை, மாறாக கர்த்தரோடு வலதுபாரிசத்திலும் இடதுபாரிசத்திலும் என இரண்டு பேர் அமர்ந்து பரலோக ராஜ்ஜியத்தில் ஆளுகை செய்ய போகிறார்கள் என்கிற பரம இரகசியத்தை அறிவிக்கவே இது எழுதப்பட்டுள்ளது.
யார் தேவன் முன்குறித்த அவர்கள்? ஒருவேளை கர்த்தர் மோசையையும் எலியாவையும் தமது வலது பாரிசத்திலும் இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்க முன் குறித்திருந்தால்? யாக்கோபு மற்றும் யோவானிடம் நீங்கள் மோசையையும் எலியாவையும் போல பாடுபட தயாரா என்று தானே கேட்டிருப்பார்? ஒருவேளை கர்த்தர் ஸ்தேவானையும் அந்திப்பாவையும் அதற்காக முன் குறித்திருந்தால்? நீங்கள் ஸ்தேவானையும் அந்திப்பாவையும் போல பாடுபட தயாரா என்று தானே கேட்டிருப்பார்? ஆனால் கர்த்தர் நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும், உங்களால் கூடுமா என்று கேட்க காரணம் என்ன?
ஏனென்றால், வார்த்தையானவரின் குமாரனின் வலது பாரிசத்திலும் இடதுபாரிசத்திலும் இருக்க போவது, பிதாவானவரின் குமாரனும், பரிசுத்த ஆவியானவரின் குமாரனுமே, அதாவது திரியேக தேவனே நம்மை ஆளுகை செய்ய போகிறவர். அதனால் தான் கர்த்தர், யாக்கோபு யோவானிடம் நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்கே தெரியவில்லை, அதாவது தேவனுக்கான இடத்தை நீங்கள் கேட்கலாமா? என்றார்.
பரிசுத்த தூதர்கள் என பன்மையில் சொல்லக் காரணம் என்ன?
ஆனால் பரிசுத்த ஆவியானவரின் குமாரனை, பரிசுத்த தூதர்கள் என பன்மையில் சொல்லக் காரணம் என்ன? பரிசுத்த தூதர்கள் என்பது விசுவாசிகளை குறிக்கிறது என்பது பொதுவான அபிப்பிராயம், அது சரியா? இதை ஆராய்ந்துப் பார்க்கும் முன்பு, மெய்யான ஒளியாகிய இயேசு கிறிஸ்துவை [யோவான் 1:9] ஆதியாகமம் புத்தகம் எப்படியாக விளக்குகிறது என்பதை பார்ப்போம், இதில் இயேசு கிறிஸ்துவின் திருத்துவதை விளக்கவே, தேவன் மூன்று விதமான சுடர்களை உண்டாக்கினார், அதில் சூரியன் பிதாவானவரின் குமாரனையும், சந்திரன் வார்த்தையானவரின் குமாரனையும், நட்சத்திரங்கள் பரிசுத்த ஆவியானவரின் குமாரனையும் குறிக்கிறது, இதில் நமக்கு வெளிச்சத்தை கொடுக்க ஒரு சூரியனையும், ஒரு சந்திரனையும் உண்டாக்கின தேவன், இந்த நட்சத்திரங்களை மாத்திரம் எண்ணிக்கைக்கு அடங்காததாய் படைக்க காரணம் என்ன? ஏனென்றால் பரிசுத்த ஆவியானவரின் குமாரன் நம்மெல்லோரையும் நிரப்புகிறவராய் இருக்கிறார் என்கிற இரகசியத்தை விளக்கவே தேவன் எண்ணற்ற நட்சத்திரங்களை உண்டாக்கினார் - 14.பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். 15.அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 16.தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். 17.அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், 18.பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 19.சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று - ஆதியாகமம் 1:14-19
இப்படி நம்மெல்லோரையும் நிரப்பும் பரிசுத்த ஆவியானவரின் குணாதிசயத்தை விளக்கவே, சாலொமோன் ஞானி, தேவனுடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை "ஒரே பிள்ளை" என்றுஅழைத்து, கர்த்தரின் திருத்துவத்தை விளக்க வார்த்தையானவரின் குமாரனை "சந்திரனைப்போல் அழகுள்ளவர்" என்றும், பிதாவானவரின் குமாரனை "சூரியனைப்போல் பிரகாசமுள்ளவர்" என்றும் சொல்லி, பரிசுத்த ஆவியானவரின் குமாரனை "கொடிகள் பறக்கும் படை" என்று பாடியுள்ளார் - 9.என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள். 10.சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம்போல் உதிக்கிற இவள் யார்? - உன்னதப்பாட்டு 6:9-10
அவர்கள் மூவரும் ஒருமைப்பட்டு இயேசு என்கிற ஒரே தெய்வமாக இருந்த படியால் தான், சீஷர்கள் கர்த்தரிடத்தில் "உங்களின் வருகையின் அடையாளம்" என்று சொல்லாமல், "உம்முடைய வருகையின் அடையாளம்" என்ன என்று கேட்டார்கள் - பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள் - மத்தேயு 24:3
அடுத்த பாகம்: வாசல், மேய்ப்பன், காவல்காரன்