மத்தேயு தன்னுடைய சுவிஷேச புஸ்தகத்தில், கர்த்தர் குஷ்டரோகியை சுகப்படுத்தின அற்புதத்தையும், நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரனை சுகப்படுத்தின அற்புதத்தையும் அடுத்தடுத்து எழுதினத்திற்கு ஒரு காரணம் உண்டு, ஏனென்றால் இந்த இரண்டு அற்புதங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பல தேவ ரகசியங்களை அறிந்து கொள்ள முடியும்.
கர்த்தர் குஷ்டரோகியை சுகப்படுத்தின அற்புதத்தை குறித்து மத்தேயுவின் சுவிசேஷ புஸ்தகத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது - 1.அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள். 2.அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். 3.இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான். 4.இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார் - மத்தேயு 8:1-4
அதனை தொடர்ந்து, கர்த்தர் நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரனை சுகப்படுத்தின அற்புதத்தை குறித்து இவ்வாறு எழுதப்பட்டுள்ளது - 5.இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து: 6.ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான். 7.அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார். 8.நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். 9.நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்றான். 10.இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 11.அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள். 12.ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 13.பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான் - மத்தேயு 8:5-13
தொட்டு சுகமாக்கினீர் VS தொடாமலேயே சுகமாக்க உம்மால் கூடும்
இங்கு கர்த்தர் குஷ்டரோகியை தொட்டு சுகப்படுத்தினது ஒரு மிகப்பெரிய அற்புதம் தான், ஆனால் இந்த சாட்சியை கேட்டவர்களுக்கு கர்த்தர் தொட்டால் தான் சுகம் நடக்கும் என்கிற குறுகிய எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை, அப்படி தான் கர்த்தரோடு நூற்றுக்கு அதிபதியின் சென்று கொண்டிருந்த எல்லோரும் விசுவாசித்தர்கள், கர்த்தர் நூற்றுக்கு அதிபதியின் வீட்டுக்கு வர வேண்டும், அந்த திமிர்வாதகாரனை தொட்டால் சுகம் கிடைக்கும் கர்த்தரை அழைத்து சென்று கொண்டிருந்தார்கள்.
அப்படித்தான் நாமும் இருக்கிறோம், ஒரு சாட்சியை கேட்கும் போது தேவன் மேல் அளவுக்கு அதிகமான விசுவாசம் உள்ளவர்களாய் மாறுகிறோம், அந்த அற்புதத்தை போலவே என் வாழ்க்கையிலும் அற்புதம் செய்யும் என்று சொல்லி ஜெபிக்கிறோம், ஆனால் இங்கு அந்த நூற்றுக்கு அதிபதி நமக்கு ஒரு பாடத்தை சொல்லிக் கொடுக்கிறார், அது என்னவென்றால், அவன் கர்த்தரிடம் நீங்க அந்த குஷ்டரோகியை தொட்டு சுகப்படுத்தினது உண்மைதான், ஆனால் நீங்க சர்வ வல்லமையுள்ள தேவனாச்சே, உம்மால் தொடாமலும் சுகப்படுத்த முடியும் என்று வேண்டுதல் செய்தார் என்று பார்க்கிறோம், அது கர்த்தரை ஆச்சரியப்பட செய்தது மாத்திரமில்லாமல், அந்த நூற்றுக்கு அதிபதியின் வாழ்க்கையிலும் அற்புதத்தை செய்து முடித்தது என்று பார்க்கிறோம்.
மற்றவர்களின் சாட்சிகளை கேட்டு விசுவாசம் கொள்வது சந்தோஷமான விஷயம் தான், ஆனால் அந்த அற்புதத்தை போலவே எங்களுக்கு செய்யுங்க என்று சொல்லி சர்வ வல்லமையுள்ள தேவனை ஒரு குறுகிய வட்டத்திற்குள் நாம் கொண்டு வந்து விடக்கூடாது, அதை காட்டிலும் மேலான அற்புதத்தையும் தேவனால் செய்ய முடியும் என்று விசுவாசிக்க வேண்டும், அப்பொழுது தேவன் நமது விசுவாசத்தில் ஆச்சரியப்படுகிறவராய் மேலான அற்புதங்களை நம் வாழ்வில் செய்வார்.
சொல்லாதே VS நானே சொல்வேன்
மேலும் குஷ்டரோகியை சுகப்படுத்தின கர்த்தர், நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு என்று சொல்ல காரணம் என்ன? எந்த ஒரு தாயும் தன் பிள்ளைகளுக்கு செய்ததை மற்றவர்களிடம் சொல்லி சந்தோஷப்பட விரும்ப மாட்டாள், அது போல தான் நம் கர்த்தரும் இந்த குஷ்டரோகியை தொட்டு சுகமாக்கிவிட்டு "இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு" என்றார், இன்றைக்கும் வயதானவர்கள் தங்களுக்கு விருப்பமான பேரக்குழந்தைக்கு இனிப்புகளை வாங்கி கொடுத்து விட்டு இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லுவதுண்டு, அதற்குள் மறைந்திருப்பது நம் மேல் தேவன் வைத்திருக்கும் மேலான அன்பே.
இங்கு அந்த நூற்றுக்கு அதிபதியின் வீட்டில் இன்னும் அற்புதம் நடக்கவில்லை, ஆனால், அவன் செய்த விசுவாச அறிக்கை, இது ஒரு பிள்ளை தன் தாயின் மேல் வைக்கும் நம்பிக்கைக்கு ஒப்பாகவே இருந்தது, அது கர்த்தரே நம் தேவன், அவரால் எல்லாம் கூடும் என்பதாகவும் இருந்தது, தன் பிள்ளைக்கு பாலூட்டுவதை மற்றவர்களுக்கு சொல்ல விரும்பாத தாயானவள், பிள்ளை தன்னை அம்மா என்று அழைக்கும் பொழுது எப்படி நெகிழ்ந்து போவாளோ, அது போலவே கர்த்தர் நூற்றுக்கு அதிபதியின் விசுவாசத்தை எல்லோரிடமும் "இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை" என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்.