ஞானஸ்நானம் எடுக்க யாரை நீ தேர்ந்தெடுப்பாய்?
ஞானஸ்நானம் எடுக்க யாரை நீ தேர்ந்தெடுப்பாய்?
22.இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங்கொடுத்துவந்தார். 23.சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள் - யோவான் 3:22-23
நீங்களும் அந்நாட்களில் வாழ்ந்து, ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்றால், சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் தண்ணீர் அதிகமாயுள்ள இடத்திலே ஞானஸ்நானங்கொடுக்கும் யோவானிடம் செல்வீர்களா? அல்லது வனாந்திரமும் தண்ணீர் குறைவுள்ளதுமான யூதேயா தேசத்தில் ஞானஸ்நானங்கொடுக்கும் இயேசு கிறிஸ்துவிடம் செல்வீர்களா?
நீங்களும் அந்நாட்களில் வாழ்ந்து, ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்றால், பல ஆண்டுகளாக ஞானஸ்நானங்கொடுக்கும் யோவானிடம் செல்வீர்களா? அல்லது தற்பொழுது தான் தன் ஊழியத்தை ஆரம்பித்த இயேசு கிறிஸ்துவிடம் செல்வீர்களா?
நீங்களும் அந்நாட்களில் வாழ்ந்து, ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்றால், இயேசு கிறிஸ்துவுக்கே ஞானஸ்நானங்கொடுத்த யோவானிடம் செல்வீர்களா? அல்லது யோவானிடம் ஞானஸ்நானம் எடுத்த இயேசு கிறிஸ்துவிடம் செல்வீர்களா?
நீங்களும் அந்நாட்களில் வாழ்ந்து, ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்றால், தான் பிறக்கும் முன்பே தேவாலயத்தில் வெளிப்படையாக சாட்சி பெற்ற சகரியாவின் மகனான யோவானிடம் செல்வீர்களா? அல்லது ரகசியமாய் கன்னி மரியாளிடம் பிறந்த இயேசு கிறிஸ்துவிடம் செல்வீர்களா?
நீங்களும் அந்நாட்களில் வாழ்ந்து, ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்றால், ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்கச்சையைக் கட்டிக்கொண்டவனாய், பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியாகிய எலியாவை போலிருக்கும் யோவானிடம் செல்வீர்களா? அல்லது தாழ்மையின் ரூபமாய் இருக்கும் இயேசு கிறிஸ்துவிடம் செல்வீர்களா?
உலக ஞானம் நம்மை யோவானிடம் தான் அழைத்துச் செல்லும், ஆனால் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டால் நம்மை தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடம் அழைத்துச் செல்வார்.