பரலோகத்தின் தேவன் இயேசு கிறிஸ்துவாக தொழுவத்தில் பிறந்து வளர்ந்த நாட்களிலும், இந்த உலகத்தாரால் யோசேப்பு மற்றும் மரியாளின் குழந்தையாக கருதப்பட்ட நாட்களிலும், தச்சனுடைய குமாரனாக வளர்ந்த நாட்களிலும், கர்த்தர் உறங்கினதை குறித்து ஒன்றும் சொல்லாத வேதாகமம், கர்த்தர் தமது சீஷரோடுங்கூடப் படவில் பிரயாணம் செய்த பொழுது "நித்திரையாயிருந்தார்" என்று ஒரு முறை சொல்லியிருக்க காரணம் என்ன? - 22.பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப் போனார்கள். 23.படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல்காற்று உண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது. 24.அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்துபோகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய், அமைதலுண்டாயிற்று. 25.அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள் - லூக்கா 8:22-25
இது சங்கீதகாரன் இயேசு கிறிஸ்துவை குறித்துச் சொன்ன காரியத்திற்கு, அதாவது "இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை" என்ற வாக்குத்தத்தத்திற்கு முரணாகத் தானே இருக்கிறது - 4.இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. 5.கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். 6.பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை - சங்கீதம் 121:4-6
இப்படி கர்த்தர் நித்திரை செய்ததை மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா என மூன்று சுவிஷேச புஸ்தகங்கள் அறிவிக்க காரணம் என்ன? அதிலும் மத்தேயு மற்றும் மாற்கு சுவிஷேச புஸ்தகங்கள், கர்த்தர் நித்திரை செய்த வேளை, ஒருவரும் தூங்கமுடியாதபடி படவு தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்த சமயம் என்றும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்த்தர் நித்திரை செய்தார் என்றும் சொல்லக் காரணம் என்ன? - 23.அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள். 24.அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று; அவரோ நித்திரையாயிருந்தார். 25.அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள். 26.அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதலுண்டாயிற்று. 27.அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள் - மாற்கு 4:23-27
அது மாத்திரம் இல்லாமல், தம்முடைய சீஷர்களை நியமித்த நாட்களில், இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்த இயேசு கிறிஸ்து, தமது சீஷரோடு படவில் பிரயாணம் செய்த பொழுது, அதுவும் ஒருவராலும் தூங்ககூடாத சூழ்நிலையில் "நித்திரை" செய்ய காரணம் என்ன? - 12.அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். 13.பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார். 14.அவர்கள் யாரெனில், பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தொலொமேயு, 15.மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன், 16.யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே - லூக்கா 6:12-16
அதில் ஒரு முக்கியமான பாடம் நமக்கு இருக்க தான் செய்கிறது, முதலாவது நாம் அறிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், நாம் எப்பொழுதும் விழித்துக் கொண்டிருப்பவர்களாகவும் ஜெபிக்கிறவர்களாகவும் இருக்க வேண்டும் - ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார் - லூக்கா 21:36
அது மாத்திரம் இல்லாமல், நம் கர்த்தர் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவனாய் இருக்கிறார் [சங்கீதம் 22:3], ஆனால் படவில் இருந்த சீஷர்களோ, ஜெபிக்கவும் இல்லை, கர்த்தரை துதித்து பாடவும் இல்லை, அதனால் தான் கர்த்தர் நித்திரை செய்கிறவராக காணப்பட்டார் - 10.கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். 11.நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். 12.ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. 13.ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். 14.சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; 15.சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; 16.பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். 17.இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். 18.எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள் - எபேசியர் 6:10-18
நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் நாம் வைக்கிற நம்பிக்கையே நாம் அவரை நேசிப்பதின் அடையாளமாகவும், கர்த்தரை நம்மோடு கிட்டி சேர்ப்பதாகவும் இருக்கிறது, இயேசு கிறிஸ்து விசுவாசத்தின் முக்கியத்தை வெளிப்படுத்திய விதம் இன்னும் ஆச்சரியமாகவேயுள்ளது, எப்பயென்றால் தன்னை விசுவாசிக்காத திரள் கூட்டத்தாரின் மத்தியிலிருந்து கர்த்தர் மறைந்து போனார் என்று பார்க்கிறோம் - 35.அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான். 36.ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களைவிட்டு மறைந்தார். 37.அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை - யோவான் 12:35-37