உன்னிடத்தில் நீ அன்புகூருவது போல
உன்னிடத்தில் நீ அன்புகூருவது போல
முந்தைய பாகம்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்?
கடந்த தொகுப்பில், பரலோக ராஜ்யத்தை சுதந்தரிக்க விரும்பின ஒரு ஐசுவரியனை குறித்துப் பார்த்தோம், அவன் ஓடிவந்து இயேசுவுக்கு முன்பாக முழங்கால்படியிட்டதற்கு காரணம், இயேசுவை "தேவன்" என்று அறிக்கை செய்வதற்காக அல்ல, மாறாக, தன்னை "ஒரு நீதிமான்" என்று காண்பிக்கவே, அதாவது தன்னை பரலோக ராஜ்யத்திற்கு பாத்திரவனாக காண்பிக்கவே அப்படி செய்தான், முடிவில் அவன் பரலோக ராஜ்யத்தை பெற்றுக் கொள்ளாமல், துக்கமுகத்தோடு போனான்.
இங்கு ஒரு நியாயசாஸ்திரி, அதற்கு ஒருபடி மேலே சென்று, இயேசுவை சோதிக்க வேதவசனத்திலிருந்து சில கேள்விகளை கேட்டான், இயேசு கிறிஸ்துவை சோதித்த பிசாசும் வேதவசனத்தை கொண்டு தான் அவரை சோதித்தான் - 25.அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். 26.அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார். 27.அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் உன் முழுச் சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான். 28.அவர் அவனை நோக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார். 29.அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான் - லூக்கா 10:25-29
அந்த நியாயசாஸ்திரி தன்னை நீதிமான் என்று காண்பிக்கவே, வேதவசனத்தை சொல்லி, அதிலிருந்து "நான் அன்பு கூற வேண்டிய பிறன் யார்?" என்று கேட்டான், அவன் கேட்ட கேள்விக்கு கர்த்தர் ஒரு உவமையின் மூலமாக பதில் சொன்னார் - 30.இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். 31.அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். 32.அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். 33.பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, 34.கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். 35.மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான். 36.இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார். 37.அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ்செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார் - லூக்கா 10:30-37
கர்த்தர் சொன்ன பதிலை நிதானித்து ஆராய்வது அவசியம், ஏனென்றால் கர்த்தர் சொன்ன உவமை தன்னை நீதிமானாக காண்பித்தவனுக்கு சொன்னது, உவமை என்றாலே, அதற்கு வெளிப்படையான ஒரு அர்த்தம் இருக்கும், அது இந்த உலகத்தாருக்குரியது, அதே சமயத்தில் மறைவான பதிலும் இருக்கும், அது தேவனுடைய பிள்ளைகளுக்குரியது, கர்த்தர் சொன்ன இந்த உவமையில் 6 பாத்திரங்கள் இருந்தனர்.
1. கள்ளர் கையில் அகப்பட்டவன்
2. கள்ளர்கள்
3. ஆசாரியன்
4. லேவியன்
5. சமாரியன் ✔️
6. சத்திரத்தான்
இந்த உவமையை சொல்லி, நாமும் அந்த சமாரியனை போல் மற்றவர்களுக்கு உதவி செய்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்வது உண்டு, அதனால் தான் பல தேசங்களில் ஆபத்தில் சிக்கிய ஒருவருக்கு உதவி செய்தவரை "நல்ல சமாரியன்" என்று அழைப்பது வழக்கம், அதாவது நம்மை பார்த்து எல்லோரும் மெச்சிக் கொள்ளும் படியாக நடந்து சொல்வது, இதை தான் கர்த்தருக்கு முன்பாக ஓடிவந்து முழங்கால்படியிட்ட ஐசுவரியவானும் செய்தான், தன்னை ஒரு நல்லவனாக காட்டிக் கொண்டிருந்த அவன், தேவனுடைய ராஜ்யத்தை இழந்தவனாக அங்கிருந்து போனான்.
ஆனால், இந்த உவமையின் கேள்வி என்னவென்றால், கள்ளர்கையில் அகப்பட்டவன் அன்பு கூற வேண்டிய பிறன் யார்? என்பதாகும், அதாவது கள்ளர்கையில் அகப்பட்டவன் சந்தித்த ஆசாரியன், லேவியன், சமாரியன் ஆகிய மூன்று பேரில், அவன் யாரை அதிகமாய் நேசிப்பான்? என்பதே கேள்வி, அது நிச்சியமாகவே அவன் காயங்களைக் கட்டி அதில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்த சமாரியன் தான்.
அப்பயென்றால் இந்த உவமையை நாம் யாராக இருக்கிறோம்? நிச்சியமாகவே நாம் சமாரியனாக இருக்க முடியாது, காரணம் அந்த சமாரியன் தான் நாம் அன்புகூர வேண்டிய பாத்திரமாக[பிறனாக] இருக்கின்றாரே, அப்படியென்றால் நாம் யார்? நன்றாய் ஆராய்ந்துப் பார்த்தால் நாம் கள்ளர் கையில் அகப்பட்டவனாகத் தான் இருக்கின்றோம், நமது வஸ்திரம் சத்ருவினால் திருடப்பட்டு விட்டது, நமது ஆவி ஆத்மா சரீரத்தில் தான் எவ்வளவு காயங்கள், நமது வாழ்நாள் குற்றுயிராய் இருப்பவனை போல்த்தான் இருக்கிறது, நமக்கு ஒரு சமாரியன் தேவை, அவர் தான் நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து, நமக்காக தன் ஜீவனையே கொடுத்தவர், நம்மை தன் சொந்த ரத்தத்தினால் கழுவி, பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணி, நித்திய ஜீவனை கொடுக்கிறவர், நாம் நேசிக்க வேண்டிய பிறன் அவர் தான், அது தான் பிரதான கற்பனையாகவும் இருக்கிறது.
இந்த எருசலேமிலிருந்து எரிகோவுக்கு போன மனுஷனை குறித்துச் சொல்லும் பொழுது, அவன் எருசலேம் என்கிற தேவ சமூகத்தை விட்டு எரிகோ என்கிற சுய தேசத்தை நோக்கி பிரயாணம் போனவன், அவன் வஸ்திரங்களை உரிந்து, காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள் சத்துருவாகிய பிசாசே.
அப்பொழுது அங்கு தற்செயலாய் வந்த ஆசாரியரும் லேவியரும், நாம் நமது அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் நபர்கள் தான், அது நண்பர்களாகவும் இருக்கலாம், உறவினர்களாகவும் இருக்கலாம், அவர்களால் நமக்கு ஒரு பிரயோஜனமும் இருக்காது, ஆனால் கர்த்தரோ, நமக்காக பரலோகத்தை விட்டு வந்தவராகவும், நமக்கு நித்திய ஜீவனை கொடுக்கிறவராகவும் இருக்கிறார்.
மேலும், திரும்பி வருவேன் என்று சொன்ன நல்ல சமாரியனாகிய இயேசு கிறிஸ்து, நம்மை தனியே விட்டு விடாமல், கிருபை சத்தியம் என்கிற இரண்டு பணத்துடன் சத்திரத்தான் என்கிற பரிசுத்த ஆவியானவரின் கரத்தில் நம்மை ஒப்படைத்திருக்கிறார், அதனால் மனம் திரும்பி எரிகோவுக்கு போகும் எண்ணத்தை விட்டு, இயேசு கிறிஸ்து நம்மை பரம எருசலேமுக்கு அழைத்துச் செல்ல காத்திருப்போம்.
இந்த உவமை இருபுறமும் கருக்குள்ள பட்டயமாய் இருக்கிறது, நம் இருதயத்தில் பெருமை குடியிருக்குமானால், இந்த உவமை ஒரு நல்ல சமாரியனாக வாழ்ந்து, எல்லோரும் புகழும் படியாக காரியங்களை செய் என்று ஆலோசனை சொல்லும், அதே சமயத்தில் நம்மை தாழ்த்துவோமானால், இந்த உவமை நாம் எரிகோவுக்கு போனது தவறு என்பதை முதலாவது நமக்கு சுட்டி காட்டி, நம்மை உடுத்துவித்து, காயங்களை கட்டி, ஆறுதல் படுத்தும் நல்ல சமாரியனாகிய இயேசு கிறிஸ்துவை கண்டுகொள்ள உதவி செய்யும் - இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார் - லூக்கா 1:51-53
அடுத்த பாகம்: கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்