முந்தைய பாகம்: இயேசுவின் உபதேசங்கள்
யோவான்ஸ்நானகனை குறித்து அனேக காரியங்கள் வேதாகமத்தில் சொல்லப்பட்டதற்கு காரணம், அவருடைய வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள் அநேகம் இருப்பதினால் தான்.
இயேசு கிறிஸ்துவின் வருகையை முன்னறிவிப்பதற்காக தெரிந்து கொள்ளப்பட்ட யோவான்ஸ்நானகன், கர்த்தருக்கென்று ஊழியம் செய்ய தெரிந்தெடுக்கப்பட்ட ஆசாரிய குடும்பத்தில் பிறந்தவர், அதனால் பிறப்பிலேயே அவருக்கு ஊழிய அங்கீகாரம் இருந்தது, மேலும் இவரின் பிறப்பை குறித்த தீர்க்கதரிசனம் தேவாலயத்தில் அறிவிக்கப்பட்டு, அவருடைய பெற்றோர்கள் தங்கள் வயது முதிர்வயதில் யோவான்ஸ்நானகனை பெற்றெடுத்ததினால், அவருடைய பிறப்பு எல்லோருக்கும் பெரிய எதிர்பார்ப்பையும் கொடுத்தது.
இந்த யோவான்ஸ்நானகன் "உன்னதமானவருடைய தீர்க்கதரிசி" என்கிற விசேஷித்த கிருபையுடன், கிறிஸ்துவை உலகத்திற்கு அடையாளம் காட்டும் பாக்கியம் பெற்றவனாக பிறந்து வளர்ந்தவன், அதனால் தான் இயேசு கிறிஸ்து "ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியதீர்க்கதரிசி ஒருவனுமில்லை" என்று சொன்னார் - 76.நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும், 77.நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய். 78.அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், 79.நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான். 80.அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான் - லூக்கா 1:76-80
விசுவாசத்தை இழந்த யோவான்ஸ்நானகன்
ஆனால், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை, உலகத்திற்கு அடையாளம் காட்டின பின்பும், யோவான்ஸ்நானகன் கொடுத்து வந்த ஞானஸ்நானமும், ஒரு "குருவை" போல நடந்து கொண்டதும், கர்த்தருக்கு அவன் செய்யும் துரோகமாகத்தான் இருந்தது, அதனால் தான் அவன் கொடுத்து வந்த ஞானஸ்நானம் தேவசித்தத்தின்படி கொடுக்கப்பட்டதல்ல, மாறாக "அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால்" கொடுக்கப்பட்டது என்று வேதாகமம் சொல்கிறது, அதாவது "ஒருவர் குற்றாலத்தில் தண்ணீர் வந்ததினால், தன் ஊரார் சிலரை குளிக்க அழைத்துக் கொண்டு போனதற்கு" ஒப்பானதாக இருந்தது - 22.இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங்கொடுத்துவந்தார். 23.சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள் - யோவான் 3:22-23
யோவான்ஸ்நானகன் ஒரு சிறப்பு அங்கீகாரத்துடன் பிறந்து, ஒட்டகமயிர் உடையுடன் வனாந்திரத்தில் வாழ்ந்ததினால், அனேகர் அவனிடம் ஞானஸ்நானம் பெற வாஞ்சித்தார்கள். ஒருவேளை நாம் அந்நாட்களில் வாழ்ந்திருந்தால், ஞானஸ்நானம் பெற யாரிடம் சென்றிருப்போம்? பிரபலமாயிருந்த யோவான்ஸ்நானகனிடம் சென்றிருப்போமா? அல்லது இயேசு கிறிஸ்துவின் சீஷர்களிடம் சென்றிருப்போமா? உலக ஞானம் நம்மை யோவான்ஸ்நானகனிடம் தான் அழைத்துச் செல்லும், ஆனால் பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்பட்டால் மாத்திரமே தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடம் செல்ல முடியும்.
யோவான்ஸ்நானகனிடம் போனால் என்ன தவறு? தேவனுடைய குமாரனே நமக்கு போதகராக இருக்கும் போது, ஒரு உலக மனிதனை "குரு" என்று அழைத்துக் கொண்டு, அவனுடைய சீஷனாக இருப்போமானால், அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம், மேலும் அந்த குருவாகிய மனிதன், தான் இயேசு கிறிஸ்துவை போல் இருக்க விரும்புகிறான் என்று தானே அர்த்தம், அது தேவனுக்கே செய்யும் துரோகம் அல்லவா, அதனால் தான் கர்த்தர் தன் சீஷர்களிடம் இதை சொன்னார் - 8.நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். 9.பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். 10.நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார் - மத்தேயு 23:8-10
மேலும் கர்த்தர், உலக மனிதர்களை "குரு" என்று அழைத்து அதில் கலிகூறுகிறவர்களுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை இப்படியாக சொன்னார் - 43.நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள். 44.தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? - யோவான் 5:44
"உன்னதமானவருடைய தீர்க்கதரிசி" என்கிற உன்னதமான ஊழியத்திற்கு அழைக்கப்பட்ட யோவான்ஸ்நானகனுக்கு, "குரு" என்கிற பதவி பிடித்து போய் விட்டது, "மனிதர்கள் கொடுக்கும் மகிமையை ஏற்றுக் கொண்டால், எப்படி என் மீது விசுவாசம் வைப்பீர்கள்?" என்று கர்த்தர் கேட்ட கேள்விக்கு யோவான்ஸ்நானகனே ஒரு உதாரணமாக மாறிவிட்டார், கர்த்தர் மேல் இடறலடைந்தார் - 18.இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து, 19.நீங்கள் இயேசுவினிடத்திற்குப் போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான். 20.அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள். 21.அந்தச் சமயத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேகங் குருடருக்குப் பார்வையளித்தார். 22.இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. 23.என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார் - லூக்கா 7:18-23
யோவான்ஸ்நானகனின் சீஷர்களின் பரிதாபநிலை
இயேசு கிறிஸ்து, இராப்போஜனத்தின் போது, தன்னை காட்டிக்கொடுக்க போகிறவனாகிய யூதாஸ் காரியோத் போகும் வரை காத்திருந்து, அவன் போன பின்பு தன்னுடைய சீஷர்களுடன் அனேக காரியங்களை குறித்து பேசினார், அவைகள் ஏறக்குறைய நான்கு அதிகாரங்களாக, யோவான் புஸ்தகம் 13ம் அதிகாரத்தில் இப்படியாக துவங்கி, 17ம் அதிகாரம் வரை சொல்லப்பட்டுள்ளது - 31.அவன்[யூதா ஸ்காரியோத்] புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார். 32.தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாய் அவரை மகிமைப்படுத்துவார். 33.பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன். 34.நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். 35.நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார் - யோவான் 13:31-35
ஏன் கர்த்தர் யூதாஸ்காரியோத்து போகும் வரை காத்திருந்தார்? எந்த ஒரு குடும்பத்திலும் தங்கள் குடும்ப விஷயத்தை அன்னியர் இருக்கும் போது பேசமாட்டார்கள், அவர்கள் போன பிறகுதான் குடும்ப விஷயத்தை பேசுவார்கள், அது போல தான், இங்கு கர்த்தர் துரோகியாய் மாறி தன்னை காட்டிக் கொடுப்பதற்காக சமயம் பார்த்துக் கொண்டிருந்த யூதாஸ்காரியோத்து போகும் வரை காத்திருந்து, அதன் போன பின்பு பல காரியங்களை குறித்து தன் சீஷர்களுடன் பேசினார்.
அதுபோலவே தன்னிடம் வந்திருந்த, யோவான் ஸ்நானகனின் சீஷர்கள் போகும் வரை கர்த்தர் காத்திருந்து, அவர்கள் போன பின்பு யோவானைக்குறித்து சில காரியங்களை ஜனங்களுக்குச் சொன்னார், ஏன் கர்த்தர் யோவான் ஸ்நானகனின் சீஷர்கள் போகும் வரை காத்திருந்தார்? உலக மனிதனை தனக்கு குருவாக வைத்திருப்பவர்களுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அறிவுறுத்தவே கர்த்தர் இதை செய்தார் - 24.யோவானுடைய தூதர்கள் போனபின்பு அவர் யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? 25.அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? அலங்கார வஸ்திரந்தரித்துச் செல்வமாய் வாழ்கிறவர்கள் அரசர் மாளிகைகளிலே இருக்கிறார்கள். 26.அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் - லூக்கா 7:24-26
எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்?
கர்த்தர் யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது, அவனுடைய பிறப்பையும், அவனுடைய மகத்துவங்களையும் குறித்து ஜனங்களுக்கு அறிவிப்பதற்காக என்பது போல் தான் தோன்றுகிறது, ஆனால் அதில் வேறு சில உண்மைகளும் அடங்கி இருக்கிறது. முதலாவது கர்த்தர் ஜனங்களிடம் "எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்?" என்று கேட்டதற்கு காரணம், தீர்க்கதரிசனங்கள் எல்லாம், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை "வனாந்தரத்திலிருந்து வருகிறவர்" என்று சொல்லியிருக்க, ஜனங்களோ யோவானை பார்க்க வனாந்திரத்திற்கு போகிறவர்களாய் இருந்தார்கள்
தேவனைப் பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள் - சங்கீதம் 68:4
வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப்போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்? - உன்னதப்பாட்டு 3:6
தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்? கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்; அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்; அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள் - உன்னதப்பாட்டு 8:5
இவன் சகோதரருக்குள்ளே ஜனம்பெருத்தவனாயிருந்தாலும், கர்த்தருடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய துரவு சுவறிப்போகும்; அது இச்சிக்கப்படத்தக்க சகல பதார்த்தங்களுள்ள உத்தம பதார்த்தங்களையும் வாரிக்கொண்டுபோகும் - ஓசியா 13:15
ஆரோன் இஸ்ரவேல் புத்திரராகிய சபையாருக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்தரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது - யாத்திராகமம் 16:10
19.இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். 20.நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும். 21.இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள் - ஏசாயா 43:18-21
மேலும், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வனாந்திரத்தில் இருந்து வர வேண்டியதாய் இருந்ததினால் தான், கர்த்தரின் வருகையை அறிவிக்கும் யோவானும் வனாந்தரத்தில் வாழ்ந்து வந்தான் - 1.என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; 2.எருசலேமுடன் பட்சமாய்ப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார். 3.கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், 4.பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும். 5.கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று - ஏசாயா 40:1-5
இதை நாம் ஒரு உதாரணத்தோடு பார்த்தால் மிகவும் எளிதாக புரிந்து கொள்ளலாம், பள்ளி கல்லூரிகளில் தங்கிப் படிப்பவர்களுக்கு, சாப்பாடு பரிமாறும் [Mess Hall] இடம் ஒன்று இருக்கும், அந்த இடத்தில் ஒரு மணியும் கட்டி வைத்து இருப்பார்கள்.
சாப்பாட்டு தயாரானவுடன், பரிமாறுகிறவர்கள் அந்த மணியை அடிப்பது உண்டு, அப்பொழுது எல்லா மாணவர்களும் சாப்பாடு பரிமாறுகிற இடத்திற்கு வருவார்கள், வந்தவர்களிடம் "இங்கு எதற்காக வந்தீர்கள்?" என்று கேட்டால், நாங்கள் மணியின் சத்தத்தை கேட்க வந்தோம் என்றா பதில் சொல்லுவார்கள்? நிச்சயமாக இல்லை, நாங்கள் சாப்பிட வந்தோம் என்று தான் சொல்லுவார்கள்.
அந்த மணி எப்படியாக சாப்பாடு பரிமாறும் இடத்தில் கட்டப்பட்டிருந்ததோ, அது போல தான் யோவானும் கர்த்தரின் வருகையை அறிவிக்க வனாந்தரத்தில் வசித்து வந்தான்.
அந்த மணியானது சாப்பாடு பரிமாறும் இடத்தில் கட்டப்பட்டிருந்தாலும், அந்த மணியினால் ஒருவனுடைய பசியையும் ஆற்ற முடியாது, அது போல தான், இந்த யோவான்ஸ்நானகனால் நம்முடைய பாவங்களை மன்னிக்கவும் முடியாது, நமக்கு நித்திய ஜீவனை கொடுக்கவும் முடியாது.
ஆனால், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தத்தை கேட்டு, யோவான்ஸ்நானகனை பார்த்த ஜனங்களோ, அவனை மட்டும் பார்த்துவிட்டு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட மெசியாவை மறந்து விட்டார்கள், அதனால் தான் கர்த்தர் அவர்களைப் பார்த்து "எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்?" என்று கேட்டார்.
தாழ்த்தப்பட்டு போன யோவான்ஸ்நானகன்
நித்திய நியாயாதிபதியாகிய இயேசு கிறிஸ்து, சில பேருடைய நியாயத்தீர்ப்பை இந்த பூமியில் இருக்கும் போதே வெளிப்படுத்தினார், உதாரணத்திற்கு தன்னோடு சிலுவையில் அறையப்பட்ட கள்ளனிடம் இன்று நீ என்னோடு பரதேசியில் இருப்பாய் என்று சொன்னார், தேவனுடைய வார்த்தையை நிறைவேற்ற ஒரே பெண்ணை திருமணம் செய்த ஏழு சகோதரர்களை குறித்துச் சொல்லும் பொழுது, அவர்கள் பரலோக ராஜ்ஜியத்தில் தேவதூதர்களைப் போல் இருப்பார்கள் என்று சொன்னார், ஆனால் இந்த யோவான்ஸ்நானகனை குறித்து சொல்லும் போது, அவன் எல்லோரைக் காட்டிலும் தாழ்த்தப்பட்டு போனான் என்று சொன்னார் - 27.இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான். 28.ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியதீர்க்கதரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 29.யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள். 30.பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள். 31.பின்னும் கர்த்தர் சொன்னது: இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாயிருக்கிறார்கள்? 32.சந்தை வெளியில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள் - லூக்கா 7:27-32
ஒரு விவசாயி தன் தோட்டத்தில் ஆடு, மாடு, கழுதை என ஏராளமான விலங்குகளை வளர்த்து வந்தார், அவரிடத்தில் ஒரு யானையும் இருந்தது, துவக்கத்தில் நன்றாய் வேலை செய்த யானை, நாட்கள் ஆக ஆக மதம் பிடித்து அந்த விவசாயிக்கு இடையூறுதலாக மாறிவிட்டது, அப்பொழுது அந்த விவசாயி அந்த யானையிடம், என்னிடம் இருக்கிற எல்லா பிராணிகளிலும் நீ தான் பெரியவன், ஆனால், மறு ஜென்மம் என்று ஒன்று இருக்குமானால், என்னிடம் இருப்பதிலேயே சின்ன பிராணியாகிய அந்த பூனையை பார்த்து பயப்படும் எலியைப் போல உன்னை மாற்றி விடுவேன் என்று சொன்னாராம்.
அது போல தான் கர்த்தர், யோவான்ஸ்நானனை குறித்து "மனுஷனாய் பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியதீர்க்கதரிசி ஒருவனுமில்லை, ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறான்" என்று நியாயத்தீர்ப்பை எழுதினார்.
அடுத்த பாகம்: இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி