இப்பொழுது மொண்டு, கொண்டுபோங்கள்
இப்பொழுது மொண்டு, கொண்டுபோங்கள்
முந்தைய பாகம்: என்னைத் தொட்டது யார்?
கானா ஊர் கல்யாணத்தில், இயேசு கிறிஸ்துவே அங்கிருந்தவர்களுக்கு தண்ணீராக, ஒரு சுவை மிகுந்த திராட்சை ரசமாக பரிமாறப்பட்டார் என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம், அதற்கு முன்பாக இயேசு கிறிஸ்துவுக்கு "தண்ணீர்" என்கிற ஒரு பெயர் உண்டு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
இஸ்ரவேல் மக்கள் செங்கடலை கடந்த போது, தேவன் அதை கீழ் காற்றினால் முற்றிலும் வற்றிப் போக பண்ணியிருந்தார், அதனால் தான் அவர்கள் அதை கடந்த போது, இடது பக்கம் பார்த்தாலும் சரி, வலது பக்கம் பார்த்தாலும் சரி, அது ஒரு வனாந்திரத்தை போலத்தான் காட்சியளித்தது - அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; வெட்டாந்தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார் - சங்கீதம் 106:9
அதே சமயத்தில், இஸ்ரவேல் மக்கள் செங்கடலை கடந்த போது, தண்ணீர் ஒரு சுவரைப் போல உறுதியாக நின்றது என்று சொல்லப்பட்டதற்கு காரணம், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து அவர்களுக்கு அரணாக இருந்தது தான், இங்கு தண்ணீர் என்று அழைக்கப்பட்டது நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவே, அவரே அவர்களுக்கு அரணாகவும் பக்க பலனாகவும் இருந்தார் - அவர் கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கச் செய்தார்; தண்ணீர் ஒரு சுவரைப் போல உறுதியாக நின்றது [அதாவது கிறிஸ்து அவர்களுக்கு அரணாக நின்றார்] - சங்கீதம் 78:13
அந்த இயேசு கிறிஸ்துவே, இந்த கானாவூர் கல்யாணத்தில் தண்ணீராக பரிமாறப்பட்டவர், முதலாவது, கர்த்தர் தண்ணீரை திராட்சரசமாய் மாற்றின அற்புதத்தை, அந்த கல்யாணத்திற்கு வந்திருந்த அனைவரும் அறிந்திருந்தார்களா? என்றால் அது ஒரு கேள்வி குறி தான், ஏனென்றால், இயேசு செய்த அற்புதத்தை, பந்திவிசாரிப்புக்காரனே அறியாமல் தான் இருந்தான், அதனால் தான் அவன் சுவை மிகுந்த திராட்சை ரசம் எங்கேயிருந்து வந்தது? என்று விசாரித்தான்.
மேலும், இந்த கானா ஊர் கல்யாணத்தை, ஒரு உண்மை சம்பவம் போல் எழுதாமல், ஒரு உவமையை போல தான் தேவஆவியானவர் எழுதியுள்ளார், உதாரணத்திற்கு, எந்த ஒரு மனிதரின் பெயரும் அதில் சொல்லப்படவில்லை, மாறாக இயேசுவின் பெயர் மாத்திரமே சொல்லப்பட்டுள்ளது, எனவே இதை, கானா ஊர் கல்யாணமாக படிக்காமல், நம்மை கானான் தேசத்திற்கு [பரலோக இராஜ்ஜியத்திற்கு] அழைத்து செல்லும் கல்யாணமாக படித்தால், இன்னும் பல ஆவிக்குரிய ரகசியங்களை அறிந்துக் கொள்ளலாம் - 1.மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். 2.இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். 3.திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். 4.அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். 5.அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். 6.யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. 7.இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். 8.அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள். 9.அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து: 10.எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான். 11.இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள் - யோவான் 2:1-11
இந்த கல்யாணத்தில், பரிமாறப்பட்ட சுவை மிகுந்த திராட்சரசம் எங்கேயிருந்து வந்தது? அதை தண்ணீரை மொண்ட வேலைக்காரர்கள் மாத்திரமே அறிந்திருந்தார்களாம், அதை நாமும் அறிந்துக் கொள்ளலாமே!
இந்த கல்யாணத்தை, கானா ஊரில் நடந்த ஒரு சாதாரண கல்யாணமாக பார்த்தால், அங்கிருந்த ஆறு கற்சாடிகள் தான் நம் நினைவுக்கு வரும், ஆனால் இது, நம்மை கானான் தேசத்திற்கு அழைத்து செல்லும் கல்யாணமாக பார்க்கும் பொழுது, அந்த சுவை மிகுந்த திராட்சரசம் இயேசு என்கிற ஏழாவது கற்சாடியிலிருந்தது வந்தது, இந்த இரகசியத்தை தான், ஆறு பேருடன் வாழ்ந்தும், தண்ணீருக்காக வெறுங்குடத்துடன் அலைந்துக் கொண்டிருந்த சமாரிய ஸ்திரீயின் கதை நமக்கு அறிவிக்கிறது.
அந்த சமாரிய ஸ்திரீயை சந்திக்க, ஏழாவது கற்சாடியாக அங்கே வந்த இயேசு கிறிஸ்து ஒரு கிணற்றினருகே அமர்ந்திருந்தார், ஏனென்றால், வனாந்தரத்தில் வாழ்பவர்களுக்கு தான் தண்ணீரின் அருமை தெரியும், அந்த கிணறு வறண்டு போகுமானால் அவர்களால் அந்த வனாந்தரத்தில் வாழ முடியாது, அப்படிப்பட்ட ஒரு கிணற்றை கர்த்தர் தேர்ந்தெடுத்து, அதிலிள்ள தண்ணீரைக் காட்டிலும், தான் கொடுக்கும் இரட்சிப்பும் பரிசுத்த ஆவியும் விலையேறப் பெற்றது என்பதை விளக்கினார் - 4.அவர் சமாரியா நாட்டின் வழியாய்ப் போகவேண்டியதாயிருந்தபடியால், 5.யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார். 6.அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார்; அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி வேளையாயிருந்தது. 7.அவருடைய சீஷர்கள் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள். 8.அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத் தா என்றார். 9.யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள். 10.இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். 11.அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும். 12.இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ? அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள் - யோவான் 4:4-12
அந்த சமாரியா ஸ்திரீயிடம், கர்த்தர் தான் கொடுக்கும் ஜீவத்தண்ணீரை குறித்துப் பேச, அவளோ கர்த்தர் அங்கிருந்த கிணற்றின் தண்ணீரை குறித்து பேசுகிறார் என்று பதில் சொல்லிக் கொண்டிருந்தாள், அந்த சமாரியா ஸ்திரீயை போல தான் நாமும் இருக்கிறோம், கர்த்தர் வேலைக்காரர்களிடம் இப்பொழுது மொண்டு கொண்டுபோங்கள் என்று சொன்னவுடன், அந்த ஆறு கற்சாடிகள் தான் நம் நினைவுக்கு வருகிறது.
அந்த ஆறு கற்சாடிகள், கால்களை கழுவுவதற்காக தண்ணீர் வைக்கும், பூசனமும் பாசியும் பிடித்த தொட்டிகள், அதை கழுவவே மாட்டார்கள், அந்த தண்ணீரை ஒருவரும் குடிக்கவும் மாட்டார்கள், ஒருவேளை அந்த கல்யாணத்திற்கு வந்தவர்களிடம், நீங்கள் குடிக்கும் திராட்சரசத்தை, அந்த தொட்டியிலிருந்து தான் மொண்டு கொண்டு வந்தோம் என்றால், பந்தியிருந்தவர்களில் ஒருவரும் அதை குடித்திருக்க மாட்டார்கள்.
அந்த சமாரியா ஸ்திரீயின் வாழ்க்கையிலும், ஆறு கற்சாடிகள் இருந்தது, அவள் ஆறு பேருடன் வாழ்ந்தவள், அந்த பூசனமும் பாசியும் பிடித்த ஆறு தொட்டிகளினால், அவளுக்கு அவமானங்களுக்கும் நிந்தைகளுக்கும் தான் மிஞ்சியது.
அவள் இந்த உலகில், தனக்கு ஜீவத்தண்ணீரை கொடுக்கும் ஒருவர் உண்டு என்பதை அறியாமல் இருந்தாள், அதனால் தான், கர்த்தர், வெளிப்படையாக தன்னை குறித்து சொல்ல, அவளும் "அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும்" என்று வேண்டிக் கொண்டாள் - 13.இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். 14.நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார் 15.அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள். 16.இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக்கொண்டுவா என்றார். 17.அதற்கு அந்த ஸ்திரீ: எனக்குப் புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான். 18.எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார். 19.அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். 20.எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள். 21.அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. 22.நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. 23.உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். 24.தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். 25.அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். 26.அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார் - யோவான் 4:13-26
கர்த்தரிடம், ஜீவத்தண்ணீரை பெற்றுக் கொண்ட, அந்த சமாரியா ஸ்திரீ தன் குடத்தை வைத்துவிட்டு போனாலாம், ஏனென்றால், அவள் கையில் இயேசு என்கிற ஜீவத்தண்ணீர் இருந்தது, ஒருவரால் ஒரு குடத்தை தானே சுமக்க முடியும்! அதனால் தான் தன் குடத்தை வைத்துவிட்டு போனாள் - 27.அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை. 28.அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளேபோய், ஜனங்களை நோக்கி: 29.நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள். - யோவான் 4:27-29
அது போல தான், அந்த கானா ஊர் கல்யாணத்திலும், சுவை மிகுந்த திராட்சரசத்தை, கால்களை கழுவுவதற்காக வைக்கப்பட்டிருந்த கற்சாடிகளில் இருந்து எடுக்கவில்லை, மாறாக இயேசு என்கிற ஏழாவது கற்சாடியிலிருந்தது எடுத்திருந்தார்கள், அது மெய்யாகவே சுவை மிகுந்த திராட்சரசம், ஏனென்றால், அது இயேசு என்கிற பரிசுத்த சாடியிலிருந்து எடுக்கப்பட்டது.
நம்முடைய வாழ்க்கையிலும், ஆறு கற்சாடிகள் இருக்க தான் செய்கிறது, அநேக நேரங்களில் நம்முடைய படிப்பு, வேலை, சொத்து, சுகம், நண்பர்கள், உறவினர்கள் என்கிற ஆறு கற்சாடிகள் நம்மை போஷிக்கிறது என்று நினைக்கிறோம், ஆனால் இவைகளை வாய்க்க செய்கிறவர், ஏழாவது கற்சாடியாகிய இயேசு கிறிஸ்து, அவரை கண்டு கொள்வதே நித்திய ஜீவன் - ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன் - யோவான் 17:3
நம்முடைய விசுவாச வாழ்க்கையிலும், ஆறு கற்சாடிகள் இருக்க தான் செய்கிறது, அநேக நேரங்களில் நம்முடைய உபவாசம், ஜெபம், காணிக்கை, வேத வாசிப்பு, கீழ்ப்படுத்தல், பரிசுத்த வாழ்க்கை என்கிற ஆறு கற்சாடிகள் நம்மை நித்திய ராஜ்ஜியத்திற்கு நடத்தி செல்லும் என்று நினைக்கிறோம். அப்படி பார்த்தால், நம்மை காட்டிலும், கிறிஸ்துவை அறியாதவர்கள் அதிகமாக உபவாசிக்கவும், ஜெபிக்கவும் செய்கிறார்களே? ஆனால் நம்முடைய ஜெபம் கணம் பெறுவதற்கு காரணம், அதை நம்மிடம் பெற்று பரலோக தேவனின் பாதத்தில் சமர்ப்பிக்கும் இயேசு கிறிஸ்துவினாலேயே - அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்வீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்வேனென்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை - யோவான் 16:26
அடுத்த பாகம்: நீ அவரைக் கண்டிருக்கிறாய்