முந்தைய பாகம்: இயேசு கிறிஸ்துவின் திரித்துவம்
நல்லவர் என்கிற அடைமொழி நம் தேவனுக்கு மாத்திரமே உரித்தானது, அதனால் தான் சங்கீதகாரனாகிய தாவீது கர்த்தர் நல்லவர் என்று எழுதி வைத்துள்ளார் - கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது - சங்கீதம் 100:5
இதை ஏன் எழுதிவைத்தார் என்றால்? இந்த பூமியில் எத்தனையோ தெய்வங்கள் இருந்தாலும், உண்மையான தெய்வமாகிய இயேசு கிறிஸ்துவை நல்லவர் என்ற அடையாளத்தை கொண்டு கண்டு பிடிக்க முடியும் என்பதற்காக தான் இதை எழுதி வைத்தார், எப்படியெனில் ஒரு தேசத்திற்கு ஒரே ஒரு ஜனாதிபதி தானே இருக்க முடியும், அல்லது ஒரு கல்லூரிக்கு ஒரே ஒரு முதல்வர் தானே இருக்க முடியும், அதே போல சர்லோவகத்திலும் ஒரே ஒருவர் தான் நல்லவராய் இருக்க முடியும், அது தான் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.
அந்த உண்மையான தெய்வம் இந்த பூமிக்கு வந்த பொழுது, ஒருவன் அவரை நல்ல போதகரே என்று அழைத்தான், அவன் உண்மையிலேயே இயேசு கிறிஸ்துவை தேவன் என்று அறிந்து அப்படி அழைத்தானா? - பின்பு, அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான் - மாற்கு 10:17
இல்லை, அவன் இயேசு கிறிஸ்துவை தேவன் என்று அறிந்து அப்படி அழைக்கவில்லை என்பதை நாம் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக தான் இயேசு கிறிஸ்து இந்த கேள்வியை கேட்டார் - 18.அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே. 19.விபசாரஞ்செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார் - மாற்கு 10:18-19
அவன் சொன்ன பதிலில் இயேசு கிறிஸ்துவை குறித்து அவன் இருதயத்தில் இருந்த எண்ணம் வெளிப்பட்டது, எப்படியேனில், ஆரம்பத்தில் நல்ல போதகரே என்று அழைத்தவன், இப்பொழுது நல்லவர் என்ற வார்த்தையை ரகசியமாக நீக்கிவிட்டு போதகரே என்று அழைத்தான் - அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான் - மாற்கு 10:20
முடிவு பரிதாபம் தான், அவன் நல்லவர் என்ற வார்த்தையை ரகசியமாக நீக்கி இயேசு கிறிஸ்துவை தேவன் இல்லை என்று அறிக்கை செய்தவுடனே, மனமடிவும், துக்கமும் சூழ்ந்துக் கொண்டவனாய், தேவனுடைய ராஜ்யத்தை இழந்தவனாக போய்விட்டான் - 21.இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு: நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றிவா என்றார். 22.அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான் - மாற்கு 10:21-22
ஒருவேளை அவன் இயேசு கிறிஸ்து கேட்ட "நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே" என்ற கேள்விக்கு, நீங்கள் தானே தேவன், அதனால் தான் உம்மை "நல்ல போதகரே" என்று அழைத்தேன் என்று சொல்லியிருப்பானே ஆனால், சந்தோஷத்தோடே பரலோகத்தின் பிள்ளையாக சென்றிருப்பான் - 23.அப்பொழுது இயேசு சுற்றிப்பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார். 24.சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது! 25.ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். 26.அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். 27.இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார் - மாற்கு 10:23-27
நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம்
இந்த உலகத்திலுள்ள ஒவொருவருக்கும் ஒவ்வொருவிதமான தேவைகளும் எதிர்பார்ப்புகளும் இருக்கும் பொழுது, நன்மையானதை தேவன் தருவார் என்று இயேசு கிறிஸ்து சொன்னதின் அர்த்தம் என்ன? - 7.கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; 8.ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். 9.உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? 10.மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா? 11.ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? - மத்தேயு 7:7-11
இதற்கான அர்த்தம் லூக்காவின் புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது, நம் எல்லோருக்கும் தேவையான நன்மையான ஓன்று என்னவென்றால் பரிசுத்த ஆவியானவர் தான் - 10.ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். 11.உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? 12.அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? 13.பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார் - லூக்கா 11:10-13
இப்படி இயேசு கிறிஸ்து வாக்குத்தத்தம் பண்ணின பரிசுத்த ஆவியை தான், சங்கீதகாரனாகிய தாவீதும் தனது சங்கீதங்களில் "நன்மை" என்று பல இடங்களில் மறைமுகமாக குறிப்பிட்டிருக்கிறார்.
சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது - சங்கீதம் 34:10
தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார் - சங்கீதம் 84:11
தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று, அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக - சங்கீதம் 107:8-9
அடுத்த பாகம்: கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய்