இயேசுவின் போதனைகள்
பாகம் 9: சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது
பாகம் 9: சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது
முந்தைய பாகம்: ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது
முரட்டாட்டமுள்ளவர்களாய் இருந்த சீஷர்களை, கர்த்தர் எப்படியாக தன்னுடைய பிள்ளைகளாய் மாற்றினார் என்பதை "இயேசுவின் போதனைகள்" என்கிற தலைப்பில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
துவக்க நாட்களில், ஜீவஅப்பமாகிய கர்த்தரை ஒரு சாதாரண நபராக பார்த்த சீஷர்களுக்கு, கர்த்தரோடு இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பது தெரியவில்லை, கர்த்தரோடு கொஞ்ச நேரம் செலவு செய்யவும் இவ்வுலக காரியங்கள் தடையாக தான் இருந்தன, அதை தான் "ஜனங்கள் கூடிவந்ததினால் சீஷர்களுக்கு சாப்பிடவும் சமயமில்லை", அதாவது ஒரு சிற்றுண்டி சாப்பிட கூட நேரமில்லை என்று வேதாகமம் சொல்லுகிறது - அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள் - மாற்கு 3:20
நாட்கள் செல்ல செல்ல, சீஷர்கள் கர்த்தரின் வல்லமையை புரிந்துக் கொள்ள ஆரம்பித்தார்கள், ஆனாலும் அவர் தான் நம் ஆத்ம மணவாளன், அவரோடு தான் நாம் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பதை அறியாமல் இருந்தார்கள், ஏனென்றால், நாம் கர்த்தரை அறிந்துக் கொள்ள ஆரம்பிக்கும் பொழுது, நம்முடைய சிந்தையை சிதறடிக்கும் காரியங்களும் நம் நேரத்தை திருடும் காரியங்களும் பெருக தான் செய்கின்றன, அதை தான் "வருகிறவர்களும் போகிறவர்களும் அநேகராயிருந்தபடியினால் சீஷர்களுக்கு போஜனம்பண்ணவும் சமயமில்லை", அதாவது ஒரு முழுமையான சாப்பாடு சாப்பிட நேரமில்லை என்று வேதாகமம் சொல்லுகிறது - வருகிறவர்களும் போகிறவர்களும் அநேகராயிருந்தபடியினால் போஜனம்பண்ணுகிறதற்கும் அவர்களுக்குச் சமயமில்லாதிருந்தது - மாற்கு 6:31
ஆனால், நாம் இவ்வுலக காரியங்களில் இருந்து விடுபட்டு, எப்பொழுதும் கர்த்தரோடு இருக்க வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம், இதை தான் "அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார்" என்று வேதாகமம் சொல்லுகிறது - பின்பு, திரளான ஜனங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கிறதை இயேசு கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார் - மத்தேயு 8:18
அதன் பின்பு உண்டான அனுபவ பாடங்களினால், ஆத்ம மணவாளனாகிய கர்த்தருடன் இருப்பது தான் சந்தோசம் என்று உலக காரியங்களை உதறிவிட்டு இயேசு மாத்திரம் போதும் என்று அவரோடு பயணம் செய்தார்கள், அதை தான் "அவர்கள் படவிலே ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது" என்று வேதாகமம் சொல்லுகிறது, அதற்கான விளக்கத்தை கடந்த தொகுப்பில் பார்த்தோம் - சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள், படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது - மாற்கு 8:14
இப்படி இவ்வுலக காரியங்களை விட்டு விட்டு, முற்றிலும் தன்னையே சார்ந்திருக்க வேண்டும், அதாவது பரலோகத்தின் பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்பதை தான், துவக்கத்தில் கர்த்தர் தன் சீஷர்களை "அக்கரைக்குப் போவோம் வாருங்கள்" என்று அழைத்தார்.
அதனால் தான், தல்மனூத்தாவின் கடற்கரையிலே எல்லாவற்றையும் வைத்து விட்டு கர்த்தரோடு படவேறினதை " சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது" என்று மத்தேயு சுவிசேஷ புஸ்தகம் வர்ணிக்கிறது, அவர்கள் கர்த்தரோடு படவில் தான் இருந்தார்கள், ஆனால் அவர்களின் இருதயத்தில் கர்த்தர் மாத்திரமே இருந்தார், கர்த்தர் மாத்திரம் போதும் என்று முடிவெடுத்திருந்தார்கள், அதுவே கர்த்தர் அழைத்த "அக்கரை" - 5அவருடைய சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்[ உதறி விட்டு போனார்கள்]. 6இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார். 7நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள். 8இயேசு அதை அறிந்து: அற்பவிசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன? 9இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும்; 10ஏழு அப்பங்களை நாலாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா? 11பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவுக்கு எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார். 12அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள் - மத்தேயு 16:5-12
பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமா
இப்படி கர்த்தர் மாத்திரம் போதும் என்று முடிவெடுத்திருந்த சீஷர்களிடம், கர்த்தர் சொன்ன முதல் காரியமே "பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்" என்பது தான், ஏனென்றால் தவறான உபதேசங்கள், நம்மை கிறிஸ்துவினிடமிருந்தும், பரலோகத்தின் தேவனிடமிருந்தும் பிரிப்பதாய் இருக்கிறது.
பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தில் பரலோகத்தின் தேவன் இருப்பார், மோசேயும் மற்ற வேதாகம தீர்க்கதரிசிகள் கூட இருப்பார்கள், ஏன் சில சமயங்களில் இயேசு கிறிஸ்து கூட இருப்பார், ஆனால் தேவனுடைய குமாரனாக அல்ல, ஒரு வரலாற்று நபராக இருப்பார், இஸ்லாம் மதம் தொடங்கி, யெகோவாவின் சாட்சிகள், மார்மன் (Church of Jesus Christ of Latter-day Saints and Smith) போன்ற எல்லா மதங்களும் அதற்குள் அடங்கும்.
இப்படி கர்த்தர் பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று சொல்லும் பொழுது, பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் மோசம் போக்கும் உபதேசத்தை நம்ப கூடாது என்பது மாத்திரம் இல்லாமல், நம் உபதேசத்தில் இயேசு கிறிஸ்துவே பிரதானமாய் இருக்க வேண்டும் என்கிற கட்டளையும் அடங்கி இருக்கிறது.
ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
அடுத்ததாக, கர்த்தர் தன் சீஷர்களிடம் சொன்னது தான், ஏரோதின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்பது - 15அவர் அவர்களை நோக்கி: நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார் - மாற்கு 8:15-21
ஏரோதை குறித்து வேதாகமத்தில் பல காரியங்கள் சொல்லப்பட்டிருந்தாலும், ஏரோதின் புளித்தமாவை [ஏரோதின் உபதேசத்தை] குறித்து வேதாகமம் இப்படியாக சொல்லுகிறது - 21குறித்தநாளிலே: ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான். 22அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள். 23அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான் - அப்போஸ்தலர் 12:21-23
அங்கே பிரசங்க கூட்டம் ஏற்படுத்தபட்டிருந்தது, அது ஏரோதின் மகிமைக்காக ஏற்படுத்தபட்டிருந்த கூட்டம், அங்கே அவனுடைய வஸ்திரமும், அரியனையும், அனுபவங்களும், சாதனைகளும் தான் பேசப்படும், அந்த ஏரோது ஒரு ஊழியகாரராகவும் இருக்கலாம், அல்லது ஒரு அரசியல் தலைவராகவும் கூட இருக்கலாம், இந்த ஏரோதின் உபதேசத்தை கேட்பவர்களுக்கு தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவை குறித்த எண்ணமே வராது, ஏரோதின் மகிமை தான் நினைவில் இருக்கும், முடிவு தேவ கோபாக்கினையும் மரணமும் தான்.
கர்த்தர் ஏரோதின் உபதேசத்தைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று சொல்லும் பொழுது, ஏரோதின் உபதேசத்திற்கு நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது மாத்திரம் இல்லாமல், நாம் ஏரோதை போல் மாறி விடக்கூடாது என்கிற கட்டளையும் அடங்கி இருக்கிறது, ஏனென்றால் யாராவது நம்மை புகழ்ந்து பேசுகிறார்கள் என்றால், நாம் கர்த்தரை முன்னிறுத்தி ஊழியம் செய்யவில்லை, நம்முடைய சுயம் வெளிப்படுகிறது, தாழ்மை நம்மிடம் இல்லை என்பது தானே அர்த்தம் - எல்லா மனுஷரும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ - லூக்கா 6:26
அடுத்த பாகம்: நீர் கிறிஸ்து