இயேசுவின் போதனைகள்
பாகம் 7: பிள்ளைகள் சிந்துகிற துணிக்கை
பாகம் 7: பிள்ளைகள் சிந்துகிற துணிக்கை
முந்தைய பாகம்: கிண்ணங்களையும் செம்புகளையும்
அதன் பின்பு, இயேசு கிறிஸ்து தம் சீஷர்களைத் தீரு மற்றும் சீதோன் பகுதிகளுக்கு அழைத்துச் சென்றார், கலிலேயாவிலிருந்து இப்பகுதிக்குச் செல்ல சுமார் இரண்டு முதல் மூன்று நாட்கள் பயணம் தேவைப்படும், ஒரு கானானியப் பெண்ணின் மகளைக் குணமாக்குவதற்காகவே, இயேசு கிறிஸ்து கலிலேயாவிலிருந்து இவ்வளவு நீண்ட தூரத்தையும் நடந்தே கடந்து வந்தார், சொல்லப்போனால், அந்தப் பயணம் முழுவதிலும் கர்த்தர் நிகழ்த்திய ஒரே அதிசயம் அது மாத்திரமே ஆகும். ஆயினும், அப்பெண்ணின் கதறலுக்கோ அல்லது அவள் தொடர்ந்து கூப்பிட்டதற்கோ கர்த்தர் ஒருமுறைகூடப் பதிலளிக்கவில்லை; ஒரு கட்டத்தில், அவள் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்ததைக் கண்டு சீஷர்கள் கூட எரிச்சலடைந்தார்கள் - 21.பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு, சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார். 22.அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். 23.அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள் - மத்தேயு 15:21-23
கானானிய ஸ்திரியின் கதறலுக்கு கர்த்தர் ஏன் உடனே பதிலளிக்கவில்லை?
ஏனென்றால், சிலுவையில் கர்த்தர் சிந்தும் இரத்தத்தினால் மாத்திரமே நமக்கு இரட்சிப்பு என்பதை விளக்கவே, கர்த்தர் கானானிய ஸ்திரியின் கதறலுக்கு உடனே பதிலளிக்கவில்லை, இங்கு "தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்" என்று கூப்பிட்டுக் கொண்டே இருந்தவள், கடைசியாக, நம்முடைய பாவ நிவாரண பலியாக இயேசு கிறிஸ்து சிந்தும் பரிசுத்த இரத்தத்தை முன்னிறுத்தி, "பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளின் நிமித்தமாக" என்று சொன்ன அந்த நொடியில் தானே, கர்த்தர் அவளுக்கு பதிலளித்து அவளுடைய மகளைக் குணப்படுத்தினார் - 26.அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள். 27.இயேசு அவளை நோக்கி: முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். 28.அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும், மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். 29.அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம், பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார். 30.அவள் தன் வீட்டுக்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள். 31.மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளை விட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய்க் கலிலேயாக் கடலருகே வந்தார் - மாற்கு 7:24-31
இங்கே, "பிள்ளைகள்" என்பது, தேவனுடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசு கிறிஸ்துவையும், "சிந்துகிற துணிக்கைகள்" என்பது, கர்த்தரின் காயப்பட்ட சரீரத்தையும், அவர் நமக்காக சிந்தின பரிசுத்த இரத்தத்தையும் குறிக்கிறது, இப்படி, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் காயப்பட்ட சரீரத்தையும், அவர் நமக்காக சிந்தின பரிசுத்த இரத்தத்தையும் முன்னிறுத்தி நாம் ஜெபிக்க வேண்டும் என்பதை விளக்கவே, கர்த்தர் தம் சீஷர்களை தீரு மற்றும் சீதோன் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, இந்த அற்புதத்தை செய்தார்.
அடுத்த பாகம்: ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது