இயேசுவின் போதனைகள்
பாகம் 6: கிண்ணங்களையும் செம்புகளையும்
பாகம் 6: கிண்ணங்களையும் செம்புகளையும்
முந்தைய பாகம்: அப்பங்களைக்குறித்து உணராமற்போனார்கள்
சீஷர்கள், இயேசு கிறிஸ்துவின் வல்லமையைக் கண்ணாரக் கண்டிருந்தார்கள், ஆனாலும் இயேசு கிறிஸ்து தான் நம்முடைய பரிகாரி, அவருடைய பரிசுத்த இரத்தம் மாத்திரமே நம்முடைய பாவங்களை கழுவி, நம்மை சுத்திகரிக்கும் வல்லமையுள்ளது என்பதை அறியாமல் இருந்தார்கள், அந்த சமயத்தில் தான் எருசலேமிலிருந்து பரிசேயரும், வேதபாரகரும் கர்த்தரை காண வந்திருந்தார்கள், தொலைவிலிருந்து யாராவது நம்மைச் சந்திக்க வந்தால், அவர்களுக்கு மரியாதையும் முக்கியத்துவமும் கொடுப்பது இவ்வுலகத்தாரின் வழக்கம், ஆனால் இயேசு கிறிஸ்து, 2 அல்லது 3 நாள் பயணம் செய்து வந்த பரிசேயர் மற்றும் வேதபாரகர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தன்னுடைய சிஷ்யர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தார், மேலும், அந்த பரிசேயரும், வேதபாரகரும் வேதத்திற்கு விரோதமாக செய்யும் காரியங்களை சுட்டி காட்டி, அவைகளை உவமைகள் மூலமாக பேசினார் - 1.எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். 2.அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர் கழுவாத அசுத்த கைகளாலே போஜனம்பண்ணுகிறதை அவர்கள் கண்டு குற்றம்பிடித்தார்கள். 3.ஏனெனில் பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கைக்கொண்டு, அடிக்கடி கைகழுவினாலொழியச் சாப்பிடமாட்டார்கள். 4.கடையிலிருந்து வரும்போதும் ஸ்நானம்பண்ணாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும் கிண்ணங்களையும் செப்புக்குடங்களையும் மணைகளையும் கழுவுகிறதுமல்லாமல், வேறு அநேக ஆசாரங்களையும் கைக்கொண்டுவருவார்கள். 5.அப்பொழுது, அந்தப் பரிசேயரும் வேதபாரகரும் அவரை நோக்கி: உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கை கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள். 6.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும், 7.மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான். 8.நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்து வருகிறீர்கள் என்றார் - மாற்கு 7:1-8
பரிசேயரும் வேதபாரகரும், கர்த்தர் தங்களிடம் சொன்னது உவமை என்றோ, அல்லது அந்த உவமையின் உண்மையான அர்த்தத்தையோ அறிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் கர்த்தரால் போதிக்கப்பட்ட சீஷர்கள், கர்த்தர் சொன்னது உவமை என்பதை அறிந்துக் கொண்டார்கள், அதைத் தங்களுக்கு விளக்கிச் சொல்லுமாறு கர்த்தரிடமே கேட்டார்கள் - 17.அவர் ஜனங்களைவிட்டு வீட்டுக்குள் பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள். 18.அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? 19.அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப்போகும் - மாற்கு 7:17-19
கர்த்தர் சொன்ன உவமையையும், அதின் முழு அர்த்தத்தையும் எப்படி அறிந்துக் கொள்வது? எப்படியாக ஒரு விடுகதைக்கு ஒரு நேரடியாக அர்த்தமும், உண்மையான அர்த்தமும் இருக்குமாம் போல, நாமும் கர்த்தர் சொன்ன உவமைக்கும் இரண்டு அர்த்தம் உண்டு, நாம் அதின் உண்மையான அர்த்ததை அறிந்துக் கொள்ள வேண்டும்.
இயேசு கிறிஸ்து, "மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்" என்று சொன்னதின் நேரடியான அர்த்தம் "நம் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கடைப்பிடிப்பது", ஆனால் இதன் ஆவிக்குரிய அர்த்தம், "தலைமுறை தலைமுறையாகத் நம்மை தொடர்ந்து வரும் பாவகாரியத்தை குறிக்கிறது", அதனால் தான் கர்த்தர் இதைச் சொன்னார் - 20.மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். 21.எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், 22.களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். 23.பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார் - மாற்கு 7:20-23
மேலும், "கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுதல்" என்பது, நமது பாவங்களை மறைக்க நாம் மேற்கொள்ளும் முயற்சியைக் குறிக்கிறது. உதாரணமாக, ஒரு கொலைகாரன் தான் சிந்திய இரத்தத்தின் தடயங்களை மறைக்கத் தனது கத்தி மற்றும் துப்பாக்கிகளைக் கழுவுவான், அது போலவே, ஒரு திருடன், தான் செய்த திருட்டை மறைக்கத் தனது சுத்தியல் மற்றும் கடப்பாரைகளைக் கழுவுவான், அது போலவே, ஒரு விபச்சார பாவம் செய்தன், தன் அந்தரங்க உறுப்புகளைக் கழுவுவான், சில சமயங்களில், இந்தக் கழுவுதல் கருக்கலைப்பு வரை செல்கிறது, அதாவது கருப்பையைக் கழுவுதல் வரை செல்கிறது.
மேலும் வேதாகமம், பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் கடையிலிருந்து வரும்போதும் ஸ்நானம்பண்ணாமல் சாப்பிடமாட்டார்கள் என்றும், செம்புகளையும் கிண்ணங்களையும் செப்புக்குடங்களையும் மணைகளையும் அடிக்கடி கழுவுவார்கள் என்று சொல்லுகிறது, அதாவது கர்த்தரை ஏற்றுக் கொள்ளாதவர்கள், சந்தைக்குச் சென்று பொருட்களை வாங்கி வருவது போல, இந்த பாவங்களை சர்வசாதாரணமாக செய்து, அதன் பின்பு தங்கள் பாவத்தை மறைக்கிறவர்களாய் இருப்பார்கள், ஆனால், இத்தகைய நடைமுறைகள் நம்மிடையே துளியளவும் இருக்க கூடாது என்று கர்த்தர் கட்டளையிட்டார்.
அடுத்த பாகம்: பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளை