இயேசு கிறிஸ்து, பல்வேறு கால கட்டங்களில் ஜனங்களுக்கு செய்த உபதேசங்களை, அப்போஸ்தலனாகிய மத்தேயு, தேவ ஆவியானவரின் ஏவுதலின் படி ஒன்றாய் தொகுத்து மலை பிரசங்கமாக மத்தேயுவின் புஸ்தகம் 5, 6, 7ம் அதிகாரங்களில் எழுதியுள்ளார், அதே போல இயேசு கிறிஸ்து தான் சிலுவைக்கு போகும் முன்பு தன்னுடைய சீஷர்களுக்கு செய்த போதனைகளை தேவ ஆவியானவரின் உதவியுடன் அப்போஸ்தலனாகிய யோவான் 13, 14, 15, 16, 17ம் அதிகாரங்களில் எழுதியுள்ளார்.
யாக்கோபை காட்டிலும் யோவானின் ஊழியம், நிச்சியமாகவே ஒரு கனி தருகிற ஊழியமாக இருந்தது, பரிசுத்த வேதாகமத்தில் யோவான், 1 யோவான், 2 யோவான், 3 யோவான், மற்றும் வெளிப்படுத்தின விசேஷம் என 5 புஸ்தகங்கள் இந்த யோவான் எழுதினதாய் இருக்கிறது, இது எப்படியாயிற்று?
யாக்கோபு மற்றும் யோவான் இரண்டு பேருமே ஒரே தாய் தகப்பனுக்கு பிறந்தவர்கள், இரண்டு பேருமே ஒரே நேரத்தில் இந்த உலக காரியங்களை உதறிவிட்டு கர்த்தரின் ஊழியத்திற்கு வந்தவர்கள் - 16.அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார். 17.இயேசு அவர்களை நோக்கி: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். 18.உடனே அவர்கள் தங்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். 19.அவர் அவ்விடம் விட்டுச் சற்று அப்புறம் போனபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் படவிலே வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டு, 20.உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே, விட்டு அவருக்குப் பின்சென்றார்கள் - மாற்கு 1:16-20
இரண்டு பேருமே ஒரே நேரத்தில் அப்போஸ்தலர்களாக தெரிந்தெடுக்கப்பட்டிருந்தவர்கள் - 12.அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். 13.பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார். 14.அவர்கள் யாரெனில், பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தொலொமேயு, 15.மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன், 16.யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே - லூக்கா 6:12-16
யாக்கோபு மற்றும் யோவான் இரண்டு பேருமே இயேசு கிறிஸ்துவின் மறுரூப மகிமையை தரிசித்தவர்கள் - 1.ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய், 2.அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. 3.அப்பொழுது மோசேயும், எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். 4.அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். 5.அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. 6.சீஷர்கள் அதைக் கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள். 7.அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாதேயுங்கள் என்றார். 8.அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்க்கையில் இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை - மத்தேயு 17:1-8
யாக்கோபு மற்றும் யோவான் இரண்டு பேருமே, இயேசு கிறிஸ்து ஜெபஆலயத்தலைவனுடைய மகளை உயிருடன் எழுப்பினதை கண்டு, கர்த்தரின் வல்லமையை அறிந்தவர்கள் - 35.அவர் இப்படிப்பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள். 36.அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெபஆலயத்தலைவனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி; 37.பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறொருவரும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொடாமல்; 38.ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலே வந்து, சந்தடியையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு, 39.உள்ளே பிரவேசித்து: நீங்கள் சந்தடிபண்ணி அழுகிறதென்ன? பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். 40.அதற்காக அவரைப் பார்த்து நகைத்தார்கள். எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, பிள்ளையின் தகப்பனையும் தாயையும், தம்மோடே வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளையிருந்த இடத்தில் பிரவேசித்து, 41.பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம். 42.உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள். அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்கு ஆகாரங்கொடுக்கும்படி சொன்னார் - மாற்கு 5:35-42
யாக்கோபு மற்றும் யோவான் இரண்டு பேருக்கும், அவர்களின் தாய் கர்த்தரிடம் வேண்டுதல் செய்தாள் - 20.அப்பொழுது, செபெதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரரோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள். 21.அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றாள். 22.இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள் கூடும் என்றார்கள். 23.அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத் தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலது பாரிசத்திலும் என் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார். 24.மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்பேரிலும் எரிச்சலானார்கள் - மத்தேயு 20:20-24
ஆனால், ஒவ்வொரு கால கட்டத்திலும், யோவான் அதிகமாய் பயன்படுத்தப்பட்டதை பார்க்க முடிகிறது, நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தன்னுடைய சிலுவை பாடுகளின் மத்தியில், தன் ஜீவனை விடும் கடைசி வினாடிகளில் யோவானோடு பேசினதை பார்க்கிறோம் - 26.அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். 27.பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். 28.அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். 29.காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். 30.இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார் - யோவான் 19:26-30
மேலும், நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, உயிர்த்தெழுந்த பின்பும் யோவானை குறித்துப் பேசினதை பார்க்கிறோம் - 21.அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான். 22.அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார். 23.ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லையென்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார் - யோவான் 21:21-23
இப்படி யாக்கோபு மற்றும் யோவான் இரண்டு பேரும் ஒன்றாய் ஊழியம் செய்த பொழுது, ஊழியத்தின் துவக்கத்திலேயே யாக்கோபு கொலை செய்யப்பட்டு விட்டார், யாக்கோபின் மரணம் யோவானை நிச்சயம் சோர்வடைய செய்திருக்கும், ஆனால் அதனையும் தாண்டி எப்படி யோவானால் தொடர்ந்து ஊழியம் செய்ய முடிந்தது? - 1.அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி; 2.யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான். 3.அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது - அப்போஸ்தலர் 12:1-3
யாக்கோபை காட்டிலும் யோவான் அதிகமாய் பயன்படுத்தப்பட்டதெப்படி? அதிகமான கனிகளை கொடுக்க முடிந்தது?
இதற்கு காரணம், யோவான் பிறந்த குடும்பம் என்று சொல்ல முடியாது, ஏனென்றால் யாக்கோபு யோவான் இரண்டு பேருமே ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள், இதற்கு காரணம், யோவான் பிறந்த கோத்திரம்[ஜாதி] என்றும் சொல்ல முடியாது, காரணம் யாக்கோபு யோவான் இரண்டு பேருமே ஒரே கோத்திரத்தில் வந்தவர்கள் தான், யோவானின் ஊழிய அழைப்பு என்றும் சொல்ல முடியாது, காரணம் யாக்கோபு யோவான் இரண்டு பேருமே ஒரே நேரத்தில் ஒரே மாதிரியான ஊழியத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள், இதற்கு காரணம், யோவான் பெற்ற வரம் என்றும் சொல்ல முடியாது, காரணம் யாக்கோபு யோவான் இரண்டு பேருமே பொவனெர்கேஸ் என்று அழைக்கப்படும் மேலான வரமுடையவராய் இருந்தார்கள், இப்படி இந்த சகோதரர்களின் காரியங்கள் எல்லாமே ஒரே மாதிரியாய் இருக்கும் பொழுது, யோவானிடம் ஒரே ஒரு வித்தியாசம் காணப்பட்டது, அது என்னவென்றால், அவர் இயேசுவை நேசிக்கிறவராகவும் கர்த்தரின் மார்பினிலே சாய்ந்து இளைப்பாறுகிறவராகவும் இருந்தார், அதுவே யோவானை கனி கொடுப்பவராய் மாற்றினது - 23.அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். 24.யாரைக்குறித்துச் சொல்லுகிறாறென்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான். 25.அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான் - யோவான் 13:23-25