மோசேயின் விளக்கம்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
இயேசு கிறிஸ்து திரியேக தேவனாக, அதாவது பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவியானவரின் தற்சுரூபமாய் இருக்கிறார்
முந்தைய பாகம்: சாராளின் விளக்கம்
முட்செடியின் மோசேக்கு தரிசனமான கர்த்தர், இஸ்ரவேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்க, மூன்று அடையாளங்களை கொடுத்து அனுப்பினார், அவைகள் முறையே "மோசே தன் கோலை தரையிலே போடுவது", அதன் பின்பு "மோசே தன் கையை மடியிலே போடுவது", பின்பு "நதியின் தண்ணீரை நிலத்தில் ஊற்றுவது" என்பதாகும் - 1.அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான். 2.கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான். 3.அதைத் தரையிலே போடு என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது சர்ப்பமாயிற்று; மோசே அதற்கு விலகி ஓடினான். 4.அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று. 5.ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார். 6.மேலும், கர்த்தர் அவனை நோக்கி: உன் கையை உன் மடியிலே போடு என்றார்; அவன் தன் கையைத் தன் மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவன் கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது. 7.அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையைத் திரும்பத் தன் மடியிலே போட்டு, தன் மடியிலிருந்து அதை வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப்போலாயிற்று. 8.அப்பொழுது அவர்: முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உனக்குச் செவிகொடாமலும் போனால், பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள். 9.இவ்விரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன் வாக்குக்குச் செவிகொடாமலும் இருப்பார்களானால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக; நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும் என்றார் - யாத்திராகமம் 4:1-9
இதில் முதல் அடையாளமாகிய, மோசே தேவனுடைய கோலை தரையிலே போட்டு, அது சர்ப்பமாக மாறி, மறுபடியும் அதை கையினால் எடுத்து ஒரு கோலாக மாற்றுவது, நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து உன்னதத்திலிருந்து பூமிக்கு வந்து மரணத்தை ருசித்து மறுபடியுமாக உயிர்த்தெழுவதையே குறிக்கிறது.
இரண்டாம் அடையாளவது, இயேசு கிறிஸ்துவுக்குள் வாசம் செய்த பிதாவின் ஆவியானவரும் நமக்காக பாடுகள் அடைந்த ரகசியத்தை அறிவிக்கிறது, இல்லாவிட்டால், மோசே தன்னுடைய கரத்தை மடியிலே போட்டு வெண்குஷ்டம் உள்ள கையாக மாற்றுவதற்கு பதிலாக அதை ஒரு தங்கமாக மாற்றி இருக்கலாமே?
மூன்றாவது அடையாளமாகிய, நதியின் தண்ணீரை தரையில் ஊற்றி இரத்தமாக மாற்றுவது, இயேசு கிறிஸ்துவை நிரப்பியிருந்த பரிசுத்த ஆவியானவரும் நமக்காக பாடுகள் அடைந்த ரகசியத்தை அறிவிக்கிறது, இல்லாவிட்டால், தண்ணிரை இரத்தமாக மாற்றுவதற்கு பதிலாக அதை வைரமாக மாற்றி இருக்கலாமே?
சாலொமோனிலும் பெரியவர், யோனாவிலும் பெரியவர்
இப்படியாக முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே தரிசனமான கர்த்தரை, தான் இன்னும் அறிந்துக் கொள்ளவேண்டும் என்று மோசே வேண்டிக் கொண்ட பொழுது, மேகஸ்தம்பத்தில் இறங்கின வார்த்தையானவர்[கர்த்தர்] தன்னோடு இருக்கும் பிதாவின் ஆவியானவரையும்[கர்த்தர்], பரிசுத்த ஆவியானவரையும்[கர்த்தர்], மோசேயின் காதுகள் கேட்க கர்த்தர், கர்த்தர் என்று அழைத்து தன்னுடைய திருத்துவத்தை வெளிப்படுத்தினார் - 5.கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார். 6.கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர், இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். 7.ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார். 8.மோசே தீவிரமாகத் தரைமட்டும் குனிந்து பணிந்துகொண்டு: 9.ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்; இந்த ஜனங்கள் வணங்காக் கழுத்துள்ளவர்கள்; நீரோ, எங்கள் அக்கிரமத்தையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்தரமாக ஏற்றுக்கொள்ளும் என்றான். 10.அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும் - யாத்திராகமம் 34:5-10
இதைத்தான் இயேசு கிறிஸ்து தன்னுடைய ஊழிய நாட்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சொல்லிக் கொண்டு வந்தார், எப்படியெனில், யோனாவோடு தன்னை ஒப்பிட்ட வார்த்தையானவர், தன்னோடு இருக்கும் பிதாவின் ஆவியானவரை யோனாவிலும் பெரியவர் என்றும், பரிசுத்த ஆவியானவரை சாலமோனிலும் பெரியவர் என்றும் குறிப்பிட்டார் - 40.யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். 41.யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள். 42.தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள் - மத்தேயு 12:40-45
பார்வோன்களாயிருந்த வேதபாரகரும் பரிசேயரும்
மோசே தன் சகோதரனாகிய ஆரோனுடன் இஸ்ரவேல் மக்களை சந்தித்தபோது இந்த மூன்று அடையாளங்களையும் செய்து காட்டினான், அது தான் இயேசு கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, பிதாவின் கிருபையையும், பரிசுத்த ஆவியின் நிறைவையும் பெற்றுக்கொள்வது - 28.அப்பொழுது மோசே தன்னை அனுப்பின கர்த்தருடைய சகல வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட சகல அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான். 29.மோசேயும் ஆரோனும் போய், இஸ்ரவேல் புத்திரரின் மூப்பர் எல்லாரையும் கூடிவரச் செய்தார்கள். 30.கர்த்தர் மோசேக்குச் சொல்லிய சகல வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அந்த அடையாளங்களையும் செய்தான். 31.ஜனங்கள் விசுவாசித்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரைச் சந்தித்தார் என்றும், அவர்கள் படும் உபத்திரவங்களைக் கண்ணோக்கிப்பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்துத் தொழுதுகொண்டார்கள் - யாத்திராகமம் 4:28-31
இப்படி மூன்று அடையாளங்கள் மோசேயிடம் இருந்தும், பார்வோன் தனக்கு ஒரே ஒரு அடையாளத்தை மாத்திரம் காட்ட வேண்டும் என்று கேட்டான், கர்த்தரும் பார்வோனுக்கு ஒரே ஒரு அடையாளத்தை மாத்திரம் காண்பிக்க அனுமதித்தார், அது மோசே தன் கோலை தரையிலே போடுவது - 9.கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 9.உங்கள் பட்சத்திற்கு ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடே சொன்னால், அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப் போடு என்பாயாக; அது சர்ப்பமாகும் என்றார். 10.மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று. 11.அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள். 12.அவர்கள் ஒவ்வொருவனாகத் தன்தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிற்று. 13.கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுக்குச் செவிகொடாமற் போனான் - யாத்திராகமம் 7:8-13
இயேசு கிறிஸ்துவின் ஊழிய நாட்களில் பார்வோன்களுக்கு ஒப்பாயிருந்த பரிசேயரும் வேதபாரகரும் இயேசு கிறிஸ்துவிடம் அன்று பார்வோன் எப்படி மோசையிடம் ஒரு அடையாளத்தை கேட்டானோ, அதுபோலவே கர்த்தரிடமும் ஒரு அடையாளத்தை கேட்டார்கள், அவர்களை பொல்லாத விபசாரச் சந்ததியார் என்று அழைத்த கர்த்தர், ஒரே ஒரு அடையாளத்தை மாத்திரம் கொடுக்கப் போவதாக சொன்னார், அது தான் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த அடையாளம், இப்படி கர்த்தர் அனுமதித்ததினால் தான், இன்று பலரும் இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளையும், கர்த்தரின் உயிர்த்தெழுதலையும் கூட அறிந்தவர்களாக இருக்கிறார்கள், ஆனால் அவர்களால் இயேசு கிறிஸ்துவை தேவன் என்று ஏற்றுக் கொள்ளவும் முடிய வில்லை, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்றுக் கொள்ளவும் முடிய வில்லை, இதை தான் கர்த்தர் இவர்களுக்கு யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் கொடுக்கப்படுவதில்லை என்று சொன்னார் - 38.அப்பொழுது, வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். 39.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கத்தரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. 40.யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்ததுபோல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார் - மத்தேயு 12:38-40
அடுத்த பாகம்: யோனா, யோனாவிலும் பெரியவர், மற்றும் சாலொமோனிலும் பெரியவர்