இயேசுவின் போதனைகள்
பாகம் 9: விசுவாசமில்லாத சந்ததியே
பாகம் 9: விசுவாசமில்லாத சந்ததியே
முந்தைய பாகம்: நீர் கிறிஸ்து
இந்த உலக காரியங்களே பெரிதாய் இருந்த சீஷர்கள், எப்படியாக எல்லாவற்றையும் வெறுத்து கர்த்தர் மாத்திரம் போதும் என்பவர்களாக மாறினார்கள் என்பதை கடந்த தொகுப்பில் பார்த்தோம், ஆனால் இன்னும் அவர்களுக்குள் பெருமை, சுயம், சகோதர அன்பற்ற காரியங்கள் இருக்க தான் செய்தன, மேலும் கிறிஸ்துவாகிய அவரே சகலத்தையும் படைத்த சர்வ வல்லமையுள்ள தேவன் என்பதையும், அவரின் நாமம் மாத்திரமே உயர்த்தப்பட வேண்டும் என்பதையும் அறியாமல் தான் இருந்தார்கள்.
அப்பொழுது தான், சகல பிசாசுகளையும் துரத்த அதிகாரம் பெற்றிருந்த சீஷர்களால், ஒரு ஊமையான ஆவியை துரத்த கூடாமல் போனது, இந்த சம்பவத்தை மையமாக வைத்து கர்த்தர் தன்னுடைய சீஷர்களை பக்குவப்படுத்தியதை மார்க்கும் லூக்காவும் அழகாக எழுதியுள்ளனர் - 17.அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். 18.அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன். அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். 19.அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். 20.அவனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான். 21.அவர் அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயது முதற்கொண்டே உண்டாயிருக்கிறது; 22.இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று, நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள் மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான். 23.இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். 24.உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான், 25.அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார். 26.அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போலக் கிடந்தான். 27இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான் - மாற்கு 9:17-27
ஜெபத்தினாலும்
சீஷர்கள் இது வரை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபித்தது கிடையாது, மற்றவர்கள் யாரும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஜெபித்ததை பார்த்ததும் கிடையாது, அவர்கள் பார்த்தது எல்லாம் இயேசு கிறிஸ்துவின் ஊழியத்தையும், கர்த்தர் அதிகாரத்தோடு பிசாசுகளை அதட்டி விரட்டினதை மாத்திரமே! - 25.அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார். 26.உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனை விட்டுப் போய்விட்டது - மாற்கு 1:25-26
அப்படியென்றால், சீஷர்களும் கர்த்தரை போல தான் பிசாசுகளை விரட்ட முயற்சித்திருப்பார்கள், இயேசுவின் நாமத்தை சொல்லி பிசாசுகளை விரட்டி இருக்க மாட்டார்கள், கர்த்தரின் உதவி தேவை என்பது அவர்களின் வார்த்தைகளில் இருந்திருக்காது, அப்படியென்றால் பிசாசுகள் எப்படி போகும், அதை சரிசெய்ய தான் கர்த்தர் ஜெபத்தை குறித்துச் சொன்னார் - 28.வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள். 29.அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார் - மாற்கு 9:28-29
அதாவது இயேசு பிசாசை பார்த்து "இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார்", நாம் அதை போல சொல்லக்கூடாது, நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தை முன்னிறுத்தி ஏறெடுக்கப்படும் விண்ணப்பத்தோடு கட்டளையிட வேண்டும், ஏனென்றால் கர்த்தர் வந்தால் மாத்திரமே பிசாசுகள் ஓடும், அதை தான் ஜெபம் என்று கர்த்தர் சொன்னார்.
உபவாசத்தினாலுமேயன்றி
ஊழியத்தின் துவக்கத்தில், கர்த்தர் தன்னுடைய சீஷர்கள் உபவாசிக்க வேண்டியதில்லை என்று சொல்லி இருந்தார், அதுவும் மணவாளனாகிய தான் எடுத்துக் கொள்ளப்படும் வரை தன்னுடைய சீஷர்கள் உபவாசிக்க வேண்டியதில்லை என்று சொல்லி இருந்தார் - 18.யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம் பண்ணிவந்தார்கள். அவர்கள் அவரிடத்தில் வந்து: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருப்பதென்னவென்று கேட்டார்கள். 19.அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே. 20.மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் - மாற்கு 2:18-20
ஆனால் இப்பொழுது கர்த்தர் தன் சீஷர்களை உபவாசிக்க சொல்லவேண்டிய காரியம் என்ன? அது மணவாளனாகிய கர்த்தர் எடுத்துக் கொள்ளப்படும் சூழ்நிலை வந்துவிட்டது என்பதை அறிவிக்கவே என்று வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ளது - 30.பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அதை ஒருவரும் அறியாதிருக்கவேண்டுமென்று விரும்பினார். 31.ஏனெனில், மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்று போடுவார்கள் என்றும், கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார். 32.அவர்களோ, அந்த வார்த்தையை அறிந்துகொள்ளவில்லை, அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள் - மாற்கு 9:30-32
அப்படியென்றால், மணவாளனாகிய கர்த்தர் சீஷர்களை விட்டு எடுத்துக் கொள்ளப்பட்டதை போன்ற ஒரு சூழ்நிலை உருவாக காரணம் என்ன? அது சீஷர்களிடம் காணப்பட்ட "நான் செய்தேன்", "நான் பெரியவன்" என்று காணப்பட்ட காரியங்கள் தானே! அவைகளை நாம் ஜெபத்தாலும் உபவாசத்தாலும் மாத்திரமே மேற்கொள்ள முடியும் என்று கர்த்தர் சொல்லி கொடுத்தார்.
கேட்கவும் பயந்தார்கள்
கர்த்தருக்கு பிசாசுகள் பயப்படுகிறதாய் இருக்கிறது என்பதை வேதாகமத்தில் பல இடங்களில் பார்க்கலாம், ஆனால் இங்கு கர்த்தரின் சீஷர்களுக்கு, கர்த்தர் செய்ய போகும் காரியங்களை குறித்து கேட்க பயம் உண்டானதாம்.
அதனால் தான் கர்த்தர் "இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது" என்று சொன்னார், அது நம்மை சரிசெய்வதற்காகவே! "இவ்வகைப் பிசாசு" என்பது நமக்குள் இருக்கிற காரியமேயன்றி வேறொன்றும் இல்லை, அதனால் தான் மத்தேயுவின் சுவிஷேச புத்தகத்தில் "இந்த ஜாதிப் பிசாசு" என்று சொல்லப்பட்டுள்ளது - 19.அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள். 20.அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 21.இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார் - மத்தேயு 17:19-21
தங்களுக்குள்ளே எவன் பெரியவன்
அது மாத்திரம் இல்லாமல், சீஷர்கள் மத்தியில் நான் தான் பெரியவன் என்கிற சண்டைகள் எப்பொழுதும் இருந்ததாம், அதை தான் கர்த்தர் இப்படியாக கேட்டார் - 33.அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார். 34.அதற்கு அவர்கள் பேசாமல் இருந்தார்கள்; ஏனெனில் அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள் - மாற்கு 9:33-34
உதாரணத்திற்கு ஊழியத்தை முடித்து வந்த அந்திரேயா நான் இன்று 10 பேரை சுகமாக்கினேன் என்று சொல்ல, உடனே பேதுரு நான் இன்று 15 பேரை சுகமாக்கினேன் என்று சொன்னாராம், உடனே அந்திரேயா, உன்னை ஊழியத்திற்கு அழைத்து கொண்டு வந்ததே நான் தான் என்று சொல்ல, பேதுருவுக்கு கோபம் உச்சத்தை தொட்டது - 21.அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். 22.அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன் - மத்தேயு 18:21-22
இப்படி "நான் தான்", "என்னால் தான்" என்கிற காரியங்கள், மணவாளனாகிய இயேசு கிறிஸ்துவை நம்மை விட்டு பிரிப்பதாய் இருக்கிறது, அது போன்ற எண்ணங்கள் நமக்குள் துளியளவும் இருக்க கூடாது என்பதை தான் கர்த்தர் இப்படியாக சொல்லிக் கொடுத்தார் - 35.அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிருவரையும் அழைத்து: எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன் என்று சொல்லி, 36.ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு: 37.இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார் - மாற்கு 9:35-37
கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி
அதற்கு அடுத்ததாக, சக விசுவாசியை காயப்படுத்துவது எவ்வளவு ஆபத்தானது என்பதையும் கர்த்தர் தன் சீஷர்களுக்கு சொல்லிக் கொடுத்தார் - 42.என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும். 43.உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். 44.அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். 45.உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். 46.அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். 47.உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய், நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். 48.அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். 49.எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான். 50.உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார் - மாற்கு 9:42-50
இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும் என்று கர்த்தர் ஏரோதினிடமோ, அல்லது பிலாத்துவினிடமோ, அல்லது ரோமர்களிடமோ சொல்லவில்லை, மாறாக தன் சீஷர்களிடமே சொன்னார், காரணம் கர்த்தர் மேல் உள்ள விசுவாசத்தை புற மதத்தினராலோ, அல்லது ஒரு தீவிரவாத இயக்கத்தினாலோ, அல்லது ஆளுகிறவர்களாலோ குறைக்க முடியாது.
வெளியேயிருந்து வருகின்ற ஏதிர்ப்புகள் சபையாரின் விசுவாசத்தை அதிகரிக்குமே அன்றி குறைக்காது, ஆனால் சபைக்குள்ளே இருக்கும் ஒரு நபரால், அல்லது ஒரு ஊழியக்காரனால், அல்லது ஒரு சபை போதகரால் சபைக்குள் இருக்கும் ஒரு விசுவாசியை சோர்ந்து போகச்செய்ய முடியும், அது மிகவும் ஆபத்தானது.
தடுக்கவேண்டாம்
மேலும், சீஷர்கள் தாங்கள் மாத்திரமே கர்த்தரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், மற்றவர்கள் யாரும் ஊழியம் செய்ய கூடாது என்ற எண்ணம் உள்ளவர்களாகவும், மற்றவர்களின் ஊழியத்தை தடுக்கிறவர்களாகவும் இருந்தார்கள், நாம் அப்படி இருக்க கூடாது, மற்றவர்களின் ஊழியத்திற்கு பங்கம் விளைவிக்கும் எண்ணம் நம் உள்ளத்திலும் இருக்க கூடாது, இருந்தால் அது நமக்கு தான் ஆபத்து என்பதையும் கர்த்தர் சொல்லிகொடுத்தார் - 49அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான். 50அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார் - லூக்கா 9:49-50
இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்க கற்றுக் கொண்ட சீஷர்கள்
யோவான் கர்த்தரிடம், "ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை கண்டோம்" என்று சொன்னதில் பல ரகசியங்கள் இருக்க தான் செய்கிறது, சீஷர்களுக்கு, நாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தான் ஜெபிக்க வேண்டும் என்கிற ரகசியம் தெரியாது, இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு தான் பிசாசுகள் பயப்படும் என்கிற ரகசியமும் தெரியாது, இந்த ரகசியம் கருவில் சுமந்த மரியாளுக்கும் தெரியாது, ஞானஸ்நானம் கொடுத்த யோவானுக்கும் தெரியாது, முப்பது வயதுள்ளவராயிருந்த இயேசு கிறிஸ்து சொன்னாலும் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலை, அப்படிபட்ட சூழ்நிலையில் தான் தேவன் இந்த ஒரு காரியம் சீஷர்களின் முன்பாக நடத்தி காட்டினார், சீஷர்களும் முதல் முறையாக இயேசுவின் நாமத்தை சொல்லி கட்டளை கொடுப்பதை பார்த்தார்கள், அவர்களுக்கு ஒரே ஆச்சரியம், எங்கோ இருக்கும் இயேசு கிறிஸ்துவின் பெயரை சொன்னாலே பேய்கள் அலறுகிறதே என்று ஆச்சரியப்பட்டார்கள், பரலோக ரகசியத்தை புரிந்திக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
அடுத்த பாகம்: உம்முடைய நாமத்தினாலே