இயேசுவின் போதனைகள்
பாகம் 8: நீர் கிறிஸ்து
பாகம் 8: நீர் கிறிஸ்து
முந்தைய பாகம்: சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது
முரட்டாட்டமுள்ளவர்களாய் இருந்த சீஷர்களை, கர்த்தர் எப்படியாக தன்னுடைய பிள்ளைகளாய் மாற்றினார் என்பதை "இயேசுவின் போதனைகள்" என்கிற தலைப்பில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
துவக்க நாட்களில், சீஷர்கள் கர்த்தரை ஒரு சாதாரண நபராக தான் பார்த்தார்கள், கர்த்தரோடு சிறிது நேரம் செலவு செய்ய கூட அவர்களால் முடியவில்லை, அதை தான் "சீஷர்களுக்கு சாப்பிடவும் சமயமில்லை", அதாவது ஒரு சிற்றுண்டி சாப்பிட கூட நேரமில்லை என்று வேதாகமம் சொல்லுகிறது.
நாட்கள் செல்ல செல்ல, கர்த்தர் தான் தேவன் என்பதை புரிந்துக் கொள்ள ஆரம்பித்தார்கள், ஆனாலும் அவர் தான் நம் ஆத்ம மணவாளன், அவரோடு தான் நாம் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பதை அறியாமல் இருந்தார்கள், அதை தான் "சீஷர்களுக்கு போஜனம்பண்ணவும் சமயமில்லை", அதாவது ஒரு முழுமையான சாப்பாடு சாப்பிட நேரமில்லை என்று வேதாகமம் சொல்லுகிறது.
அதன் பின்பு உண்டான அனுபவ பாடங்களினால், ஆத்ம மணவாளனாகிய கர்த்தருடன் இருப்பது தான் சந்தோசம் என்று உலக மேன்மையை வெறுக்க ஆரம்பித்தார்கள், அதை தான் "அவர்கள் படவிலே ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது" என்று வேதாகமம் சொல்லுகிறது, அதற்கான விளக்கத்தை கடந்த தொகுப்பில் பார்த்தோம்.
கர்த்தர் தன்னுடைய சீஷர்களை முதல் முறை ஊழியத்திற்கு அனுப்பின பொழுதே, ஜனங்கள் கர்த்தரை குறித்து பல விதமாக பேசினார்கள், அப்பொழுது கர்த்தர் "ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்" என்று கேட்கவில்லை - 14.அவருடைய பேர் பிரசித்தமானபடியினால், ஏரோது ராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்தான், ஆகையால் அவனிடத்தில் இந்தப் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான். 15.சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறு சிலர்: அவர், ஒரு தீர்க்கதரிசி, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போலிருக்கிறாரென்று சொன்னார்கள். 16.ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன் நான் சிரச்சேதம் பண்ணின யோவான்தான்; அவன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றான் - மாற்கு 6:14-16
ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்
ஊழியத்தின் துவக்கத்தில், இயேசு கிறிஸ்துவை மக்கள் எலியா என்றும், பூர்வகாலத்து தீர்க்கதரிசி என்றும் சொன்னது சீஷர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கும், அப்பொழுது கர்த்தர் சீஷர்களிடம் "ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்" என்று கேட்டிருந்தால், முதலாவது ஏரோதை குறித்து பெருமையாக பேசி, அதன் பின்பு "ஏரோது ராஜாவே உம்மை யோவான்ஸ்நானன்" என்றும், அது மாத்திரம் இல்லாமல், ஜனங்கள் உம்மை இப்படியெல்லாம் சொல்லுகிறார்கள் என்றும் சந்தோஷத்தோடு சொல்லியிருப்பார்கள்
ஆனால் இப்பொழுதோ, கர்த்தரின் வல்லமையையும், மகத்துவத்தையும், காற்றும் கடலும் கர்த்தருக்கு கீழ்ப்படிவதை கண்ட சீஷர்களுக்கு, ஏரோது ஒரு பொருட்டாகவே இல்லை, அதனால் "ஏரோது ராஜாவே உம்மை யோவான்ஸ்நானன்" என்று சொல்வதற்கு பதிலாக "சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்று சொல்லுகிறார்கள்" என்று சொன்னார்கள்.
இப்படியாக கர்த்தரின் மகத்துவத்தை அறிந்த சீஷர்களுக்கு இந்த உலக மேன்மை எல்லாம் ஒன்றுமே இல்லாமல் போய் விட்டது
நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்
ஊழியத்தின் துவக்கத்தில் ஜனங்கள் கர்த்தரை குறித்து பலவிதமான யூகங்களை சொன்ன பொழுது, கர்த்தர் சீஷர்களிடம் "நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்" என்று கேட்க வில்லை, ஏனென்றால் கர்த்தருக்கு தெரியும், சீஷர்களும் கர்த்தரை எலியா என்றோ அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்று தான் சொல்லியிருப்பார்கள்.
அதனால் தான் கர்த்தர் அவர்களுடன் வாழ்ந்து அற்புதங்களினாலும் அடையாளங்களினாலும் போதனைகளினாலும் வழிநடத்தி அதன் பின்பு "நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள்" என்று கேட்டார், அப்பொழுது பேதுரு தயங்காமல் "நீர் கிறிஸ்து" என்று பதில் சொன்னான் .
பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை
இப்படி எல்லா உலக காரியங்களையும் ஒதுக்கி தள்ளிவிட்டு, எல்லா விதமான மனித ஆலோசனைகளையும்(பரிசேயருடைய புளித்தமா, மற்றும் ஏரோதின் புளித்தமாவை) தள்ளிவிட்டு, இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று அறிக்கை செய்து, கர்த்தரை மாத்திரமே முழு மனதோடு அண்டிக்கொள்ளும் பொழுது, பாதாளத்தின் வாசல்கள் சபையை மேற்கொள்வதில்லை என்கிற இரகசியத்தையும் கர்த்தர் சொல்லி கொடுத்தார் - 17இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 18மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. 19பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். 20அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார் - மத்தேயு 16:17-20
அடுத்த பாகம்: விசுவாசமில்லாத சந்ததியே