இயேசுவின் போதனைகள்
பாகம் 7: சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது
பாகம் 7: சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது
முந்தைய பாகம்: ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது
முரட்டாட்டமுள்ளவர்களாய் இருந்த சீஷர்களை, கர்த்தர் எப்படியாக தன்னுடைய பிள்ளைகளாய் மாற்றினார் என்பதை "இயேசுவின் போதனைகள்" என்கிற தலைப்பில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
துவக்க நாட்களில், சீஷர்கள் கர்த்தரை ஒரு சாதாரண நபராக தான் பார்த்தார்கள், கர்த்தரோடு சிறிது நேரம் செலவு செய்ய கூட அவர்களால் முடியவில்லை, அதை தான் "சீஷர்களுக்கு சாப்பிடவும் சமயமில்லை", அதாவது ஒரு சிற்றுண்டி சாப்பிட கூட நேரமில்லை என்று வேதாகமம் சொல்லுகிறது.
நாட்கள் செல்ல செல்ல, சீஷர்கள் கர்த்தரின் வல்லமையை புரிந்துக் கொள்ள ஆரம்பித்தார்கள், ஆனாலும் அவர் தான் நம் ஆத்ம மணவாளன், அவரோடு தான் நாம் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பதை அறியாமல் இருந்தார்கள், அதை தான் "சீஷர்களுக்கு போஜனம்பண்ணவும் சமயமில்லை", அதாவது ஒரு முழுமையான சாப்பாடு சாப்பிட நேரமில்லை என்று வேதாகமம் சொல்லுகிறது.
அதன் பின்பு உண்டான அனுபவ பாடங்களினால், ஆத்ம மணவாளனாகிய கர்த்தருடன் இருப்பது தான் சந்தோசம் என்று உலக மேன்மையை வெறுக்க ஆரம்பித்தார்கள், அதை தான் "அவர்கள் படவிலே ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது" என்று வேதாகமம் சொல்லுகிறது, அதற்கான விளக்கத்தை கடந்த தொகுப்பில் பார்த்தோம்.
சீஷர்கள் உலக காரியங்களை உதறி விட்டு, தல்மனூத்தாவிலிருந்து பெத்சாயிதாவை நோக்கி கர்த்தரோடு படவில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள், இப்படி இயேசு கிறிஸ்து மாத்திரமே போதும் என்று மாறினதை தான் "படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம்மாத்திரம் இருந்தது" என்று மார்க் சுவிஷேச புஸ்தகம் சொல்லுகிறது
இப்படி இவ்வுலக காரியங்களை விட்டு விட்டு, முற்றிலும் தன்னையே சார்ந்திருக்க வேண்டும், அதாவது பரலோகத்தின் பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்பதை தான், துவக்கத்தில் கர்த்தர் தன் சீஷர்களை "அக்கரைக்குப் போவோம் வாருங்கள்" என்று அழைத்தார்.
சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது
அதை தான் மத்தேயு "அவருடைய சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது" என்று ஆரம்பிக்கிறார், இப்படி இயேசு கிறிஸ்துவின் மீதான அன்பிலும் விசுவாசத்தில் தேறினவர்களாய், இந்த உலக அப்பத்தை உதறி விட்டு, இயேசு கிறிஸ்து மாத்திரம் போதும் என்ற பொழுது தான் கர்த்தர் பிசாசின் தந்திரங்களை குறித்து தன் சீஷர்களிடம் பேச ஆரம்பித்தார் - 5அவருடைய சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்[ உதறி விட்டு போனார்கள்]. 6இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார். 7நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள். 8இயேசு அதை அறிந்து: அற்பவிசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன? 9இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும்; 10ஏழு அப்பங்களை நாலாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா? 11பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவுக்கு எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார். 12அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள் - மத்தேயு 16:5-12
பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமா
மணவாட்டிகளாக மாறியிருந்த சீஷர்களிடம் கர்த்தர் சொன்ன முதல் காரியம் "பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்பது", காரணம் பரிசேயர் சதுசேயர் என்பவர்கள் பரலோகத்தின் தேவனை குறித்து உபதேசிப்பார்கள், அவர்கள் உபதேசத்தில் மோசேயும் மற்ற வேதாகம தீர்க்கதரிசிகள் கூட இருப்பார்கள், ஆனால் அவர்கள் உபதேசத்தில் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து இருக்க மாட்டார்.
இப்படி கர்த்தர் பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று சொல்லும் பொழுது, பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் மோசம் போக்கும் உபதேசத்தை நம்ப கூடாது என்பது மாத்திரம் இல்லாமல், நம் உபதேசத்தில் இயேசு கிறிஸ்து மாத்திரமே இருக்க வேண்டும் என்கிற கட்டளையும் அடங்கி இருக்கிறது.
ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
அடுத்ததாக, கர்த்தர் தன் சீஷர்களிடம் சொன்னது தான், ஏரோதின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்பது - 15அவர் அவர்களை நோக்கி: நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார். 16அதற்கு அவர்கள்: நம்மிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள். 17இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? 18உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவுகூராமலுமிருக்கிறீர்களா? 19நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். பன்னிரண்டு என்றார்கள். 20நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடை நிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள். 21அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார் - மாற்கு 8:15-21
ஏரோதுகளை குறித்து வேதாகமத்தில் பல காரியங்கள் சொல்லப்பட்டிருந்தாலும், ஏரோதின் புளித்தமாவை [ஏரோதின் உபதேசத்தை] குறித்து வேதாகமம் இப்படியாக சொல்லுகிறது - 21குறித்தநாளிலே: ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான். 22அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள். 23அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான் - அப்போஸ்தலர் 12:21-23
ஏரோதின் வஸ்திரமும், அரியனையும், பிரசங்கமும், அவனை மகிமைபடுத்துவதாக தான் இருக்கும், அங்கு ஏரோதின் மகிமை தான் பேசப்படும், இந்த ஏரோதின் உபதேசத்தை கேட்பவர்களுக்கு தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவை குறித்த எண்ணமே வராது, முடிவு தேவ கோபாக்கினையும் மரணமும் தான்.
கர்த்தர் ஏரோதின் உபதேசத்தைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்று சொல்லும் பொழுது, ஏரோது போன்றவர்களின் உபதேசத்தைக் கேட்கும் பொழுது நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது மாத்திரம் இல்லாமல், நாம் ஏரோதை போல் மாறி விடக்கூடாது என்கிற கட்டளையும் அடங்கி இருக்கிறது.
அடுத்த பாகம்: நீர் கிறிஸ்து