இயேசுவின் போதனைகள்
பாகம் 3: போஜனம்பண்ணவும் சமயமில்லை
பாகம் 3: போஜனம்பண்ணவும் சமயமில்லை
முந்தைய பாகம்: அக்கரைக்குப் போவோம் வாருங்கள்
கர்த்தரே நம்முடைய ஊழியத்தில் அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்கிறவர், அவருக்கே துதி கனம் மகிமை எல்லாம் உரியது என்பதை சீஷர்கள் இன்னும் அறியாமல் தான் இருந்தார்கள், அப்படியிருந்தும், கர்த்தர் சீஷர்களுக்கு வரங்களையும் அதிகாரங்களையும் கொடுத்து ஊழியத்திற்கு அனுப்பினார் - 7அவர் பன்னிருவரையும் அழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரங்கொடுத்து, 8வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும், எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியை மாத்திரம் எடுத்துக்கொண்டு போகவும்; 9பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டார். 10பின்பு அவர்களை நோக்கி: நீங்கள் எங்கேயாகிலும் ஒரு வீட்டில் பிரவேசித்தால், அவ்விடத்தை விட்டுப் புறப்படுகிறவரைக்கும் அங்கேதானே தங்கியிருங்கள். 11எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வசனங்களைக் கேளாமலும் இருந்தால், நீங்கள் அவ்விடம் விட்டுப் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார். 12அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து; 13அநேகம் பிசாசுகளைத் துரத்தி, அநேகம் நோயாளிகளை எண்ணெய் பூசிச் சொஸ்தமாக்கினார்கள் - மாற்கு 6:7-13
சீஷர்களின் உபதேசத்தை கேட்ட மக்கள், இயேசு கிறிஸ்துவை எலியா என்றும், தீர்க்கதரிசி என்றும், உயிர்த்தெழுந்த யோவான் என்று சொன்னார்கள், இதற்கு சீஷர்களின் உபதேசத்தில் இருந்த குறையும் ஒரு காரணம் தானே, இதை ஒரு உதாரணத்தோடு பார்த்தால் எளிதாக புரிந்துக் கொள்ளலாம், ஒரு பயிற்சி ஆசிரியர் சில சிறுவர்களுக்கு கிரிக்கெட் விளையாட சொல்லிக் கொடுக்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அந்த பயிற்சி முடிந்த பிறகு அந்த சிறுவர்கள் தாங்கள் கற்றுக் கொண்டது ஹாக்கி(Hockey) என்று சொன்னால், அது யாருடைய குற்றம்?, அது அந்த பயிற்சி ஆசிரியரின் தவறும் தானே, அது போல தான் இங்கும் சீஷர்களின் தெளிவற்ற போதனையும், மக்கள் இயேசுவை கிறிஸ்துவை எலியா என்றும், ஒரு தீர்க்கதரிசி என்றும், உயிர்த்தெழுந்த யோவான் என்றும் சொல்ல காரணமாயிற்று - 14.அவருடைய பேர் பிரசித்தமானபடியினால், ஏரோது ராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்தான், ஆகையால் அவனிடத்தில் இந்தப் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான். 15.சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறு சிலர்: அவர், ஒரு தீர்க்கதரிசி, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போலிருக்கிறாரென்று சொன்னார்கள். 16.ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன் நான் சிரச்சேதம் பண்ணின யோவான்தான்; அவன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றான் - மாற்கு 6:14-16
ஏனென்றால் சீஷர்கள் பரிசுத்த ஆவியானவரினால் நிரம்பினவர்களாய் பேசாமல், சுயமாய் பேசினார்களாம், இதை தான் வேதாகமம், சீஷர்கள் தாங்கள் உபதேசித்தவைகளை அவருக்கு அறிவித்தார்கள் என்று சொல்லுகிறது - 30.அப்பொழுது அப்போஸ்தலர் இயேசுவினிடத்தில் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் உபதேசித்தவைகள் யாவையும் அவருக்கு அறிவித்தார்கள் - மாற்கு 6:30-31
மேலும், முதல் ஊழியத்தை முடித்து வந்த சீஷர்கள், "கர்த்தர் செய்த அற்புதங்கள்" என்று இயேசு கிறிஸ்துவிடம் நன்றி சொல்வதற்கு பதிலாக, "தாங்கள் செய்த அற்புதங்கள்" என்று சொல்லி தங்களை தாங்களே மிகைப்படுத்தி பேசினார்களாம், ஒரு ராஜா தன் இராஜ்ஜியத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவி தோகையை தன் ஊழியக்காரனிடம் கொடுத்து அனுப்பினார் என்று வைத்துக் கொள்வோம், ஆனால் பணத்தை கொடுத்து விட்டு வந்த ஊழியக்காரனோ, தான் பணம் கொடுத்தது போல் பேசினால், அதை ஏற்றுக் கொள்ள முடியுமா? சீஷர்கள் செய்ததும் அப்படி தான் இருந்தது.
நாட்கள் செல்ல செல்ல, சீஷர்கள் கர்த்தரின் வல்லமையை புரிந்துக் கொள்ள ஆரம்பித்தார்கள், ஆனாலும் அவர் தான் நம் ஆத்ம மணவாளன், அவரோடு தான் நாம் எப்பொழுதும் இருக்க வேண்டும் என்பதை அறியாமல் இருந்தார்கள், அதை தான் "சீஷர்களுக்கு போஜனம்பண்ணவும் சமயமில்லை", அதாவது ஒரு முழுமையான சாப்பாடு சாப்பிட நேரமில்லை என்று மார்க் சுவிஷேச புஸ்தகத்தில் எழுதப்பட்டுள்ளது - 31.அவர் அவர்களை நோக்கி: வனாந்தரமான ஓரிடத்தில் தனித்து சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார்; ஏனெனில், வருகிறவர்களும் போகிறவர்களும் அநேகராயிருந்தபடியினால் போஜனம்பண்ணுகிறதற்கும் அவர்களுக்குச் சமயமில்லாதிருந்தது - மாற்கு 6:31
அதனால் தான் அவர்களுக்கு கர்த்தர் பதில் ஒன்றுமே சொல்லாமல், தன் சீஷர்களிடம் இளைப்பாற போவோம் என்று வனாந்தரத்திற்கு அழைத்து சென்றார், இளைப்பாறுவதும், போஜனம்பண்ணுவதும் நோக்கமாக இருந்திருந்தால், கர்த்தர் சீஷர்களை செழிப்பான இடத்திற்கோ, அல்லது ஒரு பட்டணத்திற்கு தானே அழைத்து சென்றிருக்க வேண்டும். இங்கு போஜனம் என்று சொல்லப்பட்டது நம் ஆவிக்குரிய போஜனத்தை, அதாவது இயேசு கிறிஸ்து தான் ஜீவ அப்பம் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற இரட்சிப்பின் போஜனமாகவே இருந்தது, அதற்காகத் தான் கர்த்தர் சீஷர்களை வனாந்தரமான இடத்திற்கு அழைத்துச் சென்றார் .
அடுத்த பாகம்: அப்பங்களைக்குறித்து உணராமற்போனார்கள்