இயேசுவின் போதனைகள்
பாகம் 10: உம்முடைய நாமத்தினாலே
பாகம் 10: உம்முடைய நாமத்தினாலே
முந்தைய பாகம்: விசுவாசமில்லாத சந்ததியே
முரட்டாட்டமுள்ளவர்களாய் இருந்த சீஷர்களை, கர்த்தர் எப்படியாக தன்னுடைய பிள்ளைகளாய் மாற்றினார் என்பதை "இயேசுவின் போதனைகள்" என்கிற தலைப்பில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
கடந்த தொகுப்பில், நாம் சரிசெய்ய வேண்டிய காரியங்களை எப்படியாக சொல்லி கொடுத்தார் என்பதை பார்த்தோம், அதன் பின்பு உண்டான மாறுதலை இந்த தொகுப்பில் பார்ப்போம், தான் சொல்லிக் கொடுத்த அனுபவ பாடங்களுக்குப் பின்பு, கர்த்தர் சீஷர்களை ஊழியத்திற்கு அனுப்பின பொழுது, ஒரு சபையாக தான் அனுப்பினார், அதில் 70 பேர் இருந்தார்கள், அதில் அப்போஸ்தலர் அல்லது முதல் கட்ட தலைவர், இரண்டாம் கட்ட தலைவர் என்று யாருமே கிடையாது, கர்த்தர் ஒருவரே தலைவராய் இருந்தார் - 1.இவைகளுக்குப் பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார். 2.அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் (அறுவடையின் எஜமான்) தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள். 3.புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன். 4.பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோகவேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம். 5.ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள். 6.சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும். 7.அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள். 8.ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் புசித்து, 9.அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். 10.யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்: 11.எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த் துடைத்துப்போடுகிறோம்; ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள். 12.அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் அந்த நாளிலே சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 13.கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள். 14.நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும். 15.வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, 16.சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார் - லூக்கா 10:1-16
தமக்கு முன்னே
கர்த்தர் 70 பேரை, இரண்டிரண்டு பேராக, அதாவது 35 சிறு குழுவாக அனுப்பின பொழுது, "தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார்" என்று வேதாகமம் சொல்லுகிறது, அதாவது அந்த 35 குழுக்களும் ஊழியம் செய்யும் பொழுது கர்த்தர் அங்கு இருப்பார், ஏனென்றால் அவர் தேவன். கர்த்தருக்காக 35 குழுக்கள் அல்ல, 35 கோடி குழுக்கள் ஊழியம் செய்தாலும், கர்த்தர் அங்கே இருக்க வல்லமை உள்ளவர்.
இப்படி வேதாகமத்தில் சொல்லப்பட்ட காரியங்களை புரிந்து, தேவ ஆவியானவரால் நடத்தப்பட்டால் தான் மற்றவர்களோடு இணைந்து கர்த்தருக்கு பணியாற்ற முடியும்.
வேண்டிக்கொள்ளுங்கள்
அடுத்ததாக "அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள்" என்று நாம் ஜெபத்தோடு தான் ஊழியத்தை துவங்க வேண்டும் என்று சொன்ன கர்த்தர், இயேசு கிறிஸ்துவே அறுப்புக்கு எஜமான் [அறுவடையின் எஜமான்] என்றும், நாம் ஜெபத்தோடு கர்த்தருக்காக ஊழியம் செய்யும் பொழுது, எலிசாவின் வீட்டை சூழ்ந்திருந்த அக்னி ரதமாக [கர்த்தரின் வேலையாட்கள்] நம்மோடு இருப்பார்கள் என்றும் சொல்லி கொடுத்தார்.
ஆட்டுக்குட்டிகளை
அடுத்ததாக "புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்" என்று சொன்ன கர்த்தர், நாம் ஆட்டுக்குட்டியை போல தான் இருக்க வேண்டும் என்றார். ஆட்டுக்குட்டியின் ஒரு சுபாவம் என்னவென்றால், அது கடிக்காது, அதுக்கு மற்றவர்களை காயப்படுத்தக் கூடிய கூர்மையான பற்களும் கிடையாது, அது பெருமை தேடாது, அது தன் தாயை மாத்திரமே நம்பியிருக்கும், அது போல நாமும் கிறிஸ்துவை மாத்திரமே நம்பினவர்களாய் இருக்க வேண்டும்.
பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி
நாம் ஜெபத்தோடும், கர்த்தரின் மகிமைக்காகவும் ஊழியத்தை செய்து, ஒரு ஆட்டுக்குட்டிகளை போல கள்ளங்கபடமற்றவர்களாய் இருப்போமானால், பிணியாளிகளைச் சொஸ்தமாக்க தேவன் இறங்கியிருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை - 17.பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள்.18.அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். 19.இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. 20.ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். 21.அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது. 22.சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார். 23.பின்பு தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள். 24.அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் - லூக்கா 10:17-24
சந்தோஷத்தோடே திரும்பிவந்து
துவக்கத்தில் சீஷர்கள் தங்கள் ஊழியத்தை முடித்து திரும்பி வந்த பொழுது, அவர்களிடம் கர்த்தர் கொடுக்கும் பரலோக சந்தோஷம் இல்லாமல் தான் இருந்தது, ஏனென்றால் "தாங்கள் செய்த அற்புதம்", "நான் தான் பெரியவன்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள், அவர்கள் அப்படி சொன்ன பொழுது கர்த்தர் அவர்களுக்கு பதில் ஒன்றுமே சொல்லவில்லை - அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார் - லூக்கா 9:10
ஆனால், இப்பொழுதோ அவர்களிடம் சந்தோஷம் நிறைவாய் இருந்தது, அதற்கு காரணம் "இயேசுவின் நாமத்தினாலே அற்புதங்கள் நடக்கிறது" என்று சொல்லி கர்த்தரின் நாமத்தை மாத்திரம் மகிமை படுத்தினதினாலேயே, அவர்களில் ஒருவனும் நான் தான் பெரியவன் என்று சொல்லிக் கொள்ள வில்லை, கர்த்தரே அவர்களுக்கு தலைவராக இருந்தார்.
ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது
அப்படி துதி கனம் மகிமையெல்லாம் இயேசுவுக்கு உரித்தாக்கும் பொழுது, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம் தான் "ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது" என்பதாகும், அப்படியேன்றால் ஊழியக்காரர்களாகிய நமது பாதுகாப்பு நம் கர்த்தரிடத்தில் தான் இருக்கிறது, அந்த வாக்குத்தத்தம் துதி கனம் மகிமையெல்லாம் இயேசுவுக்கு உரித்தாக்கும் பொழுது நமக்கு கிடைக்கிறது.
இயேசு ஆவியிலே களிகூர்ந்து
நம் நாமங்களை பரலோகத்தில் எழுதி, பிள்ளைகள் என்றும் பாக்கியவான்கள் என்றும் அழைத்து களிகூருகிறவராக இருக்கிறதை பார்க்கிறோம்.
அடுத்த பாகம்: போஜனபந்தியிருக்கையில்