இயேசுவின் போதனைகள்
பாகம் 2: அக்கரைக்குப் போவோம் வாருங்கள்
பாகம் 2: அக்கரைக்குப் போவோம் வாருங்கள்
முந்தைய பாகம்: சாப்பிடவும் சமயமில்லை
கர்த்தர் தான் தெரிந்துக் கொண்டவர்களை "அக்கரைக்குப் போவோம் வாருங்கள்" என்று அழைத்தது, இந்த உலக காரியங்களையெல்லாம் விட்டு விட்டு தன்னோடிருக்கும் பரலோக ராஜ்யத்திற்கான அழைப்பாக தான் இருந்தது, ஆனால் இயேசு கிறிஸ்துவை சாதாரண மனிதனாக பார்த்த சீஷர்களுக்கு, கர்த்தரின் அழைப்பு எவ்வளவு விலையேறப்பெற்றது என்பது தெரியாது, அது தெரியாமலேயே அவர்களும் கர்த்தரோடு படவில் சென்றார்கள் - 35.அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார். 36.அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக் கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது. 37.அப்பொழுது, பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று. 38.கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள். 39.அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று. 40.அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார். 41.அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள் - மாற்கு 4:35-41
தெய்வத்தை சாதாரண மனிதனாகவே பார்த்ததினால் தான், அவர் செய்த அற்புதத்தை பார்த்த சீஷர்கள் "இவர் யாரோ?" என்று கேட்டார்கள். அதனைத் தொடர்ந்து, கர்த்தர் லேகியோன் என்கிற திரள்கூட்ட பிசாசுகள் பிடித்திருந்த மனிதனை சுகப்படுத்தினார், அதன் பின்பு யவீரு என்கிற ஜெபஆலயத்தலைவனின் மகளையும் உயிரோடு எழுப்பினார், இந்த அற்புதங்கள் அடுத்தடுத்து நடந்ததாக மத்தேயு, மார்க், லுக்கா என மூன்று சுவிசேஷ புத்தகத்திலும் எழுதப்பட்டுள்ளது, ஏனென்றால் இந்த இரண்டு அற்புதங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பல தேவரகசியங்களையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.
முதலாவது, கர்த்தர் லேகியோன் என்கிற திரள்கூட்ட பிசாசுகள் பிடித்திருந்த மனிதனை சுகப்படுத்தின அற்புதத்தை குறித்து லுக்காவின் சுவிசேஷ புஸ்தகத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது - 26.பின்பு கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில் சேர்ந்தார்கள். 27.அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும், வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராக வந்தான். 28.அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான். 29.அந்த அசுத்த ஆவி அவனை விட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்த ஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான். 30.இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான். 31.தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. 32.அவ்விடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி தங்களுக்கு உத்தரவுகொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவுகொடுத்தார். 33.அப்படியே பிசாசுகள் அந்த மனுஷனை விட்டு நீங்கி, பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டது. 34.அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். 35.அப்பொழுது, சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள். 36.பிசாசுகள் பிடித்திருந்தவன் சொஸ்தமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள். 37.அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்கள் எல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களை விட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படவில் ஏறி, திரும்பிப்போனார். 38.பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்பட உத்தரவு கேட்டான். 39.இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான் - லூக்கா 8:26-39
அதனை தொடர்ந்து, கர்த்தர் யவீரு என்கிற ஜெபஆலயத்தலைவனின் மகளை உயிரோடு எழுப்பின அற்புதம் எழுதப்பட்டுள்ளது - 40.இயேசு திரும்பி வந்தபோது ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள். 41.அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால், 42.தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள். 43.அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ, 44.அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று. 45.அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள். 46.அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார். 47.அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள். 48.அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார். 49.அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான். 50.இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார். 51.அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர வேறொருவரையும் உள்ளே வரவொட்டாமல், 52.எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். 53.அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள். 54.எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். 55.அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது, உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார். 56.அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார் - லூக்கா 8:40-56
இந்த இரண்டு அற்புதங்களையும் செய்த பின்பு, கர்த்தர் இட்ட கட்டளை சீஷர்களுக்கு குழப்பமாகத்தான் இருந்திருக்கும், ஏனென்றால் லேகியோன் பிசாசுகளிடம் இருந்து விடுதலை பெற்றவனிடம், "தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி" என்று சொன்னார், ஆனால் ஜெப ஆலய தலைவனாக இருந்த யவீருவிடம் "நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி கட்டளையிட்டார்".
லேகியோன் பிசாசுகள் பிடித்தவன், வஸ்திரம் இல்லாதவனாய் துர்நாற்றம் உள்ள மனுஷனாய், புத்தி பேதலித்தவனாய், சரீரமெல்லாம் காயங்களுடன் கர்த்தர் முன்பாக வந்து விழுந்தான், ஆனால் யவீருவுவோ நல்ல வஸ்திரம் தரித்தவனாய் ஜெப ஆலய தலைவனாய், வேதஞானமும், நல்ல குடும்ப பின்னணியும், ஆள் பலமும், பண பலமும் உள்ள, ஒரு மரியாதைக்குரிய பாத்திரமாய் கர்த்தருக்கு முன்பாக வந்து விழுந்தான்.
இவைகளையெல்லாம் பார்க்கும் பொழுது கர்த்தரை அறிவிப்பதற்கு மிகவும் தகுதியான ஆள் யார் என்றால் அந்த யவிரு தான், ஆனால் கர்த்தரோ எந்த தகுதியும் இல்லாத, நிர்வாணியாய் அலைந்து கொண்டிருந்தவனை, சுகப்படுத்தி, வஸ்திரம் கொடுத்து, ஊழியத்திற்கு அனுப்பினார், ஏனென்றால் பிசாசுகள் விட்டுப்போன மனுஷனுடைய இருதயத்தில் இயேசு ஒரு மெய்யான தெய்வமாக இருந்தார், அதனால் தான் இயேசு அவனிடம் "தேவன்" உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி அனுப்ப, அவனோ "இயேசு" தனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவித்தான்.
அதனால் தான் அவன், கர்த்தரால் ஊழியத்திற்கு அனுப்பப்பட்ட முதல் ஆளாக இருந்தான், ஆனால் சீஷர்களோ இன்னும் கர்த்தர் தான் தேவன் என்பதை அறியாமல் இருந்தார்கள்.
அடுத்த பாகம்: போஜனம்பண்ணவும் சமயமில்லை