நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, சிலுவையில் தன் ஜீவனை விடும் கடைசி வினாடிகளில், தம்முடைய தாயாரிடமும், தமக்கு அன்பாயிருந்த சீஷனிடம் பேசினது யோவான் சுவிசேஷ புஸ்தகத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது - 26.அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். 27.பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். 28.அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். 29.காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். 30.இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார் - யோவான் 19:26-30
இப்படி கர்த்தர், தம்முடைய தாயாரிடமும், தமக்கு அன்பாயிருந்த சீஷனிடம் பேசினது, படிப்பவர்களின் உள்ளத்தை உடைக்கும் உயிருள்ள வார்த்தைகளாக இருக்கிறது, அதிலும் தமக்கு அன்பாயிருந்த சீஷனிடம் "அதோ உன் தாய்" என்று சொன்னது, கர்த்தர் மனுகுலத்திற்கே தெய்வத்தை அடையாளம் காட்டினது என்று சொல்லி மரியாளை தெய்வமாக வணங்குவோரும் உண்டு, இதுவே ரோமன் கத்தோலிக்க சபையின் ஆதாரமாகவும் இருக்கிறது.
அதே சமயத்தில், யோவான் சுவிசேஷ புஸ்தகத்தில் மாத்திரம் சொல்லப்பட்ட இந்த சம்பவம், மரியாளுக்கும் யோவனுக்கும் சம்பந்தபட்ட விஷயம், இதில் நமக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லி, கர்த்தர் பேசின உயிருள்ள வார்த்தைகளை ஒதுக்கி தள்ளுவோரும் உண்டு, இதை சற்றே பொறுமையாக ஆராய்ந்து, இதன் உண்மையனாக அர்த்ததை அறிந்து தெளிவான முடிவு எடுப்பது அவசியம், ஏனென்றால், நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உவமைகள் நிறைந்ததாக இருந்தது - இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை - மத்தேயு 13:34
உதாரணத்திற்கு, "என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள்" என்றால், கர்த்தர் தேவாலயத்தை குறித்துப் பேசுகிறார் என்று அர்த்தம், "இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்" என்றால், கர்த்தர் தன் சரீரத்தைக் குறித்துப் பேசுகிறார் என்று அர்த்தம், "புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்" என்றால், இயேசு கிறிஸ்து தேவன் அல்ல என்பவர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள் என்று அர்த்தம், "எலியா வந்தாயிற்று" என்றால், கர்த்தர் யோவான் ஸ்நானனைக் குறித்துப் பேசுகிறார் என்று அர்த்தம், அப்படியென்றால், கர்த்தர் "அதோ உன் தாய்" என்று சொன்னது, மரியாளை குறித்தது அல்ல, வேறு ஒரு நபரை குறித்து பேசுகிறார் என்று தானே அர்த்தம், இயேசுவின் தாயாக யோவான் கண்ட அந்த நபர் யார்?
இப்படி கர்த்தர் உவமைகளாக பேசினாலும், அவரின் பிள்ளைகளுக்கு, தேவ ஆவியானவர் உவமைகளின் உண்மையான அர்த்தத்தை விளங்க செய்வார் என்று வேதாகமம் சொல்லுகிறது - 12.ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். 13.அவர் யோவான் ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அவர்கள் அறிந்துகொண்டார்கள் - மத்தேயு 17:12-13
தொடர்ந்து படிக்க மோசேயின் இரண்டு தாயார்கள்