சீஷர்கள் தங்களுக்குள்ளே யார் பெரியவன் என்று வாக்குவாதம் செய்த பொழுது, கர்த்தர் அவர்களுக்கு சொன்ன புத்திமதியை தான் இந்த வசனங்களில் பார்க்கிறோம் - 46.பின்பு தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று. 47.இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தமதருகே நிறுத்தி, 48.அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார் - லூக்கா 9:46-48
இப்படி தங்களுக்குள்ளே யார் பெரியவன் என்று வாக்குவாதம் செய்த கொண்டிருந்த சீஷர்கள், கடைசியாக கர்த்தரிடமே வந்து தங்களில் யார் பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான் என்றுக் கேட்டார்கள், அவர்களுக்கு கர்த்தர் நீங்கள் இந்த எண்ணம் உள்ளவர்களாய் இருந்தால் பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று கடிந்துக் கொண்டதை தான் இந்த வசனங்களில் பார்க்கிறோம் - 1.அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள். 2.இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி: 3.நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 4.ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான் - மத்தேயு 18:1-4
மேலும், கர்த்தர் தன்னுடைய ஊழியம் நிறைவேறும் சமயத்திலும் இதைக் குறித்து தன்னுடைய சீஷர்களுக்குச் சொன்னதை பார்க்கிறோம் - தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் - மத்தேயு 23:12
முதன்மையான இடத்தில் உட்காராதே
இப்படி இயேசு கிறிஸ்து, தன்னுடைய ஊழியத்தின் ஒவ்வொரு கால கட்டத்திலும் மற்றவர்களை காட்டிலும் நாம் முந்த நினைக்கவும் பிரியாசப்படவும் கூடாது என்று போதித்தார் - 7.விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: 8.ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான். 9.அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும். 10.நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும். 11.தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார் - லூக்கா 14:7-11
கர்த்தரை அன்பு கூர்வதில் முந்திக் கொள்ளலாம்
இப்படி மற்றவர்களை காட்டிலும், நாம் நம்மை பெரியவனாகவோ, உயர்வாகவோ, மென்மையாகவோ இருக்க நினைக்கவும் பிரியாசப்படவும் கூடாது என்று போதித்த கர்த்தர், ஒரு விஷயத்தில் மாத்திரம் நாம் மற்றவர்களை காட்டிலும் முந்த அனுமதித்தார், அது அவரை நேசிக்கும் காரியமாய் இருக்கிறது - 3.அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். 4.அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே விசனமடைந்து: இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்? 5.இதை முந்நூறு பணத்துக்கு அதிகமான கிரயத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைக்குறித்து முறுமுறுத்தார்கள். 6.இயேசு அவர்களை நோக்கி: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். 7.தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; உங்களுக்கு மனதுண்டாகும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம்; நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன். 8.இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள். 9.இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் - மாற்கு 14:3-9
இப்படி இயேசு கிறிஸ்துவை நேசிப்பதில் மாத்திரம், அதாவது கர்த்தரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதில் மாத்திரம், நாம் மற்றவர்களை முந்த பிரியாசப்படலாம் என்பதை தான் இங்கு கர்த்தர் "இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே" என்று சொன்னார் - 36.பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார். 37.அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து, 38.அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள். 39.அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். 40.இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும் என்றார். அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான். 41.அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது. 42.கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார். 43.சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி, 44.ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள். 45.நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ, நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள். 46.நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள். 47.ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்று சொல்லி; 48.அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார் - லூக்கா 7:36-48
கர்த்தருக்கு ஊழியம் செய்வதில் முந்திக் கொள்ளலாம்
இப்படி இயேசு கிறிஸ்துவை நேசிப்பதில் மாத்திரம் இல்லாமல், கர்த்தரின் ஊழியத்தை செய்வதிலும் நாம் முந்திகொள்ளலாம் என்றும் [அதாவது கர்த்தரை மாத்திரம் உயர்த்துவது, மற்றவர்களின் கால்களை கழுவுவது..] அதனால் தான் பேதுருவுக்கு முந்தினவன் என்கிற பெயரும் கொடுக்கப்பட்டது - 1.அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். 2.அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான், 3.பிலிப்பு, பர்த்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு, 4.கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே - மத்தேயு 10:1-4
கர்த்தருக்கு கனி கொடுப்பதில் முந்திக் கொள்ளலாம்
இப்படியாக கர்த்தரை நேசிப்பது, அவருக்கு ஊழியம் செய்வது என்பதில் மாத்திரம் இல்லாமல், கனி கொடுப்பதிலும் நாம் முந்திக் கொள்ளலாம் என்றும் கர்த்தர் அனுமதி அளித்துள்ளார், அதனால் தான் பத்துராத்தல் சம்பாதித்தவனை முந்தினவன் என்று கர்த்தர் அழைத்தார் - 12.பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் போகப் புறப்பட்டான். 13.புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான். 14.அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள். 15.அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான். 16.அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான். 17.எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான். 18.அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் ஐந்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான். 19.அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான். 20.பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய ராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன். 21.நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான். 22.அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே, 23.பின்னை ஏன் நீ என் திரவியத்தைக் காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடே வரப்பற்றிக்கொள்வேனே என்று சொல்லி; 24.சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து, பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான். 25.அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள். 26.அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் - லூக்கா 19:12-26