நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, சிலுவையில் தன் ஜீவனை விடும் கடைசி வினாடிகளில் சொன்ன "அதோ உன் தாய்" என்ற வார்த்தை, அன்பின் உச்சத்தின் வார்த்தையாக இருக்கிறது - 26.அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். 27.பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். 28.அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். 29.காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். 30.இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார் - யோவான் 19:26-30
கர்த்தர் "அதோ உன் தாய்" என்று சொன்னது மரியாளுக்கும் யோவனுக்கும் சம்பந்தபட்ட விஷயம் இதில் நமக்கு ஒரு செய்தியும் இல்லை என்று ஒதுங்குவோரும் உண்டு, அப்படியல்ல இயேசு கிறிஸ்து சொன்னதிலேயே இது தான் மிகவும் முக்கியமான விஷயம் என்று சொல்லி மரியாளை தெய்வமாக வணங்குவோரும் உண்டு, இதன் உண்மையனாக அர்த்ததை சற்றே பொறுமையாக ஆராய்ந்து தெளிவான முடிவு எடுப்பது அவசியம், ஏனென்றால் இயேசு கிறிஸ்து வார்த்தைகள் உவமைகள் நிறைந்ததாகவே இருக்கிறது - 34.இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை. 35.என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது - மத்தேயு 13:34-35 [சங்கீதம் 78:2]
உதாரணத்திற்கு, கர்த்தர் "எலியா வந்தாயிற்று" என்று சொன்னது, யோவான் ஸ்நானனைக் குறித்ததாய் இருந்ததது, அதை நிதானித்து அறிந்து கொள்ள வேண்டியது சீஷர்களின் கடமையாய் இருக்கிறது - 12.ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். 13.அவர் யோவான் ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அவர்கள் அறிந்துகொண்டார்கள் - மத்தேயு 17:12-13
அதற்கு முன்பு, பரலோகத்தின் தேவனை "பிதா" என்று அழைப்பதற்கு பதிலாக "தாய்" என்றும், இயேசு கிறிஸ்துவை "குமாரன்" என்று அழைப்பதற்கு பதிலாக "ஒரே பிள்ளை" என்றும் சாலொமோன் ஞானி அழைத்ததை அறிந்துக் கொள்ள வேண்டும், தேவனிடத்திலிருந்து வந்த இயேசு கிறிஸ்துவை "ஒரே பிள்ளை" என்றால், தேவனை "அவரின் தாய்" என்று சாலொமோன் ஞானி குறிப்பிட்டது சரி தானே! - என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள் - உன்னதப்பாட்டு 6:9
சிலுவையண்டையில் இயேசுவின் தாயாகிய மரியாள்?
முதலாவது, இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் போது, அவரின் தாயாகிய மரியாள் அங்கு இல்லை என்பதை வேதாகமம் இவ்வாறு சொல்லுகிறது, எப்படியெனில், கர்த்தரின் சிலுவை மரணத்தின் போது அநேக ஸ்திரீகள் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்று சொல்லி அவர்களில் மூன்று பேரை குறிப்பிட்டுச் சொன்ன மத்தேயு, இயேசுவின் தாயாகிய மரியாளை குறித்து ஒன்றும் சொல்லாததின் காரணம் என்ன? ஒருவேளை இயேசுவின் தாயார் அங்கிருந்திருந்தால் அவர்களின் பெயரை தானே முதல் பெயராக சொல்லியிருக்க வேண்டும் - 54.நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள். 55.மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். 56.அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள் - மத்தேயு 27:54-56
இரண்டாவது சுவிசேஷ புஸ்தகத்தை எழுதிய மாற்கும், கர்த்தரின் சிலுவை மரணத்தின் போது, அங்கிருந்த ஸ்திரீகளில் மூன்று பேரை குறிப்பிட்டுச் சொன்னவர், இயேசுவின் தாயாகிய மரியாளை குறித்து ஒன்றும் சொல்லாததின் காரணம் என்ன? ஒரு வேளை கர்த்தரின் தாயாகிய மரியாள் அங்கிருந்திருந்தால், அவர்களின் பெயரை தானே முதல் பெயராக சொல்லியிருக்க வேண்டும், மரியாள் அங்கு இல்லை என்பதை வலியுறுத்தவே தேவ ஆவியானவர் மாற்குவின் மூலமாகவும் இதை எழுதியுள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை - 37.இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். 38.அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. 39.அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக் கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான். 40.சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று ஊழியஞ்செய்துவந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், 41.அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள் - மாற்கு 15:37-41
மூன்றாவது சுவிசேஷ புஸ்தகத்தை எழுதிய லூக்காவும், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் போது கர்த்தரின் தாயாகிய மரியாள் அங்கு இல்லை என்பதை இவ்வாறு எழுதியுள்ளார் - 46.இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். 47.நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். 48.இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். 49.அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் - லூக்கா 23:46-49
அப்படி என்றால், இயேசு கிறிஸ்துவின் சிலுவையினருகே இல்லாத ஒருவருக்கா தெய்வம் என்கிற அடையாளம் சூட்டப்பட்டது? மனிதர்கள் தங்களை தெய்வமாக காட்டிக்கொள்வது தெய்வத்திற்கு ஏதிரான குற்றம் தான், ஆனால் இந்த குற்றச்சாட்டில் இருந்து மரியாள் "நான் தான் சிலுவையண்டையே இல்லையே, எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று சொல்லி எளிதாக தப்பித்துக் கொள்வார்.
என் தாயார் யார்?
கர்த்தர் தன்னை உறவினர் என்கிற போர்வையில் ஒருவரும் பின்பற்ற அனுமதிக்க வில்லை, அதனால் தான் தன்னை சந்திக்க வந்த தன் தாயாரையும் சகோதரரையும், என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று கேட்டார் - 31.அப்பொழுது அவருடைய சகோதரரும், தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள். 32.அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள். 33.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, 34.தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! 35.தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார் - மாற்கு 3:31-35
இயேசு கிறிஸ்துவின் சகோதரரும், கர்த்தருடைய ஊழியநாட்களில் அவருடன் இணைந்து செயல்பட வில்லை என்பதை வேதாகமத்திலிருந்து அறிந்துக் கொள்ளலாம் - 2.யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது. 3.அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம். 4.பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். 5.அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்.
இவைகளெல்லாம் நமக்காக தான் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது, நாம் நம்மை தகுதியற்றவர்கள் என்று என்ன கூடாது, எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியும் இல்லாமல் கர்த்தரை தேட வேண்டும் என்பதற்காக தான் இவைகளெல்லாம் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது, காரியம் இப்படியிருக்க, இந்த முழு உலகத்தையும் இரட்சிக்க சிலுவையில் மரணத்தை சந்தித்த தேவன், தன் ஜீவனை விடும் கடைசி வினாடிகளில் "அதோ உன் தாய்" என்று சொல்லி தன் குடும்ப காரியத்தை குறித்து பேசிக்கொண்டிருந்தார் என்றால், அதை எப்படி ஏற்றுக் கொள்வது?
யோவான் கண்ட இயேசுவின் தாய் யார்?
மத்தேயு, மாற்கு, மற்றும் லூக்காவின் புஸ்தகத்தில் சொல்லப்படாத இயேசுவின் தாயாரை, யோவான் மாத்திரம் கண்டுக் கொண்டது எப்படி? இந்த யோவானை குறித்து சில காரியங்களை நாம் அவசியம் அறிந்துக் கொள்ளவேண்டும், இவர் இயேசு கிறிஸ்துவால் பொவனெர்கேஸ் என்று பெயரிடப்பட்டு, ஒரு மேன்மையான ஊழியத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார் - செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார் - மாற்கு 3:17
இப்படி, யோவானுக்கு இயேசு கிறிஸ்து கொடுத்த கிருபை, அவருக்கு பிதாவோடு பேசும் பாக்கியத்தையும் கொடுத்தது, அதனால் தான் பிதாவானவர் இடிமுழக்க சத்தத்தில் பதிலளித்த பொழுது, எல்லோரும் இது இடிமுழக்க சத்தம் என்றார்கள், ஆனால் பொவனெர்கேஸ் என்று அழைக்கப்பட்ட யோவானோ அந்த இடிமுழக்க சத்தத்தின் அர்த்தத்தை அறிந்துக் கொண்டார், அதனால் தான் இதன் அர்த்தம் யோவான் புஸ்தகத்தில் மாத்திரம் சொல்லப்பட்டுள்ளது - 27.இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன். 28.பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. 29.அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள். 30.இயேசு அவர்களை நோக்கி: இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று - யோவான் 12:27-30
அந்த வரம் பெற்ற யோவான் தான், இயேசு கிறிஸ்துவின் சிலுவையினருகே "அவருடைய தாயாரை" கண்டதாக எழுதியுள்ளார் - இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள் - யோவான் 19:25
மேலும், உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் கட்டளையின் படி, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்திற்கு எல்லோரும் காத்திருந்த பொழுது "இயேசுவின் தாயாகிய மரியாள்" என்று சந்தேகத்திற்க்கு இடமில்லாத படி அவரை குறித்து அப்போஸ்தலர் புஸ்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது, ஆனால் யோவான் இயேசுவின் சிலுவையினருகே "அவருடைய தாய்" என்று சொன்னாரே அன்றி, அப்போஸ்தலர் புஸ்தகத்தில் சொல்லப்பட்டது போல "இயேசுவின் தாயாகிய மரியாள்" என்று சொல்லவில்லை - 12.அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். 13.அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள். 14.அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள் - அப்போஸ்தலர் 1:12-14
ஆனால், ஒரு காரியத்தை வேதாகமம் நமக்கு தெரியப்படுத்துகிறது, அது என்னவென்றால் இயேசுவின் சிலுவையினருகே தாங்கொண்ணா வேதனையுடன் ஒருவர் இருந்திருக்கிறார், அவரை பிதாவோடு பேசும் பாக்கியத்தை பெற்ற யோவான் "கர்த்தரின் தாய்" என்று குறிப்பிட்டிருக்கிறார், கருவின் சுமந்த தாய்க்கு ஒப்பான வேதனையுடன் சிலுவையினருகே இருந்த அவர் யார்?
சிலுவையினருகே பிதா இருக்க வேண்டும்
முதலாவது, குமாரனாகிய இயேசு கிறிஸ்து பலியாகும் பொழுது, பிதா அருகே இருக்க வேண்டும் என்று தீர்க்கதரிசனம் கூறுகிறது - ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள் - ஆதியாகமம் 22:6
அது மாத்திரம் இல்லாமல், தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து நம்முடைய இரட்சிப்புக்காக அடிக்கப்படுகிற ஆட்டுக்குட்டியாய் இருக்கும் பொழுது, பிதாவும் சத்தமிடாதிருக்கிற ஆட்டை போல சிலுவையண்டையில் இருக்க வேண்டும் என்று ஏசாயா தீர்க்கதரிசனமாக கூறியிருந்தார் - அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார் - ஏசாயா 53:7
அது நிறைவேற வேண்டிய காரியமாய் இருந்ததினால் தான், இயேசு கிறிஸ்து தன்னுடைய சிலுவை மரண சமயத்தில் பிதா என்னுடனே இருப்பார் என்று சொல்லியிருந்தார் - இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார் - யோவான் 16:32
பரலோகத்தின் பிதா இயேசு கிறிஸ்துவின் தாயாக
இதை தான், பிதாவாகிய தேவன் சிலுவையண்டையில் மரியாளாக நின்று நிறைவேற்றினார், அதாவது தனது ஒரே பிள்ளையாகிய இயேசு கிறிஸ்து அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாய் துடித்துக்கொண்டிருந்த பொழுது, மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போல நின்று கொண்டிருந்தார் - இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள் - யோவான் 19:25
அந்த சமயத்தில் இயேசு கிறிஸ்து, தனக்கு அன்பானவனாயிருந்த சீஷனிடம் சொன்ன "அதோ, உன் தாய்" என்று சொன்னது, அது அநேகரை பிதாவின் பிள்ளைகளாக மாற்றுவதின் துவக்கமாகவே இருந்தது - 26.அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். 27.பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான் - யோவான் 19:26-27
இப்படி "அதோ, உன் தாய்" என்று இயேசு கிறிஸ்து சொன்னது, நாம் பிதாவின் பிள்ளைகளாக மாறி இயேசு கிறிஸ்துவின் மார்பில் சாய்ந்திளைப்பாறவேயன்றி, மரியாளின் பிள்ளைகளாக மாறி, சிலைகளையும் மனிதர்களையும் வழிபட்டு, தேவகோபாக்கினையைக் குவித்துக்கொள்வதர்காக அல்ல - நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது - ரோமர் 9:26
கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும்
பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியான சகரியா, இதை குறித்துச் சொல்லும் பொழுது, பிதா குமாரன் இரண்டு பேருமே சிலுவையை நோக்கி பயணம் செல்ல வேண்டும் என்பதை, உன் ராஜா கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறார் என்று சொல்லியிருந்தார் - சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார் - சகரியா 9:9
அதனால் தான் சீஷர்கள், பிதா குமாரன் இரண்டு பேரும் பயணம் செய்ய கழுதையையும் அதின் குட்டியையும் கொண்டு வந்து, அதின் மேல் தங்கள் வஸ்திரங்களைப் விரித்தார்கள் - 6.சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து, 7.கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள் - மத்தேயு 21:6-7
ஆனால், இயேசு கிறிஸ்து கழுதையின் குட்டியின் மேல் ஏறிப்போனார் என்றால், ஏதற்காக சீஷர்கள் கழுதையையும் கொண்டு வந்தார்கள்? - அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார் - மாற்கு 11:7
நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோனாக
மேலும், குமாரன் பலியாகும் பொழுது, தகப்பனாகிய ஆபிரகாம் தான் தகனபலிக்குக் கட்டைகளை சுமந்து செல்ல வேண்டும் என்று தீர்க்கதரிசனம் சொல்லுகிறது - ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான் - ஆதியாகமம் 22:3
இந்த தீர்க்கதரிசனத்தை தான், பிதாவாகிய தேவன், நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோனாக சிலுவையை சுமந்து நிறைவேற்றினார், இல்லாவிட்டால் திடீரெனெ ஒருவர் வந்து ஏன் சிலுவையை சுமந்துக் கொண்டு செல்ல வேண்டும்? நியாயப்படி பார்த்தால், சிலுவையை சுமக்க முடியாத அளவுக்கு காயம் அடைந்திருந்த கர்த்தருக்கு உதவி செய்ய, ரோமர்கள் அங்கிருந்த யோவானை தானே பயன்படுத்தியிருக்க வேண்டும்? - 26.அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள். 27.திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள். 28.இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் - லூக்கா 23:26-28
பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்
இயேசு கிறிஸ்து, தான் சிலுவைக்குப் போகும் முன்பு, தன்னிமித்தம் பிதா அடைய போகும் வேதனையை, பிரசவத்தினிமித்தம் வேதனைப்படுகிற ஸ்திரீயாக தான் தன்னுடைய சீஷர்களுக்கு சொல்லி கொடுத்தார் - 21.ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள். 22.அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான். 23.அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். 24.இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள். 25.இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன் - யோவான் 16:21-25
சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும்
சிலுவையின் மீட்பை செய்துக் காட்டிய மோசே, இரண்டு சாட்சிப்பலகைகளை அல்லவா உடைத்தார், அது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடு பிதாவும் பாடு பட வேண்டும் என்பதை தானே அறிவுறுத்துகிறது - 15.பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது. 16.அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது. 17.ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்றான். 18.அதற்கு மோசே: அது ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல, அபஜெயதொனியாகிய சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது என்றான். 19.அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு; 20.அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான் - ஆதியாகமம் 32:15-20
மேலும் தீர்க்கதரிசியாகிய யோவேல், தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து ரத்தவெள்ளத்தில்(சந்திரன் இரத்தமாக) இருக்கும் பொழுது, பிதாவும் வேதனை நிறைந்தவராய்(சூரியன் இருளாக) இருக்க வேண்டும் என்று கூறியிருந்ததை பேதுருவும் உறுதிப்படுத்திருந்தார் - 16.தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. 17.கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; 18.என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். 19.அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். 20.கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். 21.அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார் - அப்போஸ்தலர் 2:16-21
சிலுவையண்டையில் இரண்டு பேராக
ஆபிரகாம் தன் மகனை பலி கொடுக்க சென்ற பொழுது, இரண்டு பேர் கூட இருந்தார்கள் என்று வேதாகமத்தில் பார்க்கிறோம், அவர்கள் நிறைவேற போகிற காரியங்களுக்கு ஒரு மாதிரியாகவே இருந்தார்கள் - ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான் - ஆதியாகமம் 22:3
அதன் நிறைவேறுதலாக தான், மகதலேனா மரியாள் கர்த்தரின் சிலுவையண்டையில் நின்ற பொழுது, வெவ்வேறு நாமத்தில் இரண்டு பேர் கூட இருந்ததை சுவிசேஷ புஸ்தகங்களில் பார்க்க முடிகிறது, மத்தேயு அவர்களை "யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாள்" மற்றும் "செபெதேயுவின் குமாரருடைய தாய்" என்று குறிப்பிட்டுள்ளார் - மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் - மத்தேயு 27:56
மாற்கு அவர்களை "சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாள்" மற்றும் "சலோமே" என்று குறிப்பிட்டுள்ளார் - மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும் - மாற்கு 15:40
ஆனால், கர்த்தரால் பொவனெர்கேஸ் என்று பெயரிடப்பட்ட யோவானோ, அவர்களை இன்னும் அறிந்துக் கொண்டவனாய் "அவருடைய தாய்" மற்றும் "தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாள்" என்று எழுதியுள்ளார், அது பரலோகத்தின் தேவனே அன்றி வேறு யாரும் அல்ல - இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் - யோவான் 19:25-30
உயிர்தெழுதலின் சமயத்தில் இரண்டு பேராக
அது போலவே, கர்த்தரின் உயிர்தெழுதலின் சமயத்திலும், கர்த்தரை தரிசிக்க இரண்டு பேர் மகதலேனா மரியாளுக்கு உதவி செய்ததை பார்க்க முடிகிறது, மத்தேயு அவர்களை "மற்ற மரியாள்" மற்றும் "கர்த்தருடைய தூதன்" என்று குறிப்பிட்டுள்ளார் - 1.ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள். 2.அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். 3.அவனுடைய ரூபம் மின்னல் போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது - மத்தேயு 28:1-3
மாற்கு அவர்களை "யாக்கோபின் தாயாகிய மரியாள்" மற்றும் "சலோமே" என்று குறிப்பிட்டுள்ளார் - 1.ஓய்வுநாளானபின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு, 2.வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து, 3.கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள் - மாற்கு 16:1-3
லூக்கா அவர்களை "பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர்" என்று குறிப்பிட்டுள்ளார் - 1.வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள். 2.கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டு, 3.உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், 4.அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே, நின்றார்கள் - லூக்கா 24:1-4
யோவான் அவர்களை "வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார் - 11.மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து, 12.இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள். 13.அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள். 14.இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள் - யோவான் 20:11-14
இப்படி இரண்டு பேர், உயிர்தெழுந்த இயேசு கிறிஸ்துவை தரிசிக்க மகதலேனா மரியாளுக்கு துணையாக இருந்ததை பார்க்க முடிகிறது, ஆனால், கடைசியில் மகதலேனா மரியாள் மாத்திரமே கர்த்தரை தரிசித்தாள் என்றால், மகதலேனா மரியாளுக்கு துணையாக வெவ்வேறு நாமத்தில் வந்தவர் யார்? தன் குமாரனின் நீதியை கண்டு அவரை உயிரோடு எழுப்பினர் தானே - 9.வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார். 10.அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடேகூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில், அவர்களிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள். 11.அவர் உயிரோடிருக்கிறாரென்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை - மாற்கு 16:9-11
அதோ உன் பிதா
இப்படி நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, சிலுவையில் தன் ஜீவனை விடும் கடைசி வினாடிகளில் சொன்ன "அதோ உன் தாய்" என்ற வார்த்தை, தாயினும் மேலான அன்புடைய பரலோகத்தின் பிதாவை நமக்கு அடையாளம் காட்டவே...! இல்லை என்பவர்களுக்கு, "அதோ உன் தாய்" என்பது ஒரு அர்த்தமற்ற வார்த்தையாகவும், மரியாளுக்கும் யோவனுக்கும் சம்பந்தபட்ட விஷயமாகவும், அல்லது மரியாளை தெய்வமாக வணங்கச் செய்கிற காரியமாகவும் தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.