அதோ, உன் தாய்
என் வாயை உவமைகளினால் திறப்பேன்
என் வாயை உவமைகளினால் திறப்பேன்
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, சிலுவையில் தன் ஜீவனை விடும் கடைசி வினாடிகளில் சொன்ன "அதோ உன் தாய்" என்ற வார்த்தை, அன்பின் உச்சத்தின் வார்த்தையாக இருக்கிறது - 26.அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். 27.பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். 28.அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். 29.காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். 30.இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார் - யோவான் 19:26-30
கர்த்தர் "அதோ உன் தாய்" என்று சொன்னது மரியாளுக்கும் யோவனுக்கும் சம்பந்தபட்ட விஷயம் இதில் நமக்கு ஒரு செய்தியும் இல்லை என்று ஒதுங்குவோரும் உண்டு, அப்படியல்ல இயேசு கிறிஸ்து சொன்னதிலேயே இது தான் மிகவும் முக்கியமான விஷயம் என்று சொல்லி மரியாளை தெய்வமாக வணங்குவோரும் உண்டு, இதன் உண்மையனாக அர்த்ததை சற்றே பொறுமையாக ஆராய்ந்து தெளிவான முடிவு எடுப்பது அவசியம், ஏனென்றால் இயேசு கிறிஸ்து வார்த்தைகள் உவமைகள் நிறைந்ததாகவே இருக்கிறது - இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை - மத்தேயு 13:34
உதாரணத்திற்கு, "என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள்" என்றால், கர்த்தர் தேவாலயத்தை குறித்துப் பேசுகிறார் என்று அர்த்தம், "இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்" என்றால், கர்த்தர் தன் சரீரத்தைக் குறித்துப் பேசுகிறார் என்று அர்த்தம், "புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்" என்றால், இயேசு கிறிஸ்து தேவன் அல்ல என்பவர்களிடம் எச்சரிக்கையாயிருங்கள் என்று அர்த்தம், "எலியா வந்தாயிற்று" என்றால், கர்த்தர் யோவான் ஸ்நானனைக் குறித்துப் பேசுகிறார் என்று அர்த்தம், அதை நிதானித்து அறிந்து கொள்ள வேண்டியது சீஷர்களின் கடமையாய் இருக்கிறது - 12.ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். 13.அவர் யோவான் ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அவர்கள் அறிந்துகொண்டார்கள் - மத்தேயு 17:12-13
காரியம் இப்படி இருக்கும் பொழுது, கர்த்தர் "அதோ உன் தாய்" என்று சொன்னது, மரியாளை குறித்தது என்றால், அதை எப்படி ஏற்றுக் கொள்வது? அதற்கு முன்பு, இயேசு கிறிஸ்துவை "குமாரன்" என்று அழைப்பதற்கு பதிலாக "ஒரே பிள்ளை" என்றும், பரலோகத்தின் தேவனை "பிதா" என்று அழைப்பதற்கு பதிலாக "தாய்" என்றும் சாலொமோன் ஞானி அழைத்ததை அறிந்துக் கொள்ள வேண்டும், தேவனிடத்திலிருந்து வந்த இயேசு கிறிஸ்துவை "ஒரே பிள்ளை" என்றால், தேவனை "அவரின் தாய்" என்று சாலொமோன் ஞானி குறிப்பிட்டது சரி தானே! - என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள் - உன்னதப்பாட்டு 6:9
என் தாயார் யார்?
முதலாவது, கர்த்தர் தன்னை உறவினர் என்கிற போர்வையில் ஒருவரும் பின்பற்ற அனுமதிக்கவில்லை என்பதை அறிந்துக் கொள்ளவேண்டும், அதனால் தான் தன்னை சந்திக்க வந்த தன் தாயாரையும் சகோதரரையும், என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று கேட்டார் - 31.அப்பொழுது அவருடைய சகோதரரும், தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள். 32.அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள். 33.அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, 34.தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! 35.தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார் - மாற்கு 3:31-35
இயேசு கிறிஸ்துவின் சகோதரரும், கர்த்தருடைய ஊழியநாட்களில் அவருடன் இணைந்து செயல்பட வில்லை என்பதை வேதாகமத்திலிருந்து அறிந்துக் கொள்ளலாம் - 2.யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது. 3.அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம். 4.பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். 5.அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்.
இவைகளெல்லாம் நமக்காக தான் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது, இயேசு கிறிஸ்துவிடம் வர நாம் நம்மை தகுதி குறைந்தவர்களாகவும் எந்த ஒரு மனிதனையும் விசேஷித்த நபராகவும் என்ன கூடாது என்பதற்காக தான் இவைகளெல்லாம் வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது, காரியம் இப்படியிருக்க, இந்த முழு உலகத்தையும் இரட்சிக்க சிலுவையில் மரணத்தை சந்தித்த தேவன், தன் ஜீவனை விடும் கடைசி வினாடிகளில் "அதோ உன் தாய்" என்று சொல்லி தன் குடும்ப காரியத்தை குறித்து பேசிக்கொண்டிருந்தார் என்றால், அதை எப்படி ஏற்றுக் கொள்வது?
கொல்கொதாவில் இல்லாத இயேசுவின் தாயாகிய மரியாள்
அது மாத்திரம் இல்லாமல், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் போது, அவரின் தாயாகிய மரியாள் அங்கு இல்லை என்பதை வேதாகமம் இவ்வாறு சொல்லுகிறது, எப்படியெனில், கர்த்தரின் சிலுவை மரணத்தின் போது அநேக ஸ்திரீகள் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்று சொல்லி அவர்களில் மூன்று பேரை குறிப்பிட்டுச் சொன்ன மத்தேயு, இயேசுவின் தாயாகிய மரியாளை குறித்து ஒன்றும் சொல்லாததின் காரணம் என்ன? ஒருவேளை இயேசுவின் தாயார் அங்கிருந்திருந்தால் அவர்களின் பெயரை தானே முதல் பெயராக இருந்திருக்கும்? - 54.நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள். 55.மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். 56.அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள் - மத்தேயு 27:54-56
இரண்டாவது சுவிசேஷ புஸ்தகத்தை எழுதிய மாற்கும், கர்த்தரின் சிலுவை மரணத்தின் போது, அங்கிருந்த ஸ்திரீகளில் மூன்று பேரை குறிப்பிட்டுச் சொன்னவர், இயேசுவின் தாயாகிய மரியாளை குறித்து ஒன்றும் சொல்லவில்லை, ஒரு வேளை கர்த்தரின் தாயாகிய மரியாள் அங்கிருந்திருந்தால், அவர்களின் பெயரை தானே முதல் பெயராக எழுதியிருப்பார்? மரியாள் அங்கு இல்லை என்பதை வலியுறுத்தவே தேவ ஆவியானவர் மாற்குவின் மூலமாகவும் இதை எழுதியுள்ளார் - 37.இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். 38.அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. 39.அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக் கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான். 40.சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று ஊழியஞ்செய்துவந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், 41.அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள் - மாற்கு 15:37-41
மூன்றாவது சுவிசேஷ புஸ்தகத்தை எழுதிய லூக்காவும், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தின் போது அங்கிருந்தவர்களை, கர்த்தருக்கு அறிமுகமானவர்கள் மற்றும் கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளும் என்று எழுதியுள்ளார், இதில் "இயேசுவின் தாயாகிய மரியாள்" கர்த்தருக்கு அறிமுகமானவர்களில் ஒருவராகவோ, அல்லது கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளின் ஒருவராகவோ இருந்திருக்க வாய்ப்பே இல்லை - 46.இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். 47.நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். 48.இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். 49.அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் - லூக்கா 23:46-49
அப்படி என்றால், இயேசு கிறிஸ்துவின் சிலுவையினருகே இல்லாத ஒருவருக்கா தெய்வம் என்கிற அடையாளம் சூட்டப்பட்டது? மனிதர்கள் தங்களை தெய்வமாக காட்டிக்கொள்வது தெய்வத்திற்கு ஏதிரான குற்றம் தான், ஆனால் இந்த குற்றச்சாட்டில் இருந்து மரியாள் "நான் தான் சிலுவையண்டையே இல்லையே, எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்று சொல்லி எளிதாக தப்பித்துக் கொள்வார்.
யோவான் கண்ட இயேசுவின் தாய் யார்?
இப்படி, மத்தேயு, மாற்கு, மற்றும் லூக்காவின் புஸ்தகத்தில் சொல்லப்படாத இயேசுவின் தாயாரை, யோவான் மாத்திரம் கண்டுக் கொண்டது எப்படி? இந்த யோவானை குறித்து சில காரியங்களை நாம் அவசியம் அறிந்துக் கொள்ளவேண்டும், இவர் இயேசு கிறிஸ்துவால் பொவனெர்கேஸ் என்று பெயரிடப்பட்டு, ஒரு மேன்மையான ஊழியத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார் - செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார் - மாற்கு 3:17
மேலும், யோவானுக்கு இயேசு கிறிஸ்து கொடுத்த கிருபை, அவருக்கு பிதாவோடு பேசும் பாக்கியத்தையும் கொடுத்தது, அதனால் தான் பிதாவானவர் இடிமுழக்க சத்தத்தில் பதிலளித்த பொழுது, எல்லோரும் இது இடிமுழக்க சத்தம் என்றார்கள், ஆனால் பொவனெர்கேஸ் என்று அழைக்கப்பட்ட யோவானோ அந்த இடிமுழக்க சத்தத்தின் வியாக்கியானத்தை[அர்த்தத்தை] அறிந்துக் கொண்டார், அதன் பொருளை தன்னுடைய சுவிசேஷ புஸ்தகத்தில் எழுதியுள்ளார், மற்ற சீஷர்களுக்கு அது இடிமுழக்க சத்தமாக இருந்ததினால் தான் இந்த சம்பவம் மற்ற சுவிசேஷ புஸ்தகத்தில் சொல்லப்படவில்லை - 27.இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன். 28.பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. 29.அங்கே நின்று கொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள். 30.இயேசு அவர்களை நோக்கி: இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று - யோவான் 12:27-30
இப்படி ஒரு மேலான வரம் பெற்ற யோவான் தான், இயேசு கிறிஸ்துவின் சிலுவையினருகே "அவருடைய தாயாரை" கண்டதாக எழுதியுள்ளார் - இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள் - யோவான் 19:25
மேலும், உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவின் கட்டளையின் படி, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்திற்கு எல்லோரும் காத்திருந்த பொழுது "இயேசுவின் தாயாகிய மரியாள்" என்று சந்தேகத்திற்க்கு இடமில்லாத படி அவரை குறித்து அப்போஸ்தலர் புஸ்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது, ஆனால் யோவான் இயேசுவின் சிலுவையினருகே "அவருடைய தாய்" என்று சொன்னாரே அன்றி, அப்போஸ்தலர் புஸ்தகத்தில் சொல்லப்பட்டது போல "இயேசுவின் தாயாகிய மரியாள்" என்று சொல்லவில்லை - 12.அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். 13.அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பர்த்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள். 14.அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள் - அப்போஸ்தலர் 1:12-14
ஆனால், ஒரு காரியத்தை வேதாகமம் நமக்கு தெரியப்படுத்துகிறது, அது என்னவென்றால் இயேசு கிறிஸ்துவின் சிலுவையினருகே விவரிக்க முடியாத வேதனையுடன் ஒருவர் இருந்திருக்கிறார், அவரை பிதாவோடு பேசும் பாக்கியத்தை பெற்ற யோவான் "கர்த்தரின் தாய்" என்று குறிப்பிட்டிருக்கிறார், கருவின் சுமந்த தாய்க்கு ஒப்பான வேதனையுடன் சிலுவையினருகே இருந்த அவர் யார்?
சிலுவையினருகே பிதா இருக்க வேண்டும்
பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களில் ஒன்று, குமாரனாகிய இயேசு கிறிஸ்து பலியாகும் பொழுது, பிதாவாகிய தேவன் அருகே இருக்க வேண்டும் என்பதை இவ்வாறு கூறுகிறது - ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள் - ஆதியாகமம் 22:6
அது மாத்திரம் இல்லாமல், தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து நம்முடைய இரட்சிப்புக்காக அடிக்கப்படுகிற ஆட்டுக்குட்டியாய் இருக்கும் பொழுது, பிதாவாகிய தேவனும் சத்தமிடாதிருக்கிற ஆட்டை போல சிலுவையண்டையில் இருக்க வேண்டும் என்பதை ஏசாயா தீர்க்கதரிசி இப்படி கூறியிருந்தார் - அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார் - ஏசாயா 53:7
அது நிறைவேற வேண்டிய காரியமாய் இருந்ததினால் தான், இயேசு கிறிஸ்து தன்னுடைய சிலுவை மரண சமயத்தில் பிதா என்னுடனே இருப்பார் என்று சொல்லியிருந்தார் - இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன்தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார் - யோவான் 16:32
பரலோகத்தின் தேவன் தானே இயேசு கிறிஸ்துவின் உண்மையான தாய்
இந்த தீர்க்கதரிசனத்தை, பிதாவாகிய தேவன் சிலுவையண்டையில் நின்று நிறைவேற்றினார், அதாவது தனது ஒரே பிள்ளையாகிய இயேசு கிறிஸ்து அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாய் துடித்துக்கொண்டிருந்த பொழுது, மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போல நின்று கொண்டிருந்தார் - இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள் - யோவான் 19:25
அந்த சமயத்தில், இயேசு கிறிஸ்து தனக்கு அன்பானவனாயிருந்த சீஷனிடம் பரலோகத்தின் தேவனை வெளிப்படுத்தினது தான் "அதோ, உன் தாய்" என்பது, அது அநேகரை பிதாவின் பிள்ளைகளாக மாற்றுவதின் துவக்கமாகவே இருந்தது - 26.அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். 27.பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான் - யோவான் 19:26-27
இப்படி "அதோ, உன் தாய்" என்று இயேசு கிறிஸ்து சொன்னது, விரியன் பாம்பின் குட்டிகளாய் இருந்த நாம் தேவனுடைய பிள்ளைகளாக மாறி இயேசு கிறிஸ்துவின் மார்பில் சாய்ந்திளைப்பாறவேயன்றி, மரியாளின் பிள்ளைகளாக மாறி, சிலைகளையும் மனிதர்களையும் வழிபட்டு, தேவகோபாக்கினையைக் குவித்துக்கொள்வதர்காக அல்ல - நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது - ரோமர் 9:26
கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும்
பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசியான சகரியா, இதை குறித்துச் சொல்லும் பொழுது, பிதாவாகிய தேவன் மற்றும் குமாரனாகிய இயேசு கிறிஸ்து இரண்டு பேருமே சிலுவையை நோக்கி பயணம் செல்ல வேண்டும் என்பதை, உன் ராஜா "கழுதையின்மேலும்" மற்றும் "கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும்" ஏறிவருகிறார் என்று சொல்லியிருந்தார் - சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார் - சகரியா 9:9
அதனால் தான் சீஷர்கள், பிதா குமாரன் இரண்டு பேரும் பயணம் செய்ய கழுதையையும் அதின் குட்டியையும் கொண்டு வந்து, அதின் மேல் தங்கள் வஸ்திரங்களைப் விரித்தார்கள் - 6.சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து, 7.கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள் - மத்தேயு 21:6-7
ஆனால் ஜனங்கள் கண்டது, இயேசு கிறிஸ்து கழுதையின் குட்டியின் மேல் ஏறிப்போனதை மாத்திரமே, ஆனால் இயேசு கிறிஸ்துவோ தன்னோடு வருபவரை நன்றாய் அறிந்திருந்தார், அவர் பரலோகத்தின் தேவனேயன்றி வேறு யாரும் அல்ல - அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார் - மாற்கு 11:7
நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோனாக
மேலும், குமாரன் பலியாகும் பொழுது, தகப்பனாகிய ஆபிரகாம் தான் தகனபலிக்குக் கட்டைகளை சுமந்து செல்ல வேண்டும் என்று தீர்க்கதரிசனம் சொல்லுகிறது - ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான் - ஆதியாகமம் 22:3
இந்த தீர்க்கதரிசனத்தை தான், பிதாவாகிய தேவன், நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோனாக சிலுவையை சுமந்து நிறைவேற்றினார், இல்லாவிட்டால் திடீரெனெ ஒருவர் வந்து ஏன் சிலுவையை சுமந்துக் கொண்டு செல்ல வேண்டும்? நியாயப்படி பார்த்தால், சிலுவையை சுமக்க முடியாத அளவுக்கு காயம் அடைந்திருந்த கர்த்தருக்கு உதவி செய்ய, அங்கிருந்த யோவானை தானே ரோமர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்? - 26.அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள். 27.திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள். 28.இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் - லூக்கா 23:26-28
சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும்
சிலுவையின் மீட்பை செய்துக் காட்டிய மோசே, இரண்டு சாட்சிப்பலகைகளை அல்லவா உடைத்தார், அது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடு பிதாவும் பாடு பட வேண்டும் என்பதை தானே அறிவுறுத்துகிறது - 15.பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது. 16.அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது. 17.ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்றான். 18.அதற்கு மோசே: அது ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல, அபஜெயதொனியாகிய சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது என்றான். 19.அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு; 20.அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான் - ஆதியாகமம் 32:15-20
மேலும் தீர்க்கதரிசியாகிய யோவேல், தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து ரத்தவெள்ளத்தில்(சந்திரன் இரத்தமாக) இருக்கும் பொழுது, பிதாவும் வேதனை நிறைந்தவராய்(சூரியன் இருளாக) இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார், இந்த தீர்க்கதரிசனத்தின் விளக்கத்தை தானே பேதுரு தனது முதல் பிரசங்கத்தில் சொன்னார் - 16.தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. 17.கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; 18.என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள். 19.அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழ பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். 20.கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். 21.அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார் - அப்போஸ்தலர் 2:16-21
பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்
இயேசு கிறிஸ்து, தான் சிலுவைக்குப் போகும் முன்பு, தன்னிமித்தம் பிதா அடைய போகும் வேதனையை, பிரசவத்தினிமித்தம் வேதனைப்படுகிற ஸ்திரீயாக தான் தன்னுடைய சீஷர்களுக்கு சொல்லி கொடுத்தார் - 21.ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள். 22.அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான். 23.அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். 24.இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள். 25.இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன் - யோவான் 16:21-25
மேலும், கர்த்தர் கர்த்தர் தன் சீஷர்களிடம் "பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்" என்று சொல்லியிருந்தார், அதன் நிறைவேறுதலே கர்த்தர் தனக்கு அன்பானவனாயிருந்த சீஷனிடம் "அதோ உன் தாய்" என்று சொன்னது, இப்படி பரலோகத்தின் தேவனே இயேசு கிறிஸ்துவின் தாயாக இருக்கும் பொழுது, மரியாளை இயேசு கிறிஸ்துவின் தாய் என்று சொல்லுவது தேவ தூஷணமாகவும், கர்த்தரை கனவீனமடைய செய்கிற காரியமாகவும் இருக்கிறது - 53.இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்தபின்பு, அவ்விடம் விட்டு, 54.தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது? 55.இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? 56.இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி, 57.அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார். 58.அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை - மத்தேயு 13:53-58
ஸ்திரீயினிடத்திற் பிறந்தவர்
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, யோவான்ஸ்நானனை "ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் பெரியவன்" என்று சொன்னதிலும் ஒரு இரகசியம் இருக்க தான் செய்கிறது, எப்படியெனில் ஸ்திரீகள் என்று பண்மையில் சொல்லும் பொழுது, அது இந்த பூமியில் வாழும் எண்ணற்ற பெண்களை குறிப்பதாய் இருக்கிறது - ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன் - மத்தேயு 11:11
ஆனால் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோ "ஸ்திரீயினிடத்திற் பிறந்தவர்" என்று ஒருமையில் சொல்லப்பட்டிருக்கிறது, அது சகலமும் உண்டாக்கப்படும் முன்பே, தாம் ஒருவராய், ஒரே ஸ்திரீயாய், தன்னுடை ஒரே பேறானவரை பெற்றெடுத்த பரலோகத்தின் தேவனையே குறிப்பதாய் இருந்தது - 4.நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, 5.காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார் - கலாத்தியர் 4:4-5
ஸ்திரீயே, அதோ, உன் மகன்
இப்படி தனது சிலுவையருகே நின்ற பிதாவை, தனக்கு அன்பானவனாயிருந்த சீஷனுக்கு வெளிப்படுத்திய இயேசு கிறிஸ்து, தன் பிதாவை "ஸ்திரீயே" என்று அழைக்க காரணம் என்ன? - 26.அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். 27.பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான் - யோவான் 19:26-27
நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்து இந்த பூமிக்கு வந்த காரணங்களில் ஒன்று, உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்த என்று வேதாகமம் சொல்லுகிறது - என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது - மத்தேயு 13:35 [சங்கீதம் 78:2]
ஏதேன் தோட்டத்தில் தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து, உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன் என்று உவமைகளினால் சொல்லப்பட்ட இந்த காரியத்தில், "சர்ப்பம்" என்பது பிசாசையும், "வித்து" என்பது தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் குறிக்கும் பொழுது, "ஸ்திரீ" என்பது மாத்திரம் எப்படி ஒரு ஸ்திரீயையே குறிக்கும்? அது இயேசு கிறிஸ்துவை நமக்கு தந்த பரலோகத்தின் தேவனை அல்லவா குறிக்கிறது - 14.அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; 15.உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார் - ஆதியாகமம் 3:14-15
நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, மரியாளின் வித்து கிடையாது, மாறாக அவர் பரலோக தேவனின் வித்தாய் இருக்கிறார், அப்படியென்றால் "ஸ்திரீ" என்பது பிதாவை தானே குறிக்க வேண்டும், அந்த பரலோகத்தின் பிதாவே நம்மேல் அன்புகூர்ந்து நம்முடைய இரட்சிப்புக்காக குமாரனிடம் பரிந்து பேசி அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றதையும் யோவான் தன்னுடைய சுவிசேஷ புஸ்தகத்தில் இவ்வாறு எழுதியுள்ளார், அப்பொழுதும் இயேசு கிறிஸ்து தன் பிதாவை "ஸ்திரீயே" என்று அழைத்து உலகத்தோற்றமுதல் இருந்த மறைபொருளை வெளிப்படுத்தினார் - 1.மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். 2.இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். 3.திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். 4.அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார் - யோவான் 2:1-4
இப்படி, உவமைகளினால் உலகத்தோற்றமுதல் இருந்த மறைபொருளை வெளிப்படுத்தின இயேசு கிறிஸ்து, சிலுவையில் தன் ஜீவனை விடும் கடைசி வினாடிகளில் சொன்ன "அதோ உன் தாய்" என்கிற வார்த்தை, நாம் கர்த்தரின் கட்டளையின் படி வாழ்ந்து, அவரின் மார்பில் சாய்கிறவர்களாக மாறி, பரலோகத்தின் பிதாவை தரிசிக்க வேண்டும் என்பதற்காகவே...! இல்லை என்பவர்களுக்கு, "அதோ உன் தாய்" என்பது ஒரு அர்த்தமற்ற வார்த்தையாகவும், மரியாளுக்கும் யோவனுக்கும் சம்பந்தபட்ட விஷயமாகவும், அல்லது மரியாளை தெய்வமாக வணங்கச் செய்கிற காரியமாகவும் தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை - 21.அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. 22.அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, 23.அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள் - ரோமர் 1:21-23