இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தை
இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தை
முந்தைய பாகம்: நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால்
மத்தேயு சுவிஷேச புஸ்தகத்தில், கர்த்தர் குஷ்டரோகியை "தொட்டு" சுகப்படுத்தின அற்புதமும், நூற்றுக்கு அதிபதியின் வீட்டுக்கு போகாமலேயே, அவனுடைய வேலைக்காரனை சுகப்படுத்தின அற்புதமும் அடுத்தடுத்தாக எழுதப்பட்டுள்ளது, இதற்கு காரணம், இந்த இரண்டு அற்புதங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது, அதிலிருந்து நாம் பல தேவ ரகசியங்களை அறிந்து கொள்ளலாம்.
கர்த்தர் அந்த குஷ்டரோகியை தொட்டு சுகப்படுத்தினது, எந்த ஒரு மனிதனாலும் செய்யக்கூடாத மிகப்பெரிய அற்புதம், இவ்வளவு பெரிய அற்புதத்தை செய்த கர்த்தர், கடைசியாக சுகம் பெற்றவனிடம் "இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு" என்று சொன்னார் - 1.அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள். 2.அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். 3.இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான். 4.இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார் - மத்தேயு 8:1-4
எந்த ஒரு தாயும், தன் பிள்ளைகளுக்கு செய்யும் காரியத்தை அன்போடு தான் செய்வாள், அதற்கு பிரதிபலன் எதிர்பார்க்க மாட்டாள், தன் பிள்ளை தான் செய்ததை ஊரெல்லாம் சொல்ல வேண்டும் என்று விரும்பவும் மாட்டாள், அதனால் தான், குஷ்டரோகியை சுகப்படுத்தின கர்த்தர், "இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு" என்று சொன்னார்.
விசுவாசத்தை கண்டு ஆச்சரியப்பட்டு
ஆனால், இந்த குஷ்டரோகியின் சாட்சியை கேள்விப்பட்டவர்களுக்கு, கர்த்தர் தொட்டால் தான் அற்புதம் நடக்கும் என்கிற எண்ணம் உண்டாகி இருக்கும், அப்படித்தான் நாமும் இருக்கிறோம், ஒரு சாட்சியை கேட்கும் போது, அந்த அற்புதத்தை போலவே என் வாழ்க்கையிலும் அற்புதம் செய்யும் என்று சொல்லி கர்த்தரிடம் ஜெபிக்கிறோம், ஆனால் இங்கு நூற்றுக்கு அதிபதி நமக்கு ஒரு பாடத்தை சொல்லிக் கொடுக்கிறார், அது என்னவென்றால், அவன் கர்த்தரிடம், நீங்க அந்த குஷ்டரோகியை தொட்டு சுகப்படுத்தினது உண்மைதான், ஆனால் நீங்க சர்வ வல்லமையுள்ள தேவனல்லவா, உம்மால் தொடாமலும் சுகப்படுத்த முடியும் என்று வேண்டுதல் செய்தார் - 5.இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து: 6.ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான். 7.அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார். 8.நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். 9.நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்றான். 10.இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின் செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 11.அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள். 12.ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 13.பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான் - மத்தேயு 8:5-13
"நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல" என்று சொல்லி நூற்றுக்கு அதிபதி தன்னை தாழ்த்தினது, அவன் தேவனுடைய பிள்ளையாக மாறிவிட்டதின் அடையாளமாகவும், "ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும்" என்று அவன் சொன்ன விசுவாச அறிக்கை, ஒரு பிள்ளை தன் தாயை முதல் முறையாக "அம்மா" என்று அழைப்பதற்கு ஒப்பாகவும் இருந்தது.
ஒரு தாயானவள், தன் பிள்ளைக்கு பாலூட்டினதை மற்றவர்களுக்கு சொல்ல விரும்ப மாட்டாள், அதே சமயத்தில் பிள்ளை தன்னை முதல் முறையாக "அம்மா" என்று அழைக்கும் பொழுது மனம் நெகிழ்ந்து போவாள், அதை மற்றவர்களிடம் சொல்லி சந்தோஷப்படுவாள், அது போலவே கர்த்தர் நூற்றுக்கு அதிபதியின் விசுவாசத்தை எல்லோரிடமும் சொல்லி "இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை" என்று ஆச்சரியப்பட்டார்.
அவிசுவாசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டு
புறஜாதியானாகிய நூற்றுக்கு அதிபதி, இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து தேவனுடைய பிள்ளையாக[ராஜ்யத்தின் புத்திராக] மாற, தங்களை ராஜ்யத்தின் புத்திரர் என்று எண்ணிக் கொண்டிருந்த இஸ்ரவேலரோ, இயேசு கிறிஸ்துவை செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து தலைகீழாய்த் தள்ளி கொலை செய்ய பார்த்தார்கள் - 28.ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு, 29.எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டுபோனார்கள். 30.அவரோ அவர்கள் நடுவினின்று கடந்துபோய்விட்டார் - லூக்கா 4:28-29
நாசரேத்துரார் கர்த்தருக்கு செய்தது சாதாரண விஷயம் அல்ல, அவர்கள் தேவனையே கொலை செய்ய பார்த்தவர்கள், இந்த நாசரேத்துரார் கர்த்தருக்கு செய்ததை மார்க் சுவிசேஷம் புஸ்தகம் ஒரே வார்த்தையில் "அவிசுவாசம்" என்று சொல்லி முடித்து விட்டது, ஏனென்றால் நம்மை இரட்சிக்க இந்த பூமிக்கு வந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்காமல் இருப்பது, தேவனின் பார்வையில், அவர் குமாரனை செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து தலைகீழாய்த் தள்ளிவிடுவதற்கு சமானமாய் இருக்கிறதாம் - 4.இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார். 5.அங்கே அவர் சில நோயாளிகள்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, வேறொரு அற்புதமும் செய்யக்கூடாமல், 6.அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டு; கிராமங்களிலே சுற்றித்திரிந்து, உபதேசம்பண்ணினார் - மாற்கு 6:4-6
இப்படியாக, இயேசு கிறிஸ்துவை விசுவாசியாதவர்களை, கர்த்தரை கொலை செய்ய முயற்சித்தவர்கள் என்று சொன்ன வேதாகமம், யோவான் சுவிசேஷம் புஸ்தகத்தில், இயேசு கிறிஸ்துவை விசுவாசியாதவர்களை, அவரை காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்தின் கூட்டம் என்று சொல்லுகிறது, அதாவது, இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவர்கள், தேவனின் பார்வையில், அவர் குமாரனை சிலுவையில் அறைய காட்டிக் கொடுக்கிறார்களாகவும், கொலை செய்ய முயற்சிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள் - 59.கப்பர்நகூமிலுள்ள ஜெபஆலயத்திலே அவர் உபதேசிக்கையில் இவைகளைச் சொன்னார். 60.அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள். 61.சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ? 62.மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்? 63.ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. 64.ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார்; விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்: 65.ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார் - யோவான் 6:48-58
அடுத்த பாகம்: சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்